Tuesday, May 31, 2016

பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது


பாபாவை நன்கு புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணரவேண்டும். பாபா எங்கே போய்விட்டார் ? பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! தாமோதர் ராசனேயிடம் , " என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை. என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்" என்றும் கூறிய நம் தேவனுக்கு வாரிசு என்றோ, அவருடைய மறு அவதாரமென்றோ யாராவது கூறிக் கொள்வது எங்ஙனம் தகும்?  தம்முடைய வாரிசு என்று பாபா எவரையும் குறிப்பிடவில்லை.
" பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதைபோன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆபாந்தராத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 30, 2016

வேறு கதி எதுவுமில்லை" யாருக்கு அனுக்ரஹம் அளிக்க விரும்புகிறானோ, அவனுடைய எல்லா உடைமைகளையும் கைபற்றிவிடுகிறேன் " என்பதே பாபாவின் கொள்கை.

இதைப் பலரால் புரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில் வைக்கப்பட்ட சாதகன் படிப்படியாக பாபாவைத் தவிர, தனக்கு வேறு கதி எதுவுமில்லை என்பதை உணர்ந்து, திடமான நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெற்றுவிடுகிறான். இகவுலகில் ஒன்றுமே இல்லை என்ற சூன்ய நிலையே பரலோக சாதனத்திற்கு, அதாவது இறைவனைக் கண்டறிவதற்கு முதற்படி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 29, 2016

பயப்படாதே


நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே. எங்கெல்லாம் என்னை நினைக்கிறயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 28, 2016

குருபக்தி
" இந்த  ஜனங்கள் புத்தகங்களில் பிரம்மா அல்லது கடவுளைக் காண விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிட்டுவது பிரமா அல்லது மோகமே! குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும்  தேவையில்லை."- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி  விடுகிறதல்லவா? ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 27, 2016

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்


 "இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்".
                                                                                  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா உயிருடன் இருந்த காலத்தில் ஒருவர் பாபா இறந்துவிட்டால் அத்துடன் அவர் ஆற்றிவரும் பணியும் அவரது செல்வாக்கும் மறைந்து விடும் என்று அஞ்சியபோது, " என்னுடைய சமாதியிலிருந்து தடிகள் கொண்டு அடிப்பேன்" ( மராத்தியில் ஹூன் தண்டே ஹநீன்), அதாவது அவருடைய உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா பதில் கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 26, 2016

ஒரு சாயி பக்தன் செய்யவேண்டியது யாதுஒரு சாயி பக்தன், சாதகன் செய்யவேண்டியது யாது ?

( 1 ) தூய்மையாக, சுத்தமாக, எளிமையாக, பண்புடன் நடந்து பாபாவின் கிருபை பெற தகுதியுள்ளவனாக செய்து கொள்ளுதல்;
( 2 ) நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் பாபாவை அண்டுதல்; இது படிப்படியாக உயரிய பல அனுபவங்கள் கிட்டச் செய்து, இறுதியாக மனித வாழ்வின் இலட்சியத்தை அடைந்து விடச் செய்யும். ஒரு சமயத்தில் ' ஒரு அடி ' என்பதே சரியான நோக்கு. இறுதி இலக்கைப் பற்றிய சிக்கலான பரதத்துவ வேதாந்த சித்தாந்தங்கள் பற்றி முடிவு செய்ய பாடுபடவேண்டியதில்லை. பாபா, தன் பக்தனை தூக்கி நிறுத்தி, உயரிய சக்திகள், பரந்த கோணம், சத்திய சோதனையில் முன்னேற்றம் யாவற்றையும் அளித்து விடுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil 

Wednesday, May 25, 2016

அமைதியாக அமர்ந்திரு


" நீ என் அருகில் அமைதியாக அமர்ந்திரு. ஆகவேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று பாபா பக்தர்களிடம் கூறுவது உண்டு. அதாவது ரகசியமாகவும், மறைமுகமாகவும் பாபா பக்தனுக்கு தேவையானதை செய்துவிடுவார். இருப்பினும் அவரிடம் நம்பிக்கை வைத்தல் மிக அவசியம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 24, 2016

சாயி என்னும் சொல்லின் பொருள் என்னசாயி என்னும் சொல்லின் பொருள் என்ன ?

பதில் ; நம் இந்திய நாட்டு மொழிகள் பலவற்றிலும் இச்சொல் பாதுகாவலர், ஆன்மீககுரு மற்றும் 'தந்தை' என்னும் பொருளில் வழங்கி வருகிறது. உங்கள் தந்தையை வணங்குவது போல சாயியை வணங்குங்கள். சாயியின் கருணை பல்வேறு வழிகளில் வெளிப்படுவதைத் தெளிவாகக் காணலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 23, 2016

என் பக்தன்

    

என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல், இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன்.- ஷிர்டி  ஸ்ரீ சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 22, 2016

இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்.


எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார். பாபா-வின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்கமுடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.      


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 21, 2016

இறையனுபவம்


இறைவனை நினை; நானெனும் மமதையை கொன்று விடு. காமத்தை வெல்லாத ஒருவனால் இறைவனைக் காண முடியாது; அதாவது இறையனுபவம் பெற முடியாது .- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 20, 2016

ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்

சிவனையோ, ராமனையோ பூஜிப்பதை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு கேள்வி எழுமானால், அதற்கு அவசியமில்லை என்பதே பதில். ராமனிடமிருந்தோ, தனது வேறு இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ, பக்தர்கள் நலன்களை கவனிக்க அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால், சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம், குலம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை. தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு வேண்டிய அளவு பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி அவருடைய சக்திகள் வேண்டும் பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில், பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார். பாபா அவரது விசுவாசங்களில்  குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பது சேருகிறது. அத்தகைய விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன, அத்துடன் அவரது சிந்தனையும்  மாறுகிறது. பாபாவைப் பற்றி மேலும் மேலும், மிக்க உயர்வாக எண்ணுகிறார். கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள், உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 19, 2016

பாபா எங்கும் உள்ளார்


1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாபுஜி சாஸ்திரி என்பவர் ஒருவர், கங்கை நீரை கொண்டுவந்து பாபாவின் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்து, பிறகு தாஸ நவமிக்காக ஸஜ்ஜன்காட்டுக்கு போக அனுமதி கேட்டார். பாபா
' நான் இங்கிருக்கிறேன். அங்கும் கூட இருக்கிறேன் ' என்றார். பின்னர் பாபுஜி ஸஜ்ஜன்காடுக்குச் சென்றார். புனித தாஸ நவமியன்று விடிகாலை 5 மணிக்கு பாபுஜியின் முன் பாபா நேரில் தோன்றினார். பாபா எங்கும் உள்ளார். ஒரு குரு, தமது பக்தர்களின் ஆத்மீக, லௌகீக சம்பந்தமான நலன்களைக் காப்பதற்கு, தமது குரு தமக்கு எந்தவிதமான வழிகளைக் கையாண்டாரோ அவற்றையே தாமும் மேற்கொள்வது வழக்கம். சாயிபாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு, பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாயிபாபாவும் அம்முறையையே தம் பக்தர்களிடம் கடைபிடித்தார். அவர் கூறியுள்ளார்: " எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 18, 2016

தரிசனம் தருவார்


நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாபா தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய
மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.-அத் 43.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 17, 2016

அஷ்டமஹா சித்தி

பாபா அணிமா சித்தியை பெற்றவர். கண்ணில் விழும் தூசியளவிளுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய  ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமஹா சித்திகளும் நவநிதிகளும் அவருடைய சந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 16, 2016

வியாதி

பாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. பாபாவின் கிருபையை பெற்றவனுக்கு  சகல வியாதிகளும் போய் அவன் செய்த பாவங்களெல்லாம் நசிந்துவிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 15, 2016

நாமஜெபம்ஓம் சாயி , ஸ்ரீ சாயி , ஜெய ஜெய சாயி 

பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவர்  நானாசாஹேப் சாந்தோர்கர். நானாவின் அறிவுறுத்தலால், நானாவின் மனைவி தொடர்ந்து சாயி நாமஜபம் செய்துவந்தார். ஒருமுறை அவர் பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்.அப்பொழுது பாபா, " ஓ பாயி , நீ தொடர்ந்து கோதுமையை அரைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், அதற்க்கு பலனேதுமில்லை" என்றார். பாபா இங்கே குறிப்பிட்டது இயந்தரத்தனமாக நாமஜபம் செய்வதை பற்றியே. சாயி நாமஜெபம் செய்யும்பொழுது மிகவும் நம்பிக்கையுடனும், அடிமனத்தின் ஆழத்திலிருந்து மிகந்த அன்புடனும் ஸ்மரணை செய்யவேண்டும். இயந்தரத்தனமாக செய்யப்படும் நாமஜபத்திற்கு பலன் குறைவாகவே இருக்கும்.

"எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 14, 2016

அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும்கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர். அவரைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும். கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார். அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 12, 2016

நான் தான் செய்கிறேன்
எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 11, 2016

புறச்சம்பிரதாயங்களை லட்சியம் செய்வதில்லை.


அன்புடனும் பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் பாபா ஏற்றுக்கொள்வார். ஆனால் அதுவே பெருமையுடனும்,இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால், ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார். வெறும் புறச் சம்பிரதாயங்களை, அவர் பெருமளவு லட்சியம் செய்வதில்லை. அடக்கவொடுக்கத்துடனும், பணிவான உணர்வுடனும், ஒன்று சமர்பிக்கப்படுமானால் அதை அவர் வரவேற்று, பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 10, 2016

இதயப்பூர்வமான சரணாகதிபாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடைதலே துயரங்களின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்? சிந்தனையும் பாபாவை பற்றியதாக இருக்க வேண்டும். அப்போது சுகம் உண்டாகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 9, 2016

நீ எங்கிருந்தாலும் உன்னுடனேயே நான் இருக்கிறேன்ஒரு குரு பெளர்ணமி தினம். என் குருவான உபாசினி மகராஜ் ஷிர்டியை விட்டு கரக்பூருக்கு போவதற்கு முன் அது. சாயி பாபா என்னிடம் பூஜை சாமான்களையும், நைவேத்தியத்தையும் எடுத்துச் சென்று மகராஜுக்கு பூஜை செய்யும் படி பணித்தார். பாபாவின் ஆணை எனக் கூறி மகராஜை நான் பூஜை செய்யத் தொடங்கினேன். மகராஜ் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அந்த தினத்திற்கு பிறகு நான் மகராஜை ஒரு போதும் பூஜை செய்யவில்லை. அவரிடம் என்னகுள்ளது ஒரு குருபந்துவினிடம் இருக்க வேண்டிய எண்ணமே. ஷிர்டி மக்கள் பலரைப் போல் நான் அவரிடம் வெறுப்பு காட்டவில்லை. சாயிபாபா அடிக்கடி சொல்வார்; "நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக்கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்படவேண்டும்."  ஆனால் உபாசினி மகராஜிடம் என் மனோபாவத்தை அவரும் மற்றவர்களும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பஞ்சகன்யா நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களில் உதவும் நோக்கத்துடன் நான் சகோரிக்குச் சென்றேன். ஆனால், என் எண்ணம் அவருக்கு எதிராக இருக்குமெனக் கருதி, மனம் விட்டு தனியாக அவரிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. நான் திருபினேன்.

என்னிடமும் என் குடும்பத்திடமும் சாயிபாபா காட்டிய பிரிவு 1918-ல்  அவர் இறப்பதற்கு முன் மட்டுமின்றி பின்னரும் வெளியாயிற்று.

1918-ம் ஆண்டு தசராவுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றி எண்ணியிருந்தார். "பாய்!(அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப் பட வேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" என அவர் என்னிடம் உறுதி அளித்தார். (இதைச் சொல்லும்போது அந்த அம்மையாரின் கண்களில் நீர் பெருகியது) - சந்திர பாய். ஷிர்டி சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.     


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 8, 2016

அமைதியாக அமர்ந்திருஅமைதியாக அமர்ந்திரு. நான் உனக்கு தேவையானதை செய்வேன். நான் உன்னைக் குறிக்கோளை அடையச் செய்வேன். - ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 7, 2016

நானேதான் என்னிடம் வரவழைக்கிறேன்


ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா "ஒருபோதும் அப்படி சொல்லாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்" என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.                

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 6, 2016

மாறுவேஷங்களில் தோன்றுகிறார்

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்! தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே. அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார். அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார். அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 5, 2016

அற்புதங்களை பெறும் வழிசாயி பாபாவின் லீலைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அவரது பக்தர்களாக நீடிக்கிறார்கள். மாறாத நம்பிக்கை, நீடித்த பொறுமை, உண்மையான அன்பு, பணிவான வேண்டுதல் இவையே பாபாவிடமிருந்து அற்புதங்களை பெறும் வழியாகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 4, 2016

அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்


என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன். - ஸ்ரீ ஷீரடி சாயிபாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 3, 2016

சிறிதளவும் அஞ்சாதீர்


நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 2, 2016

உபநியாசம் தேவையில்லைஎனக்கு ஞானத்தைப்பற்றிய உபநியாசம் தேவையில்லை. என்னுடைய இமாலய அறியாமையை அழித்து என்னை கிருபையுடன் நோக்குங்கள். அந்தக் கடைக்கண் பார்வையில்தான் என்னுடைய சுகமும் பூரணமான திருப்தியும் இருக்கின்றன. - நானா சந்தோர்கர், ( ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 1, 2016

ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை

"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத் 
 தவிர  வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது
 மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்."
                                                                                         -ஷிர்டி சாய்பாபா.

 

பாபாவின் லீலைகள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை. யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன! வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...