Thursday, November 9, 2017

எல்லா ஜீவன்களினுள்ளும் என்னைக் காண்
" எல்லா ஜீவன்களினுள்ளும் என்னைக் காண் " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா உடலுடன் வாழ்ந்த போது தமது பக்தர்களுக்கு தாமே அந்த ஈஸ்வரன், எல்லோரினுள்ளும் அந்தர்யாமியாக இருப்பவர் என பிரகடனப்படுத்தியுளார்.
ஆகவே, அவர் தமது மிகச் சிறந்த பக்தர்கள் முதலில் அவரை தங்கள் இஷ்ட தேவதை அல்லது கடவுளாகக் காணவேண்டுமென்றும் பின்னர் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவனுள்ளும்  தாம் இருப்பதை உணர வேண்டுமென்றும் விரும்பினார்.
தெய்வீகமும் காணற்கரிய சக்தியும் கொண்ட அவதாரமான பாபா பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் தோற்றமளிக்கிறார்; பாபாவைப் பற்றி முழுவதுமாக புரிந்துகொள்ள ஒருவன் ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும்  பாபா இருப்பதை உணர வேண்டும். 

தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவராசியினுள்ளும் சாயிநாதர் இருப்பதை மானசீகமாக உணர்வது என்ற வழிமுறையாக கடைப்பிடிக்க வேண்டுமென பல பக்தர்கள் பாபாவால் போதிக்கப்பட்டனர். உதாரணமாக, ஒரு வாலிபன் ஓரிரவு வெளியே சென்றபோது ஒரு மரத்தடியில் ஒரு பேயைப் பார்த்துவிட்டு, அவசரம் அவசரமாகத் திரும்பி வந்துவிட்டான். மறுநாள் பாபா அவனை அவன் பார்த்தது எதை எனக் கேட்டார். ' நான் ஒரு பேயைப் பார்த்தித்தேன் ' என அவன் பதிலளித்தான். ' இல்லை, அது நானே' என்றார் பாபா. மறுபடியும் அந்த வாலிபன் அவன் பார்த்தது ஒரு பேயைத் தான் எனக் கூறினான். பாபா, 'நீ உன் தாயிடம் சென்று கேள்' என அவனைப் பணித்தார். அவன் அவனுடைய தாயிடம் சென்றான். பாபா (இறைவனே ஆனதால்) ஒவ்வொரு ஜந்துவினுள்ளும், கெட்ட ஆவி, நல்ல ஆவி எதுவாயினும் சரி உள்ளார் என்றும் அதனால் அவர் எல்லாவற்றிலுள்ளும் இருப்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவன் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டுமென்பது பாபாவின் நோக்கம் என்று கூறினால். 

இதைப் போலவே, 1918-ம் ஆண்டு பாபா தமது உடலைத் திறந்தபோது, லட்சுமி, 'பாபா, எனக்கு தரிசனம் அளிக்கமாட்டீர்களா?' என பிரார்த்தனை செய்தால், பிறகு இருட்டில் மசூதியிலிருந்து வெளியே வந்தாள். வழியில் ஒரு பாம்பு, உடனே அவள், 'பாபா, தாங்கள் இந்த பாம்பின் உருவில் வந்தால் நான் என்ன செய்வது?' எனக் கேட்டாள். பயங்கரமான பாம்பைப் பார்த்த போது கூட அவளால் அந்த பாம்பின் வடிவில் பாபாவைக் கண்டு பிரார்த்தனை செய்ய செய்ய முடிந்தது. இதையே தனது பக்தர்களுக்கு பாபா போதித்தார்.

மேலும், தனது பக்தர் காசிநாத்திற்கு (உபாஸனி மஹராஜ்) எல்லா ஜீவன்களிலும் தாம் இருப்பதை உணர்த்திய சம்பவத்தை பார்ப்போம்;

ஒரு தினம் பாபாவின் பக்தரான காசிநாதர் ( உபாஸனி மஹராஜ் ) கந்தோபா ஆலயத்தில் ஆகாரம் தயார் செய்து கொண்டிருந்தபோது ஒரு கருப்பு நாய் அதை ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. தயார் செய்த ஆகாரத்தை பாபாவுக்கு சமர்ப்பித்து விட்டுப் பின்னர் பிரசாதமாக எடுத்துக் கொள்ள, காசிநாதர் மசூதியை நோக்கிச் செல்லலானார்.

அப்போது அந்நாய் அவருடன் சற்று தூரம் பின் தொடர்ந்து வந்து பின் மறைந்தது. பகவானுக்கு நிவேதனம் செய்யும் முன்பு ஒரு ஈன ஜந்துவான நாய்க்கு ஆகாரமளிப்பது சாஸ்திர விரோதம் என்று அவர் கருதினார்.

பட்டப் பகல் வெய்யிலில் மசூதியை அடைந்த அவரை,

பாபா ; எதற்காக இங்கு வந்தாய் ?

காசிநாதர் ; தங்களுக்கு நைவேத்தியம் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

பாபா : நீ என் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டும்? நான் அங்கேயேதானே இருந்தேன் !

காசிநாதர் ; அங்கு ஒரு கருப்பு நாயைத் தவிர, வேறொருவரையும் பார்க்கவில்லையே ...

பாபா : அந்த கருப்பு நாய் நானே. நீ அங்கு உணவு அளிக்க மறுத்தமையால், இங்கும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மனம் நொந்து திரும்பிய காசிநாதர் மறுதினம் அத்தவறு நடக்காமலிருக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார். மறுதினம் ஆகாரம் தயார் செய்து கொண்டிருக்கும் போதே அந்த நாய் எங்காவது தென்படுகிறதாவென்று பார்த்தார். காணவில்லை. ஆனால் நோய்வாய்ப்பட்டு மெலிந்த சூத்திரன் ஒருவன் அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டு அவர் ஆகாரம் தயார் செய்வதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

வைதீக பிராம்மணரான அவர் தாம் சமைக்கும் ஆகாரத்தை சூத்திரன் ஒருவன் பார்ப்பதால் திருஷ்டி தோஷம் வந்துவிடும் எனக் கருதி அவனை அங்கிருந்து விரட்டவே, அவன் போய்விட்டான்.

ஆகாரத்தை எடுத்துக் கொண்டு பாபாவின் முன் சென்றார் காசிநாதர்....

பாபா ( மிகுந்த கோபத்துடன் ) :  நேற்றும் எனக்கு உணவளிக்கவில்லை. இன்றும் விரட்டிவிட்டாய் .

காசிநாதர் : ஆ ! தாங்களா அந்த நோய்வாய்ப்பட்ட சூத்திரன் ?

பாபா : ஆம் ! எல்லாவற்றினுள்ளும், அவற்றைக் கடந்தும் வியாபித்து நிற்கிறேன்.

" இங்கு நீங்கள் பார்க்கும்  மூன்று முழ சரீரம் தான் சாயி  என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.-    ஸ்ரீ ஷீரடி சாய்பாபா "
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...