
ஆராய்ச்சிக்குரிய கேள்வி என்னவென்றால், பாபா தம்மைப் பூட்டியின் வாடாவில் பெரும் புள்ளிகள் கவனித்துக் கொள்வார் என்று கூறினார். அது எவ்வளவு தூரம் உண்மையாயிற்று ?
பணத்தை அளவுகோலாகக் கொண்டு, பாபா பெரும்புள்ளி என்று கூறியிருக்க முடியாது. ஏனெனில், முற்றிலும் துறவியாக விளங்கிய அவர், பணத்தைத் துரும்பாகவே மதித்தார். அப்படியே அவர் கூறியதாகக் கொண்டாலும், பூட்டி எந்த விதத்திலும் 'சிறிய' மனிதரல்லர். இந்திய நாணயத்துக்கு அதிக மதிப்பிருந்த அந்த நாட்களில், சில இலட்சங்கள் மதிப்புள்ள கட்டிடம் என்பது அற்பமான விஷயமல்ல. மேலும் பணத்தை மட்டும் பொறுத்ததல்ல அதன் பெருமை. முரளீதரனுக்குக் கோவிலாக இருக்கவேண்டிய மாளிகை, சத்குரு அவுலியா சாயிநாதரின் சமாதி மந்திராக ஆயிற்று. இதைக் காட்டிலும் ஒரு சத்குருவுக்கு மேலான மரியாதை வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும், பூட்டியின் பணமும், அவரது தீர்மானமும் மட்டுமே இந்த மந்திரைக் கட்டும் நல்லதிருஷ்டத்தை அவருக்கு நல்கியது என்று கூற முடியாது. அவர் முதன்முதலில் ஷேகாமைச் சேர்ந்த ஸ்ரீ கஜானன் மகாராஜைத் தரிசித்தபோது, அவர் சாயிபாபாவுக்கு சேவை செய்யும்படி பூட்டியிடம் கூறினார். அதன்படி பூட்டியும் அவரது மனைவியும் தம் குழந்தைகளை எல்லாம் நாக்பூரில் விட்டுவிட்டுப் பாபாவின் சேவையில் ஈடுபட்டு, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஷீரடியில் தங்கினர். இந்தக்காலத்தில், பாபா கூறினாலன்றி அவர்கள் துவாரகாமாயியைவிட்டு வெளியேறியதே இல்லை. பாபா எதை கொடுத்தாரோ, அதை மட்டுமே உண்டனர். இந்த பக்தியே அவருக்கு மேற்கூறிய நற்பேற்றை அருளியது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil