
நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாவின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்' என்றே சொல்லிக்கொண்டார்.
அவதார புருஷராக இருந்தபோதிலும், உலக நியமங்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார். வர்ணாசிரம தர்மத்தின்படி தூய வாழ்க்கை நடத்தும்படி பக்தர்களுக்கு போதித்தார்.
அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருள்களனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.
அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாகக் கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.
"நான் இறைவன்" என்று அவர் ஒருபொழுதும் சொன்னதில்லை. "நான் இறைவனுடைய அடிமை" என்றும், "நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை" என்றுமே சொல்லிக்கொண்டார். 'அல்லாமாலிக், அல்லா மாலிக்' (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்துகொண் டிருந்தார்.
எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடைபோடமுடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
ஜடமான ஜீவர்களைக் கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil