
பாபா ! தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன்.
ஈடுஇணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய உம்முடைய பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கதி ஏதும் எங்களுக்கு இல்லை.
தாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னே ! அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோ !
ஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம் ! அதை எவ்விதம் வர்ணிப்பேன் ! மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ? உங்களுடைய பாதத்தின் கட்டைவிரலைக் கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோ !
தேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தைப் பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.
அதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.
இடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்கால் கட்டைவிரலைக் கவ்விக்கொண் டிருக்கிறது. கட்டைவிரலின் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல நகம் பளபளக்கிறது.
''உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு ஸகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய கால் கட்டைவிரலின்மீது தியானம் செய். இது பக்தியின் எளிய ஸாதனை" என்று பாபா குறிப்பால் உணர்த்துவது போல் தம்முடைய கால்கட்டைவிரலைக் கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil