Thursday, August 30, 2018

மனம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவடைகிறது.

பாபாவின் உன்னதமான குணங்களைத் திரும்பத் திரும்ப விவரிப்பதாலும் மனத்தைக் கவரும் அவருடைய காதைகளை ஸத்ஸங்கத்துடன் கலந்துரையாடுவதாலும் மனம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவடைகிறது. 

காதால் கேட்டாலே புண்ணியம் அளிக்கக்கூடிய க­லியாண குணங்களைப் பாடுவதாலும் அவருடைய (பாபாவின்) லீலைகளையும் கதைகளையும் கேட்பதாலும் இறைவன் பூரிதம் அடைகிறான். "முத்தோஷங்கள்" நமக்கு விளைவிக்கும் துயரங்களும் துன்பங்களும் நிவாரணம் ஆகின்றன. 

ஆகவே, "முத்தோஷங்களால்" அவதிப்படுபவர்களும் சுயமுயற்சியால் மேன்மையுற வேண்டும் என்ற ஆவலால் உந்தப்படுபவர்களும் ஆன்மீக சிந்தனை உடையவர்களும் முனிவர்களின் (பாபாவின்) பாதங்களை சரணடைகிறார்கள்; சுய அனுபவத்தால் மேன்மையுறுகிறார்கள். மூன்று (முத்தோஷங்கள்)தோஷங்கள் அல்லது மூன்று தாபங்கள் பின்வருமாறு. 

1. "ஆத்யாத்மிகம்" - தேஹத்திலுண்டாகும் பிணி. 

2. "ஆதிதைவிகம்" - மழை, காற்று, இடி போன்ற இயற்கை சக்திகளால் உண்டாகும் துன்பங்கள். 

3. "ஆதிபௌதிகம்" - தேள், பாம்பு, பு­லி, கரடி முத­லிய பிராணிகளால் உண்டாகும் துன்பம்

மகான்  யாக்கோபு சித்தர் ( ராமதேவ சித்தர் )


Picture

  சித்தர்கள் பற்றிச் சிந்திக்கும்போது பாமரர்களுக்குக்கூட சில கேள்விகள் எழும். அதில் பிரதானமானது_சித்தர்கள், கடவுளர்களை நம்புகின்றவர்களா, இல்லையா? என்பதாகும். மதச் சின்னங்கள் இல்லாத அவர்களது தோற்றம், ஆடை அணிகளில் கூட அவர்களுக்கு இல்லாத அக்கறை, புதர்போல தாடி மீசை, கசக்கி உடுக்காத அழுக்கு ஆடை, அதுகூட இல்லாத நிர்வாணத் தோற்றம் என்று சிலர் திரிவதைப் பார்க்கும் போது, அவர்களைப் புரிந்துகொள்ள சிரமமாகத்தான் இருக்கும். நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன் 
‘நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன்’ _என்பதுபோல்தான் சித்தர்கள் பலருடைய தோற்றம், பேச்சு, வாழ்க்கை முறை உள்ளது. சமுதாயத்தைக் கடைத்தேற்ற வேண்டும், மனித சமூகம் உய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்ட சித்தர்களை விட, சமுதாய எண்ணமின்றி, எல்லாமே மாயை... இதிலிருந்து விடுபட என்ன வழி? என்று சிந்தித்து அதிலேயே உழன்று, பின் வீடுபெற்ற சித்தர்கள்தான் அனேகம். அடுத்து, சித்தர்களுக்கு மதங்கள் கிடையாதா? அவர்கள் இந்தத் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரியவர்களா? என்பதும் பலருக்குள் தோன்றிடும் கேள்விகளாகும். ஏன் என்றால், இந்த உலகம் மிக மிகப் பெரியது. இதில் நமது மாநிலம் என்பது ஒரு மைப்புள்ளி அளவுதான். அதிலும்கூட நம் ஊர், அந்த ஊருக்குள் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் நாம் கண்ணுக்குப் புலனாகாத தூசியைப் போன்றவர்களே! இப்படி தூசி அளவு கூட இல்லாத நம்முள் உள்ள ஒரு சித்தர் நமக்கே கூட முழுதாக விளங்கிடாத நிலையில், உலகிற்குப் பொதுவாகி, அனைவரும் அறிந்திடும்படி ஆகிவிட இயலுமா? அல்லது அவரால், இந்தப் பரந்த உலகை விளங்கிக் கொள்ள முடியுமா? என்றெல்லாமும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. சாதி, மொழி, மதம், இனம் என்று சுருங்கிக் கிடக்கும் சராசரி மனிதனால் வேண்டுமானால் எல்லைகளைத் தாண்ட இயலாமல் போகலாம்... சித்தர்கள் கூடவா அப்படி? அவர்களுக்கு உலகப் பார்வை இல்லையா? என்றும் கேள்விகள் எழுந்தால், அதில் பிழை இல்லை. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று இவை எப்படி உலகில் பொதுவாகிப் போனதோ அப்படித் தங்களையும் பொதுவாக்கிக் கொண்டால்தான் ஒருவன் முழு சித்தன். இந்த சித்தனுக்கு அமெரிக்கனும் சரி, அரேபியனும் சரி, இந்தியனும் சரி, யானையும் சரி, பூனையும் சரி, எல்லாமே ஒன்றுதான் என்று, சமரச நோக்கில் வெளிப்படும் கருத்துகளையும் மறுப்பதற்கில்லை. எல்லாம் சரி... இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிற மாதிரி ஒரு சித்தர் இருக்கிறாரா? என்று பார்க்கும் போது அகப்படுபவர்தான், யாக்கோபு சித்தர். 
யாக்கோபு சித்தர் இவரைப் பற்றி அறிய முயலும்போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. இவரது காலத்தை திட்டமிட்டு அனுமானிக்க இயலவில்லை. ஆனால் ஒன்று, இவர் காலத்தில் இந்து தர்மம் மட்டுமல்ல, இஸ்லாமிய தர்மமும் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் இவருக்கு தரிசனம் தந்திருக்கிறார் என்பதும், இவரைப் பற்றி அறியமுற்படும்போது தெரியவருகிறது. ஆயினும், அதில் எந்த அளவு உண்மை இருக்கமுடியும் என்று கேட்டு அதை ஆராய்வதை விட, அதை நம்பி இன்புறுவது மனதை விசாலமாக்குகிறது. நாகப்பட்டினத்தில் வாழ்ந்து இறுதியில், மதுரை அழகர் கோயிலில் சித்தியடைந்ததாக காணப்படும் யாக்கோபு சித்தரின் வரலாறு, சித்தர்கள் வரலாற்றிலேயே ஒரு தனித்தன்மை உடையதாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் சித்தபுருஷர்கள் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. நமது நெறி முறைகள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டவை. கல்வி, கேள்விகளில் ஒருவர் மேதையாக வேண்டும் என்றால், முதலில் பள்ளிக்குச் சென்று ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தேர்ச்சி பெற்று, பின் கல்லூரி, பல்கலைக் கழகம் என்று உச்சிக்குச் செல்வது போன்றது நமது ஆன்மிக நெறி. சித்தர்களின் நெறிமுறை இப்படிப்பட்டதே அல்ல. பிறக்கும்போதே ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி அளவு ஞானமுடன் பிறந்துவிட்ட சித்த புருஷர்கள் பலர் உண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கூட ஒன்று, இரண்டு என்று படிப்படியாகச் செல்வது போலல்லாமல், ஒரே நாளில் குருநாதரின் நேத்ரதீட்சையால் முழுமையான ஞானம் பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான்_ பின்னாளில் யாக்கோபு என்று அழைக்கப்பட்ட ராமதேவர். நாகப்பட்டினத்தில் சுற்றிவந்த ராமதேவருக்கு, தான் ஒரு கூட்டுப் புழுபோல இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றிட, அவர் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினார். இந்த உலகம் முழுவதும் சென்று வர வேண்டும்; எல்லா இடங்களிலும் மனித வாழ்வு எப்படி உள்ளது என்று பார்த்து விடவேண்டும்.; எங்கே நல்லது இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பொதுமையாளன் ஆக வேண்டும் என்பது ராமதேவனின் எண்ணம். அந்த வகையில், காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, சட்டநாதர் என்னும் சிவமூர்த்தியின் லிங்க ரூபம் கண்ணில்பட்டது. 
                                        சிவமூர்த்தியின் ஆங்கார சொரூபத்தில் தோன்றிய சரபேஸ்வரத்தின் அம்சம் கொண்டது அந்த லிங்கம். சங்கநாதன் என்று விஷ்ணுவையும், சட்டநாதன் என்று சிவத்தையும் சூட்சுமப் பெயரில் குறிப்பிடுவார்கள். சட்டநாத ரூபம் அகந்தையை அடக்கவல்லது. பணிவைத் தந்து பரந்த நோக்கை உருவாக்குவது. இது தெரிந்தோ தெரியாமலோ ராமதேவர் அதன்மேல் பக்தி கொண்டு, அப்படியே பூசனையும் புரிந்தார். அன்று இரவு, அவர் கனவில் ‘இந்த கங்கைக் கரையை விட உனது ஊரான நாகப்பட்டின கடற்கரையில் நானிருக்க விரும்புகிறேன்’ என்று அந்த சட்டநாதர் கூறிட, ராமதேவரும் மிக மகிழ்ந்து, அதை அங்கிருந்து நாகப்பட்டினம் கொண்டு வந்து ஸ்தாபித்தார். இந்த சட்டநாதர் மிக விசேஷமானவர். ஓடும் நதிக்கரையில் தோன்றி, அது கூடும் கடலிடம் வந்து சேர்ந்த இவருடைய பின்புலத்தில் பல சூட்சுமங்கள் உள்ளன. ராமதேவர் வழிபட்ட சட்டநாதர், ராமதேவருக்கு பல சித்திகளை அந்தக் கடல்போலவே வாரி வழங்கினார். இதனால் ராமதேவர் பல சித்துக்களை எளிதில் பெற்றார். அப்படியே உடம்பை வெல்லும் வைத்ய நெறிமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தி மூலிகை தேட ஆரம்பித்தார். அந்தத் தேடலில் அவருக்கு ஓர் உண்மை புலனானது. அதுதான் பூகோள ஞானம். இந்த மண்தான் உயிர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறது. காற்றோடும், நீரோடும், ஒளியோடும் கூடி அந்தரம் எழும்பி, இது மனித குலத்துக்கு உணவைத் தருகிறது. அந்த உணவும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. எல்லாவித உணவு வகைகளும் எல்லா இடங்களிலும் விளைந்து விடுவதில்லை. மலையில் விளையும் தேயிலையும் காபியும் தரையில் பட்டுப் போய் விடுகின்றன. தரையில் விளையும் சில பயிர்களோ மலையில் விளைய மறுக்கின்றன. 
                                     இடத்துக்கு இடம் பஞ்சபூத கலவையில் மாறுபாடு இருப்பதால் தட்பவெப்பம், மண்சத்து, காற்றில் குளிர், பொழுதுகளில் வெப்பம் என்று எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாட்டிற்கு ஏற்பவே தாவரங்கள் வளருகின்றன என்பதைப் புரிந்து கொண்ட ராமதேவர், எங்கே ஒருவர் பிறக்கிறாரோ அங்கே விளையும் பொருள் எதுவாக இருப்பினும் அங்கே பிறந்தவரை அது எதுவும் செய்யாமல், அவருக்கு அது பொருந்தி விடுவதையும் பார்த்தார். அதாவது_ பூகோளமானது, மனித உடம்பையும் தன் வசம் வைத்துக் கொண்டு ஆட்டிவைப்பதையும் உணர்ந்தார். பனிமலையில் பிறந்து வளரும் ஒருவன் உடம்பு, அந்த மலைக்காட்டின் ஈரத்திற்கு ஈடு கொடுப்பதாக உள்ளது. ஆனால் தரையில் வசிப்பவன் அங்கு சென்றால், குளிரால் நடுங்கித் துன்புறுகிறான். பூகோளமானது இப்படி மனித உடம்பையும் கட்டுப்படுத்துவதை உணர்ந்தவர், உடம்பில் ஏற்படும் வியாதிகளோடு தனது பூகோள ஞானத்தை பொருத்திப் பார்த்து ஆய்வுகள் செய்தார். வெம்மை நோயால் இங்கு ஒருவர் பாதிக்கப்படுகிறார். ஆனால், வெப்பப் பிரதேசமான அரபு நாடுகளில் வாழ்பவர்களை வெப்பம் பெரிதாக பாதிப்பதில்லை. நீர்வளமே இல்லாத அந்த மண்ணில் அவர்களுக்கு நீர்ச்சத்து எதிலிருந்து, எப்படிக் கிட்டுகிறது? என்பதெல்லாம் ராமதேவரின் கேள்விகளாயின. இதனால் உலகம் முழுக்க சுற்றி வரப் புறப்பட்ட ராமதேவர், மெக்கா நகரின் வறண்ட சூழலிலும் அங்கு பல அற்புத மூலிகைகள் இருக்கக் கண்டார். 
                                      பூகோள அமைப்பில் அங்கே ஒரு விசையும் இருப்பது புலனானது. பல லட்சம் முகம்மதியர்கள் அது தங்களை கடைத்தேற்றும் இடம் என்று மன ஒருமையோடு வழிபடுவதால் அங்கே அருள் அலைகளும் பரவியிருந்தன. இதை தன் தவ உடம்பால் உணர்ந்த ராமதேவருக்கு, மெக்காவை விட்டு வர மனமே இல்லாது போயிற்று. அங்கேயே தங்கி தன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட ராமதேவர், அங்கு நோயால் துன்புற்றவருக்கு தானறிந்த மருத்துவத்தால் அங்குள்ள மூலிகைகளையும் சேர்த்து சிகிச்சையளிக்க... அதனால் பெரிய நிவாரணம் ஏற்பட்டது. இதனால் அங்கே ராமதேவருக்கு பெரிதும் வரவேற்பு கிட்டியது. கூடவே, ஓர் அன்னியன் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முற்படுவதா? என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட... ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அங்குள்ளோர் ராமதேவரை யாக்கோபுவாக்கினர். யாக்கோபுவான ராமதேவரும் குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார். ஏற்கெனவே சித்த ஞானம் கை கூடி இருந்ததால் மன ஒருமை மிக இலகுவாக ஏற்பட்டதில் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனமும் யாக்கோபுவுக்குக் கிட்டியதாகக் கூறுவர். அதன் எழுச்சியாக, பதினாறு நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாகவும் கூறுவர். அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா? எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா? உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா?’ என்று போகர் கேட்க, யாக்கோபுவான ராமதேவருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது. மெக்காவை விட்டு நீங்கிய ராமதேவர், மீண்டும் நாகை வந்து, சட்டநாதரை வணங்கி, தான் மெக்காவில் அறிந்தவற்றை தமிழிலும் எழுதினார். அதுவே ‘ராமதேவ வைத்ய சாரம்’ என்ற நூலானது. 
                                        இதை சிலர் ‘யாக்கோபு சாஸ்திரம்’ என்றும் கூறினர். இந்த வைத்ய முறை, மற்ற சித்த வைத்ய முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. ரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு, வெம்மை நோய்கள் போன்றவற்றுக்கு இவரது வைத்தியம் பெரிதும் கை கொடுத்தது. பின்னாளில் ராமதேவருக்கு பல சித்த புருஷர்களின் தரிசனம் கிட்டியது. அவர்களில் காலாங்கி நாதரும் ஒருவர். காலாங்கி நாதர் உபதேசம் ராமதேவரான யாக்கோபுவை தவத்தில் மூழ்க வைத்தது. நெடுங்காலம் தவமியற்றிய ராமதேவருக்கு மேலும் பல சித்திகள் ஏற்பட்டன. திரும்பவும் மூலிகை தேடிப் புறப்பட்ட ராமதேவரால், பொதிகைக்கும், சீனத்துக்கும் ஆகாயமார்க்கமாக நினைத்தவுடன் சென்று வர முடிந்தது. பின் கொல்லிமலை, தென்கயிலாயம் எனப்படும் சதுரகிரித்தலம் என பல தலங்களுக்குச் சென்று அங்கே தங்கி ஆய்வு செய்தவர், இறுதியாக மதுரை அழகர் மலைக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார். அழகர்மலை, சிலகாலம் சமணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இங்கே நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராட இந்திரன் முதலான தேவர்கள் வருவர் என்பது புராண வழிச் செய்தியாகும். இந்த மலையின் பின்புறத்தில் சைவம், வைணவம், சமணம் முதலிய பலவித ஆன்மிக நெறிகளின் சங்கமம் உள்ளது. எவ்வளவோ மலைத்தலங்கள் இருப்பினும் அழகர் மலைத் தலம் அவைகளில் பெரிதும் மாறுபட்டு, தட்பவெப்ப சூழலில் உலகின் எல்லாவித தட்பவெப்ப நிலை அமைப்பையும் தன்னகத்தே கொண்டிருப்பது. வெப்பம், குளிர், வசந்தம், வேனில் என்று எல்லாவித பருவங்களிலும் ஒரு சமமான, மிகையிலாத்தன்மை உடையது என்பர். எனவே ராமதேவராகிய யாக்கோபு சித்தர், தன் அந்திமக்காலத்தை இங்கேயே கழித்து இறுதியாக இங்கேயே சமாதியானார் என்பர்! நாகப்பட்டினத்தில் அனுதினமும் அம்பிகையின் நினைவாக வாழ்ந்து கொண்டிருந்த சித்தர்தான் இராமதேவர். 
                                     சித்தர்கள் அனைவரும் சக்தி வழிபாடு உடையவர்கள்.அண்டத்தின் சக்தியைப் பிண்டத்தில் அறிந்து வழிபட்டவர்கள் சித்தர்கள்.அகத்தெளிவும் சமுதாய ஈடுபாடும், மனச்சான்றின் பேரெழுச்சியும்தான் சமயம் என்பதை வலியுறுத்தியே சித்தர் பூசா விதிகளை வரையறுத்துள்ளனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற மெய்யுணர்வு பெற்றவர்கள் சித்தர்கள். மனிதர்கள் அனைவரும் உதட்டில் ஒரு குணமும், உள்ளத்தில் ஒரு குணமுமாக வேடமிட்டு வாழ்வதை எண்ணி வேதனைப்பட்டு, மனம் வெம்பி அன்றாடம் தேவியுடம் கண்ணீர் விட்டழுவதும்அரண்டுவதும் சித்தர் இராமதேவர் வழக்கமாக இருந்தது. இதே சிந்தையுடன் விரக்தியுமாய் நாகபட்டினத்திலிருந்து காசிக்குச் சென்றார். கங்கை நதியில் மூழ்கி குளித்து விட்டு கரையேறும்போதுகங்கைக் கரையோரத்தில் சட்டைநாதர் சுவாமியின் விக்ரகம் ஒன்று அவருக்கு கிட்டியது. பக்தகளின் துணையோடு இராமதேவர் சட்டைநாதரின் விக்ரகத்தை நாகபட்டினம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தார். இரவு பகலாக இடையறாது சட்டைநாதரை உருகி வழிபாடு செய்து வந்தார். வழிபாட்டின் பயனாக பல சித்தர்களின் அபூர்வத் தொடர்புகள் ஏற்பட்டன. தொடர்பின் பயனாக சித்தர்கள் பலரும் இராமதேவரை வேண்டினர். “ இராமதேவரே! மக்கா நகரில் பல அபூர்வமான சக்தி வாய்ந்த கல்ப மூலிகைகள்  ஏராளமாகஉள்ளன. அவை யாவும் உயிர் காக்கும் மூலிகைகள் மட்டுமல்ல இமைக்கும் நேரத்தில் பலனைக் கொண்டு வரும் மந்திர சக்தி வாய்ந்த மூலிகையாகும். மக்கள் நலத்திற்காக அந்த மந்திர மூலிகைகளின் இரகசியங்களால் இந்த உலகையும், உயிரையும் காக்கும் பொருட்டு, நீங்கள் மக்கா நகருக்குச் சென்று வாருங்கள் “ என்றனர். 
                                                       நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவான மந்திரங்களை “அதர்வணாங்கிரஸ்” என்று வேதம் கூறுகிறது. அவற்றிம் வெளிப்பாடாகவே அன்றைய சித்தர்கள் மந்திர தந்திர ஜாலங்களையும்,மந்திர மூலிகைஇரகசியங்களையும் பரிபாஷையாகத் தெரிவித்துள்ளனர்.இராமதேவர் இயற்றிய ‘பூஜாவிதிப் பாடல்கள்’’ இதனை ஆதி என்றமணிவிளக்கு எனப் போற்றினார். 
ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்’ 
அகண்டபரி பூரணத்தை காண வேண்டும், 
சோதியென்ற தூய்யவெளி மார்க்க மெல்லாஞ் 
சுகம் பெறவே மனோண்மணியென் னாத்தாள் தன்னை 
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம் 
நிற்குணத்தி நினின்ற நிலை யாரும் காணார், 
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று 
விளங்குவதும் பூசையிது வீண்போ காதே. 
[தியானத்தின் போது குண்டலி சிரசை அடைந்து புருவ மத்தியில் வெண்ணிறவொளியாய் காட்சி தரும் இதுவே பரிபூரண இன்பமாகும். மனோன்மணியேகுண்டலி சக்தியாகும்.மனோன்மணியைப் பெண் சக்தியாக பரிபாஷையில் சித்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆத்தாள்(அகத்தாள்) எனவும்,தாயாகவும் கருதுகிறார்கள். அகத்தில் பேரொளியாய் சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறார்கள்சித்தர்கள்] 
                                                    அந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி குண்டலினி யோகத்தாலும், இரசமணி சித்தியாலும்,குளிகையாலும் நாகப்பட்டினத்திலிருந்து மக்கா நகரத்துப்  பாலைவன மணலில் வந்துசேர்ந்தார்.வறண்ட பாலைவனம் எங்கும் மணல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல். ஒட்டங்களின் வரிசை.அப்போதுதான் இராமதேவருக்கு மிகபெரிய சோதனை வந்து சேர்ந்தது.தங்கள் நாட்டில் யாரோ அந்நியன் புகுந்து விட்டதைக் கண்டு, கூட்டமாய் அரேபியர்கள் இராமதேவரைச் சூழ்ந்து கொண்டனர்.’’யார் நீ…. திடிரென்று இந்த இடத்திற்கு எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? தீன் தேசத்துக்குள் உன் வரவின் நோக்கம் என்ன? உண்மையிலேயே நீர் யார்? உன்னைக் கொல்லாமல் நாங்கள் விடபோவதில்லை” என்று அலறினார்கள். ‘’ அய்யா, இங்கு வருவது தவறு என்று எனக்குத் தெரியாது.’’ ‘’ அப்படியென்றால் நீ வேற்று மதத்துக்காரானா? உனக்கு இங்கு என்ன வேலை?’’ ‘’ அய்யா, நான் தவசாதனையில் ஈடுபட்டுள்ள சித்தர். எல்லா மதமும் சம்மதமே. நான் மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை.எனக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்.இங்குள்ள உயிர்காக்கும் கல்ப மூலிகைகளுக்காகவே நான் வந்தேன்’’ ‘’ ஓ! நீங்கள் தவயோகியா? சித்தரா? நீங்கள் இங்கே தங்க வேண்டுமானால் மதம் மாற வேண்டும். மத வேறுபாடு நீங்கள் பார்ப்பது இல்லை என்பது உண்மையானால் அதற்குச் சம்மதிக்கிறீர்களா?’’ ‘’ சம்மதிக்கிறேன்” ‘’ இனிமேல் நீர் குரான் ஓத வேண்டும் ‘’ “எல்லாம் இறைவன் செயல்” என்று கூறிய இராமதேவர், அன்று முதல் யாக்கோபுவாக மதம் மாறினார்.மக்கா நகரத்து மனிதர் யாவருடனும் இன்முகத்துடன் பழகினார்.
                                                அங்குள்ள காயகல்ப மூலிகைகளைக்கண்டறிந்து அவற்றை சாதனைக்குப் பயன்படுத்தியதுடன் மற்றவருக்கும் அதன் மகத்துவம் பற்றிஎடுத்துரைத்தார்.மக்கா நகரின் இசுலாமிய மக்களிடையே இரண்டறக் கலந்து அவர்களின் நோயகற்றும் மருத்துவராக இருந்து எல்லா காலங்களுக்கும் பயன்படும்படியான மருத்துவ நூல்களை அராபிய மொழியில் பாடி வைத்தார்.அங்குள்ள நபிகள் நாயகம் சமாதியைத்  தொழுது துதித்து வருவதை யாக்கோபுச் சித்தர் வழக்கமாகக் கொண்டு வந்தார். ஒருநாள் ஆகாயம் அதிரும்படியான பெருத்த ஓசை ஏற்பட்டது. அன்பர்கள் அனைவரும் குரானை ஓதித்தொழுத போது யார் கண்ணிலும் படாமல் நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் காட்சி தந்தார். ஆத்ம அநுபவம், தெய்வ நுட்பம் போன்ற உயரிய சாதனைகள் பற்றி நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் உபதேசித்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் அதன்பின் சமாதி நிலையடைய விரும்பி அதற்காக சாதகம் செய்து வந்தார். மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் எண்ணா நிலைக்காதிருக்குமானால் அதுவே சாமதி. ஒரு பூரணத்துவம் வாய்க்கப்பெற்ற சித்தர் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தாம் உடலுடன் இருக்கும் போது நினைவு, செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் சேர்ந்து விடுவார்.பரத்தோடு சேர்ந்து பரப்பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்களாகி விடுவார்கள். அரேபிய நாட்டின் பல்வேறு கல்பமூலிகைகளைப் பற்றி அறிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து போகர் சித்தர் மக்காவுக்கு வந்திருக்கின்ற செய்தி அறிந்து யாக்கோபுச் சித்தர் அவரை எதிர்கொண்டு வரவேற்றார். காயசித்தி,யோகசித்தி,கற்பசித்தி அனைத்தும் பெற்றவர் சித்தர்லலவா போகர்! முதன் மையான சித்தராக போகர் கருதப்படுகின்றார். 
                                             போகமுனிவர் யாக்கோபுச் சித்தருக்கு உபதேசம் செய்தார். ”மக்காவில் யாக்கோபுவாகவும், தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கின்ற நீ சமாதி அடைய வேண்டி காலம் இதுவல்ல. இந்தப் பூதலத்தில் உன்னால் பலரும், பாமர மக்களும் பயன் கிட்டியபின் நீ சமாதி நிலை நாடுவதுதான் சரியான வழி” போகமுனிவரிடம் அவ்வாறு உபதேசம் பெற்ற யாக்கோபுச் சித்தர் அதன்பின் தம்முடைய ஒப்பற்ற சித்தியால் யார் கண்ணிலும் தென்படாது அங்கிருந்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் காடு,மலைஎல்லாம் சுற்றி அலைந்து திரிந்தார்.தம்மை சந்தித்தவர்கள் எல்லார்க்கும் உபதேசம் செய்ததுடன் பிரச்சனைகளைக் களைந்து மகிழ்வித்தார். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும்; காலனை போன்ற நெருப்பானவர் என்றும்; காலனால்நெருங்க முடியாதவர் என்றும் கூறப்படும் காலங்கிநாதர் எனும் சித்தரின் ஆசியைப்பெற விரும்பினார் யாக்கோபுச் சித்தர். பலயுகம் கடந்து வாழ்ந்துவரும் காலங்கிநாதர் ரிஷிகள் பலரின் ஆசீர்வாதங்களைப்பெற்றவர். எனவேதான் யாக்கோபுச் சித்தர் அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்பினார். ஒருநாள்காலங்கிநாதர் சமாதி முன் சென்று அவர் வணங்கிபோது சமாதியிலிருந்து அவர் வெளிப்பட்டுயாக்கோபுச் சித்தரை ஆசீர்வதித்தார்.தம்முடைய அனுபவ இரகசியங்களை யாக்கோபுச் சித்தருக்குஉபதேசித்தார். தான் சமாதிநிலை அடைய இதுவே சரியான தருணம் என முடிவுசெய்து தமது சீடர்களை அழைத்தார் ’’சீடர்களே நான் இப்போது சமாதியில் அமரப் போகிறேன். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு சமாதியிலிருந்துமீண்டும் நான் எழுந்து வருவேன்,நான் சாமதியிலிருந்து வெளிவரும் காலத்தில் இங்கு பல அற்புதங்கள்நிகழும். விலங்குகள் கூட ஞானம் பேசும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும். இது போன்ற அடையாளங்கள்நான் திரும்பி வரும் நாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்போது சமாதியைமூடிவிடுங்கள்.” என்று கூறியபடி யாக்கோப்பு சித்தர் சமாதி உள்ளே சென்று விட்டார். “மாயத்தைக் கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போது கர்த்தனைக் கலந்துகொள்வார் ” என அகத்தியருக்கு கந்தபெருமான் அட்டமாசித்தி உரைத்தன் பொருளாய் யாக்கோபுச் சித்தர்உடம்போடு சமாதி நிலை கொண்டார்.
                                             யாக்கோபுச் சித்தர் சமாதிக்குள் போனவர் இறந்துவிட்டார் என்றேமக்கள் யாவரும் நம்பினர். அவரது சீடர்களும் பல இடங்களுக்கு சென்றுவிட்டனர். யாக்கோபுச் சித்தர்மீண்டும் வரமாட்டார் என்று சீடர்களும் நம்பினார்கள்.ஆனால் ஒரு சீடர் மட்டுமே நம்பிக்கையோடுசமாதிக்கருகிலேயே இருந்து வந்தார். அந்த சீடரின் நம்பிக்கை வீண் போகவில்லை.தன்னுடைய குருநாதர்கூறியதைப்போலவே சமாதியிலிருந்து எழுந்து வந்ததைக் கண்டு சீடர் மகிழ்ந்தார். “குருவே! தாங்கள் சமாதிக்குள் சென்ற பின்பு மக்கள் எல்லோரும் தாங்கள் இறந்து விட்டதாகவும்,தங்களிடம் சித்து ஏதும் இல்லை என்றும் கேலி பேசினார்கள்” என்று சீடர் கூறியதைக் கேட்டார்.“சீடனே! அவ்வாறு கூறியதில் தவறு இல்லை.இந்த உடல் நிலையானதல்ல.என்றேனும் ஒருநாள் மண்ணுக்குஇரையாகத்தான் வேண்டும்.நான் மீண்டும் சமாதியில் இறங்க்கப் போகிறேன். முப்பது ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் வருவேன்.என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் கண்கள் குருடாகப் போய்விடும்” என்று யாக்கோபுச் சித்தர் கூறியபடி மீண்டும் சாமதிக்குள் இறங்கிச் சென்று விட்டார். கேலி செய்த மக்கள் யாக்கோபுச் சித்தர் சாபத்தினால் கண் பார்வை அற்றவர்களாயினர். தங்கள் தவறைஅவர்கள் உணர்ந்தனர்.கண் பார்வை கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் வருந்தினர். தங்களுக்குக் கண்பார்வை வேண்டி யாக்கோபுச் சித்தர் சமாதியிலிருந்து வெளியே வரும்வரை அவர்கள்யாவரும் சமாதிக்குப் பூஜை செய்து வணங்கிக் காத்திருந்தனர். நீண்ட காலம் என்பதால் அதில் பலர் இறந்தும் போய்விட்டனர். 
                                            முப்பதாண்டுகள் கழித்துச் சமாதியில் இருந்து எழுந்து வந்த யாக்கோபுச் சித்தர் நடந்தது யாவும் அறிந்தார். தன்னிடம் மன்னிப்பு கோரியவர்களுக்கெல்லாம் அவர்களின் குறைபாடுகளை போக்கிஅருள் புரிந்தார். அதன் பின் உலகிலிருக்கும் பற்று நீங்கப்பெற்றவராக யாக்கோபுச் சித்தர் நிரந்தர சமாதிக்குள்சீடர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார். 
தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு; 
தனதான் நூற்றெட்டுக் குள்ளே சித்தி 
ஆனென்ற அண்டர்பதி யெட்டு மாடும்; 
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்; 
கோனென்ற கோடிசித்துக் கனத்தி லாடுங் 
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று; 
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று; 
வளர்பிறையின் செய்தவனே யோகி யாமே. 
[ குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் எழுப்ப 108 மாத்திரையால் கும்பிக்க மூலாதாரம் சித்தியாகும்.இந்த மூலாதார சித்தியால் தேவலோங்கள் வசப்படும்.64 மூலிகைகளின் இரகசியங்கள் வெளிப்படும்.எந்த மூலிகை எப்படி இருக்கும்என்பது சித்தர்க்கு மட்டுமே தெரியும். இச்சித்தியை ரேவதி நட்சத்திர நாளில்செய்யலாம்.அல்லது எட்டாம் திதியாகிய அட்டமியில் செய்யலாம். இதனைவளர்பிறையில் செய்தவன் யோகியாவான். ] 
                                            சித்தர்களின் பாடல்கள் யாவும் பெரும்பாலும் அவர்களின் அனுபவத்தால்முகிழ்ந்தவைகள். பொதுவாக சித்தர்களின் பாடல்களுக்கு அகராதியில் பொருள் தேடக்கூடாது. சித்தர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு வித பரிபாஷையை முதலில் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின் பாடல்களுக்கு பொருள் தேட முயற்சிக்க வேண்டும்.சித்தர்களின் பாடல்களுக்கு எளிய தமிழ் அகராதிகளில் பொருள் தேடிப்படிப்பது தவறானதாகி விடும். சித்தர் பாடல்களுக்கென்றே சில அகராதி இருக்கின்றன. அவற்றைத் தேடிப்படித்தல் நலம் பயக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 28, 2018

நான் உன்னுடன் இருப்பேன்

 Image may contain: food

"சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை". 

சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.


              'மகான் குதம்பைச் சித்தர்'

              Related image


அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெங்காயம்(பால்காயம்) இருக்கிறது.மிளகு இருக்கிறது. சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்)நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது?பெண் இன்பத்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன்.இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும்.பிறந்த ஊர் தெரியவில்லை.ஆனால் இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் ,பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது.இவரது அன்னைக்கு ஆண் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறிகொடுப்பாள்.அந்த அணிகல பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்துவிட்டாள் .அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கண நேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள்.அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது.அதுவரை அம்மா பிள்ளையாகத் தான் இருந்தார் குதம்பையார். ஒரு நாள், ஒரு சித்திரை அவர் சந்தித்தார் .குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன் .உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால் ,அது நடக்காது, காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காண முடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒரு நாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய் .தவம் என்றால் என்ன தெரியுமா?என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.
குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றை எல்லாம் கேட்டு,தன்னை ஆசிர்வதித்து ,இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார்.அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார்.அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார்.அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் குதம்பையார் அம்மாவுக்கு அதிர்ச்சி.என்னடா !சித்தன் போல் பேசுகிறாயே !இல்லறமே துறவத்தை விட மேலானது.உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன்.நீ பெரும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும்.ஒரு தாயின் நியாயமான ஆசை இது.அதை நிறைவேற்றி வை.அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை.அவரது எண்ணமெல்லாம் ,முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது.அன்றிரவு அம்மாவும்,அப்பவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார்.சந்திர ஒளியில் மிக வேகமா நடந்தார்.மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது!அந்த வேகத்ததுடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார்.பூராவ் ஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது .ஆனால்,குதம்பையாருக்கு அது தெரியவில்லை.அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய போனது இருந்தது.அதற்குள் குதம்பையார் அமர்ந்தார்.ஒரு வேளை ,தாய் தந்தை காட்டுக்குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்தது சென்றுவிட்டால் என்னவது என்ற முன்னெச்சரிக்கையில் இப்படி செய்தார்.தவம்….தவம்….தவம்.. எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை.கண்கள் மூடவில்லை.இறைவனின் சிந்தனையுடன் இருந்தார்.இறைவா!உன்னை நேரில் கண்டாக வேண்டும்.என்னைக் காண வா ! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச் செல்.ஏ பரந்தாமா !எங்கிருக்கிறாய் !கோபாலா வா வா வா ,இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை நீ வைகுண்டம் வர வேண்டாம்.உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது.நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில் ,இங்கே பல யானைகள் இருக்கின்றன.இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு .உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறன்.இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய்.அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும்.அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும்.அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்றான்.குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது.குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார்.மழை பொழிந்து காடு செழித்து.யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று .ஆழ்ந்து நிலையில் இறைவனை வணங்குகிறரோ ,அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால் இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.யோக வித்துவான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது)பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்று வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அறிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார்.மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது.இங்கு இவருக்கு தனி சன்னதியும் உள்ளது.மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால்,பெய்யெனப் பெய்யும் மழை!


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 27, 2018

பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஸாயீ

Image may contain: 1 person, smiling, indoor

குருராயரின் மஹிமை எல்லையற்றது. அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது. ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று.

பூர்வஜன்மத்தில், குறைபடாத,  பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஸாயீயின் (ஞானியின்) தரிசனம் கிடைக்காது. 

ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, பாபாவுக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார். 

பாபாவின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்? நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது. 

ஸாயீ பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார். தோன்றாநிலையி­லிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர். அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்? 

கிருபாளுவான (அருளுடையவரான) ஸாயீ,  விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்த ஸத்சரித்திரம் ஒரு கோயில் அன்றோ !"

ஸாயீயின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. "அதுவே நான்" (தத்வமஸி) என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது.


                   'மகான் பாம்பாட்டி சித்தர்'


 Image result for பாம்பாட்டி சித்தர் வரலாறுபாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
            இவரது குரு சாட்டைமுனி ஆவார். படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால் இப்பெயர் அமைந்தது. 
             சித்தர் வரலாறு : 
        பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.

           ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசினார். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார்.

          அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சாட்டைமுனி சித்தர் நின்றார். ″இங்கு எதைத் தேடுகிறீர்கள்?″ என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் ″நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை″ என்றார். இதைக் கேட்ட சாட்டைமுனி சிரித்தார். ″நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே″ என்றார்.

         எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.

                சிறப்புகள் :
        கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி என்றும் கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது. 
          இவரது படைப்புகள் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியனவாகும். பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது, அதோடு விளையாடுவது, இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். 
       பாம்பாட்டி சித்தர் 123 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர். இருப்பினும், மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 26, 2018

குருவினுடைய கரம் தீண்டல்


Related image

பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபிக்ஷத்திற்காகவோ எதற்காக இருப்பினும் சரி, எங்கு ஸத்குரு படகோட்டியாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கரை சேர்க்கிறார். 

ஸத்குரு என்ற வார்த்தை உள்ளத்தைக் கிள்ளும்போதே ஸாயீ மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே நம் முன் தோன்றித் தம்முடைய "வரம் நல்கும் கரத்தை" நம் இதயத்தின்மீது வைக்கிறார். 

"அவருடைய வரம் தரும் கரம்",  துனியி­லிருந்து வந்த சாம்பலுடன் நம்முடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது. 

"குருவினுடைய  ஹஸ்த ஸ்பரிசம் (கையால் தொடுதல்)" பிரளயகாலத்து அக்கினியாலும் அழிக்கமுடியாத சூக்கும சரீரத்தை அழித்துவிடும் அற்புதசக்தி வாய்ந்தது; கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது. 

கடவுளைப்பற்றியோ புராணங்களைப்பற்றியோ தப்பித்தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவ­லி வருபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாஸ்திகர்களுக்குங்கூட,  "குருவினுடைய கரம் தீண்டல்"  சாந்தியை அளிக்கும். 

தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பலஜன்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது; ஸாயீயின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மையடைகின்றனர்.


                      'மகான்  இடைக்காடர்'


                               Image result for இடைக்காடர்
        
                            இடைக்காடர், இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார். இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர்.
                         இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப் பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார். இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
                                  இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும். தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்... சிறு வயதிலேயே, 'நான் யார்?' என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியான விடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்... ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக் கொண்டவர். காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன... அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப்பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே...! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர். ஒரு நாள், ஆடு ஒன்று பள்ளத்தில் விழுந்து காயம்பட்டு ரத்தம் பெருக்கி நின்றது. இடைக்காடர் துடிதுடித்துப் போய்விட்டார். அதற்கு மருத்துவம் செய்யத் தெரியாமல் தத்தளித்தார். அந்தக் காடு கொள்ளாதபடி மூலிகைகள். ஆனால், அதில் எதைப் பறித்து அந்த ஆட்டுக்கு இடுவது என்பதில் குழப்பம். அந்தவேளை பார்த்து, போகர் வானவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். கீழே இடைக்காடர் ஓர் ஆட்டின் பொருட்டு படும் அவஸ்தை அவர் மனதை நெகிழ்த்தியது. கீழிறங்கி வந்து உரிய மூலிகையைப் பறித்து ஆட்டுக்கு மருத்துவமும் செய்து அதன் வலியைப் போக்கினார். பதிலுக்கு போகரை உச்சந்தலையில் வைத்து கொண்டாடத் தொடங்கி விட்டார் இடைக்காடர். இத்தனைக்கும், இடைக்காடர் மேனியிலும் சில காயங்கள் இருந்தன. அதற்கு மருந்து போட்டுக் கொள்ளக்கூட அவருக்குத் தோன்றவில்லை. போகருக்கு பாலும் தேனும் தந்து உபசரித்தார். ''அப்பா.. உனக்கு மிக மிக இளகிய மனது. ஆட்டிற்கும் மாட்டிற்கும் இரங்குகின்றாயே.. உன்னைக் கண்டு மகிழ்கிறேன்'' என்றார் போகர். ''ஸ்வாமி... உங்களைப் பார்த்தால் பெரிய மருத்துவர் போல தெரிகிறது. எனக்கும் உங்கள் மருத்துவக் கல்வியை பிச்சை போடுங்கள்... எனக்காகக் கேட்கவில்லை. இந்த ஆடு மாடுகளுக்கு வியாதி வந்தால் அதைப் பெரிதாகக் கருத யாருமே இல்லை. இவைகளை உணவாகப் பார்க்கத் தெரிந்த மனிதர்களுக்கு, இவைகளின் ஆரோக்கியம் பெரிதாகத் தெரியவில்லை...'' என்று, போகரின் காலில் விழுந்தார். அந்த நொடி, போகரும் இடைக்காடரை தன் சீடனாக ஏற்றுக்கொண்டார்.
                                      ''நான் வான்வழி செல்லும்போது உன்னைக் கண்ட நேரம், அமிர்த நாழிகைப் பொழுது. எப்பொழுதுமே எதையும் விருத்தியாக்குவதுதான் அந்தக் கால கதிக்குள்ள சக்தி. அதுதான் உன்னிடமும் தொற்றிக் கொண்டு உன்னால் எனக்கும், என்னால் உனக்கும் ஆதாயத்தை ஏற்படுத்தி உள்ளது..'' என்றார், போகர். போகர் அப்படிச் சொல்லவும், இடைக்காடர் மனதில் காலகதி பற்றிய சிந்தனை பெரிதாக தோன்றத் தொடங்கி விட்டது. ''அது என்ன அமிர்த நாழிகைப் பொழுது?'' இடைக்காடர் கேட்டார். அந்த ஒரு கேள்வி, தனக்குள் ஒரு மாபெரும் ஜோதிட ஞானத்துக்கே காரணமாகப் போவதை அப்போது அவர் அறியவில்லை. ஆரம்பமாயிற்று போகர் மூலமாக ஜோதிடப் பாடம். பஞ்ச அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் என்று தொடங்கி, திதி, யோகம், கரணம் என்று விஸ்வரூபமெடுத்தது அந்த பிரபஞ்சக் கல்வி.... போதுமே...! ஞானிகளுக்குள் ஒரு விதை விழுந்தால், அதை ஓராயிரம் ஆக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியுமே... போகர் ஓரளவு சொல்லிக் கொடுத்துவிட்டு ஞானோபதேசமும் செய்துவிட்டு போய்விட்டார்.இறுகப் பற்றிக் கொண்ட இடைக்காடரும் மெல்ல மெல்ல, ஆட்டிடையன் என்கிற நிலையில் இருந்து, மரியாதைக்குரிய இடைக்காடராக மாறினார். என்று மழைவரும்..? எந்த வேளை ஒரு புதிய செயலைத் தொடங்க நல்லவேளை? உபவாசங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நுட்பமாக ஒவ்வொரு சங்கதியையும் கண்டறிந்தார். கோள்களைப் பற்றியும் அவைகளின் கடப்பாடு, குணப்பாடு, செயல் வேகம் என்று சகலமும் அறிந்தார். போகரின் ஞானோபதேசத்தில் கிடைக்கப்பெற்ற 'கோவிந்த நாமம்', அவருடைய நித்ய மந்திரமானது. செயலாற்றும்போதும், செயலாற்றாப் போதும், உறக்கத்திலும், 'கோவிந்தா... மாதவா' என்று அந்தப் பரந்தாமனை அவர் நினைக்கத் தவறவில்லை. இந்த நிலையில்தான், பூ மருங்கில் ஒரு சோதனையான கால கட்டம், வானில் நிலவும் கோள் சாரத்தால் ஏற்படத் தொடங்கியது.
                                        பூமண்டலம் என்பது, பஞ்சபூதங்களால் ஆனது. ஆனால், அந்தப் பஞ்சபூதங்களை மீன்போல வலை வீசிப் பிடித்து தங்கள் பாத்திரங்களில் விட்டுக் கொள்வதில் கோள்கள் வலுமிக்கவையாக விளங்கின... மொத்தத்தில் பசுமையான பூமண்டலம் வறளத் தொடங்கியது. காற்று உஷ்ணமானது. நீரை பூமி மறக்கத் தொடங்கியது. நிலமே இதனால் மாறி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டது. 12 ஆண்டுகள் இது தொடரும் ஒருநிலையும் கோள்கதியால் உருவானது. முன்பே கோள்களின் போக்கை வைத்து இதை அனுமானித்த இடைக்காடர், இந்தக் காலகதியை வெல்ல ஒரு வழியையும் கண்டறிந்து வைத்திருந்தார். தன் குடிசையைப் புதுப்பிக்கும் போது, மண் சுவரோடு நெல்லைக் கலந்துவிட்டார். வீட்டைச் சுற்றிலும் நீரில்லாவிட்டாலும் வளரும் எருக்கஞ் செடிகளைப் பயிரிட்டு அதை ஆடுகளுக்குத் தின்னக் கொடுத்துப் பழக்கிவிட்டார். இதனால், வறட்சி வந்து பூமண்டலமே கதறிய போதும் இடைக்காடரோ அவரது ஆடுகளோ துன்புறவில்லை. எருக்கந் தழையை தின்னும் ஆடுகளுக்கு நமைச்சல் ஏற்படும். உடனே மண்குடிசை சுவரில் சென்று உரசும். மண்ணோடு கலந்திருந்த நெல் இதனால் உமி நீங்கி அரிசியாக கீழ் விழும். இடைக்காடர் போகியல்ல, யோகி. அவருக்கு ஒரு கைப்பிடி அரிசி ஒருநாளைக்குப் போதும். அதைக் கொண்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தார். ஆடுகளும் அவரும் அந்த வறண்ட போதிலும் அழகாக தப்பிக் கொண்டே இருந்தனர். இது ஒருவகையில் விதிப்பாட்டையே வெற்றி கொள்ளும் ஒரு செயல். வறட்சிக்கும் உயிர் அழிவுக்கும் காரணமான கோள் சாரம் என்பது, ஒரு தவிர்க்க இயலாத வான்மிசை நிகழ்வு. நான்கு பேர் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு வீட்டிற்குள் உறவுக்காரர்கள் பத்துப் பேர் வந்து விட, தாற்காலிகமாக அங்கே ஏற்படும் இட நெருக்கடியைப் போன்றது இது. இதற்கெல்லாம் பழக வேண்டும். வறட்சி வந்தால்தான் பசுமையின் மதிப்பு உணரப்படும். எல்லாமே நிலைப்பாடு. கோள் கதிகள் உலகுக்கு இந்தப் பாடத்தை தங்கள் போக்கில் நடத்துவது என்பது, பிரபஞ்சம் உருவான நாளிலிருந்து உள்ள ஒன்று.
                                        இதனால் கோள்களுக்குள் மெலிதான கர்வமும் உண்டு. ஆனால், அவைகளின் கர்வத்தை எள்ளி நகையாடுவது போல இடைக்காடரும் அவரது ஆடுகளும் மட்டும் எந்தத் துன்பமும் இன்றி வாழ்ந்து வருவது கோள்களை ஆச்சரியப்படுத்தியது. கோள்களின் ஆதிபத்ய உயர் அம்சங்கள், வானவெளியில் தங்கள் இயக்கத்திற்கு நடுவில், காரணத்தை அறிய இடைக்காடரின் குடிசைக்கே வந்து விட்டன. இடைக்காடரும், வந்திருப்பவை கோள்கள்தான் என்பதை தனது சித்த ஞானத்தால் உணர்ந்து கொண்டுவிட்டார். அவருக்கும் கோள்களுக்குமான வாக்குவாதம் தொடங்கியது. ''இடைக்காடரே... எவ்வளவு நாளைக்கு இப்படியே காலம் தள்ளப் போகிறீர்..?'' ''இதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது கிரகாதிபதிகளே..?'' ''உங்களின் பசியில்லா வாழ்க்கை என்பது எங்களை மீறிய செயல்..'' ''இது, என் சித்த ஞானம் போட்ட பிச்சை. உங்களுக்கு இதில் சம்பந்தமில்லை கோள்களே...'' ''இந்த மண்ணில் மனிதப் பிறப்பெடுத்து ஒரு வாழ்க்கை வாழும் உங்களுக்கு சந்தோஷமோ துக்கமோ நாங்கள்தான் தரமுடியும்...'' ''தன்னையறியா சராசரிகளுக்கும், ஆசைபாசம் என்று மாட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் நீங்கள் சொல்வது பொருந்தலாம். நான் பற்றற்றவன். பரதேசி! நீங்கள் எனக்கு எதையும் தரவும் முடியாது. நானும் அதனைப் பெறவும் வழியில்லை.'' ''பார்க்கலாமா அதையும்..?'' ''பார்க்கும் முன், எனது சிறு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பலப்பரிட்சையை வைத்துக் கொள்ளலாம்...'' இடைக்காடர் அப்படிச் சொல்லவும், கோள்களும் அவர் எங்கிருந்து அரிசி எடுத்து எப்படி உணவு சமைக்கிறார் என்று பார்க்கும் ஆவலுடன் மௌனமாயிருக்க, முதல் காரியமாக ஆடுகளுக்கு எருக்கிலையை தின்னக் கொடுத்தார். அப்படியே கோள்களைப் பார்த்து, ''வறட்சியிலும் வாழத் தெரிந்த பயிர் இது.. என்னைப் போல். குளிரும் நீரும்தான் இதற்கு ஆகாது. இதை நீங்கள் அழிக்கவேண்டுமானால் பெருவெள்ளம் வந்தாக வேண்டும். சீதோஷ்ண நிலையே மாற வேண்டும்'' என்றார். அப்படியே உண்ட ஆடுகள் அரிப்பெடுத்து சுவர்களில் உரச, நெல்லின் கூடுகள் உடைபட்டு உமியும் அரிசியும் பிரிந்து விழுந்தன. அதை எடுத்து கஞ்சி காய்ச்சியவர், கோள்களுக்கும் அதை வழங்கினார். அவர் செயலைப் பார்த்து கோள்கள் சற்று கூசிப் போயின. வறுமை, இல்லாமை போன்ற நிலையிலும் இடைக்காடரின் விருந்தோம்பும் பண்பு, அவர்கள் மனதில் அவர்பால் இருந்த எதிர்மறையான எண்ணங்களை அப்படியே மறையச் செய்தது.
                                          ஒன்பது கோள்களுக்குள்ளும் இடைக்காடரிடம் மோதுவதில் குழப்பமான எண்ணங்கள் ஏற்பட்டன. அப்படியே அமர்ந்துவிட்டனர். அப்படி அமரும்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காதபடி அமர்ந்து சிந்தித்தவர்கள், உண்ட களைப்பில் அயர்ந்து உறங்கியும் விட்டனர். அவர்கள் கண்விழித்தபோது பெரிய அளவில் மழை பெய்து இடைக்காட்டூர் மலையாற்றில் வெள்ளம் புரண்டு கொண்டிருந்தது.விழித்தெழுந்த கிரகங்கள், முன்பு அமர்ந்திருந்த நிலையில் தங்களில் சிலர் இடம் மாறி புதிய திசை நோக்கி அமர்ந்திருப்பதைக் கண்டனர்.அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் இடைக்காடரைப் பார்த்து நின்றனர். இடைக்காடர் சிரித்தார். ''என்னை அறிய வந்தவர்கள் நீங்கள். நானோ, உங்களை முன்பே அறிந்தவன். எங்களை விடவா நீ பெரியவன் என்பது உங்கள் எண்ணம். என்னை விட எல்லாமே பெரியது என்பதே என் எண்ணம். அதனாலேயே உலகம் உவந்து வாழ உங்களில் சிலரின் நிலைப்பாட்டை அதாவது சஞ்சாரத்தை மாற்றியமைத்தேன். பிறர் வாழ நினைக்கும் சன்யாசிகள் மனது வைத்தால் அவர்கள் வாழும் நாட்களை மட்டுமல்ல, கோள்களையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்பதை, இதோ கொட்டும் மழையைக் கொண்டு உலகுக்கு உணர்த்தி விட்டேன். கோள்களால், கர்மவினைகளுக்கு உட்பட்டவர்களையே ஆட்டிப் படைக்க முடியும். அதை வென்று வாழ முற்படுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்பதை, இனிவரும் காலம் உணரட்டும். என் கிரகத்தில் இப்போது அமைந்த உங்கள் ஒன்பது பேரின் நிலைப்பாடே வணக்கத்திற்குஉரியது. உங்கள் செயலாக்கத்திற்கும் ஏற்றது.உயிர்களை வழி நடத்தும் கடமைகொண்ட உங்களுக்குள் ஒருபோதும் கர்வம் கூடாது, பாரபட்சமும் கூடாது. இதுவே நான் உங்களிடம் வேண்டுவது'' என்று கூறி, கோள்களை வழியனுப்பி வைத்தார்.இப்படி மாமழையைத் தருவித்து வறட்சியைப் போக்கியதால், பூஉலகம் இடைக்காடரைக் கொண்டாட ஆரம்பித்தது. இடைக்காடரோ, ''என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள்.
                                              இடையன் வழி நடங்கள் (அதாவது இடையனான கண்ணனின் கீதைவழி); ஏழையாக இருங்கள் (அதாவது ராஜ்யமிருந்தும் உதறிவிட்டுச் சென்ற ராமனைப் போல); இளிச்சவாயனையும் மறந்து விடாதீர்கள் (அதாவது வாய் பிளந்த கோலத்தில் காட்சிதரும் நரசிம்மம் போல அதர்மத்தை அழிப்பவராக இருங்கள்). இப்படி இந்த மூன்று பேரையும் பார்த்து அவர்களைப் போலவும், அவர்களைப் பின்பற்றியும், அவர்கள் மேல் பக்தி செய்தும் வாழ்ந்தாலே போதுமானது'' என்று, தன் காலம் உள்ளவரை வலியுறுத்தினார். இவரது காலத்தில் திருக்குறளை பெரிதும் தாங்கிப் பிடித்தவராகவும் திகழ்ந்தார். திருக்குறளுக்கு முதலில் உரிய மதிப்பைத் தராத தமிழ்ச் சங்கத்தையும் அதன் புலவர்களையும் சபித்தவர் இவர் என்றும் கூறுவர்.இன்று ஆலயங்களில் நாம் வணங்கும் நவகிரகங்களின் நிற்கும் கோலம், இவரது கிரகத்தில் (குடிசையில்) நவகிரகங்களை இவர் மாற்றி அமைத்த கோலம்தான் என்றும் நம்பப்படுகிறது. இன்றும் ராமநாதபுரம் செல்லும் வழியில் திருப்பாச்சேத்திக்கு அருகேயுள்ள இடைக்காட்டூரில் இவரது திருவுருவ தரிசனம் காணக் கிடைக்கிறது.
இடைக்காட்டுச் சித்தர்.
Picture
                                  நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர் இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார். இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். 
                             கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். 
                                    நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார். இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 25, 2018

மஹா சக்தி படைத்தவர் சத்குரு.

Image may contain: 1 person, food

யார் யார் எதை வேண்டிக் கொள்கிறார்களோ அதையெல்லாம் பூர்த்தி செய்யக்கூடியவர் சத்குரு.  ஆனால் பக்தரோ,  மாறாத நம்பிக்கையுடன் குரு மீது நம்பிக்கை வைத்து பூஜிக்க வேண்டும்.

சூரியனை மறைக்கமுடியாதது போல குருவின் மகிமையை ஒளிக்கமுடியாது.  அது பத்துத் திசைகளிலும் தானாகவே பரவிப் பெருகியது.

யார் சாத்வீகமான குணம் உள்ளவர்களோ அவர்கள் வீடு தேடிச் செல்பவரான குருதேவர்,  அந்த வீட்டிலுள்ளவர்களுக்கும் இகம்,  பரம் இரண்டுக்கும் தேவையான செல்வமளித்து ஆசீர்வாதிப்பார்.

பரமபுருஷரான சத்குருவுக்கு ஏழைக்கும் ராஜ்ஜியத்தை அளிக்கும் சக்தியுண்டு.  அதேசமயம்,  அவருக்கு கோபம் வந்தால்,  எதையும் சாம்பலாக்கிவிடுவார்.  பிரம்மதேவன் எழுதுகிற தலையெழுத்தைக் கூட தனது இடதுகாலால் தேய்த்து நல்லவிதமாக மாற்றும் மஹா சக்தி படைத்தவர் சத்குரு.
     

                 Image result for gorakkar

                      ' மகான் கோரக்கர் '


அடுப்புச் சாம்பலில் இருந்து வெளிப்பட்டு, பல அற்புதங்களை நிகழ்த்திய கோரக்கர் சித்தரின் பெருமையை இங்கே பார்க்கலாம். 

கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள். 

ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார். 

மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள்.

மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய் என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள். 

அவளோ உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண், தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். 

சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார். 

பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு, இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண். 


மச்சேந்திரர், சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய்என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று கோரக்கா என்று கூப்பிட்டார். 

அடுப்புச் சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார். 

ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். 

வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும், என்றாள். 

உன் குரு வடை கேட்டதால் போயிற்று; இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார். 

இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். 

கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்பப் பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசிக்கு, மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார். 

மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள்; நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம், என்று அழைத்தார். 

இவர்களுக்கு வழிச்செலவிற்கு வேண்டும் என்று அரசி பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு, கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். 

இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை வைத்தார். 

மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார். 

அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதேஎன்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். 

உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார். 

பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம், நீங்கள் யார், என்று கேட்டார். 

அதற்கு அவர், இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை, என்றார். 

கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார். 

வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் கிண் என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார். 

அல்லமர் கோரக்கரை நோக்கி சரி, உன் திறமையை நிரூபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு என்று கூறினார். 

கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர். 

இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர். 

இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன. 

கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள். 

யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.

கோரக்கர் மூலிகை (கஞ்சா), பிரம்மபத்திரம் (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார். 

கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள். 

இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள். 

கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை: 

1. கோரக்கர் சந்திர ரேகை 
2. கோரக்கர் நமநாசத் திறவுகோல் 
3. கோரக்கர் ரக்ஷமேகலை 
4. கோரக்கர் முத்தாரம் 
5. கோரக்கர் மலைவாக்கம் 
6. கோரக்கர் கற்பம் 
7. கோரக்கர் முத்தி நெறி 
8. கோரக்கர் அட்டகர்மம் 
9. கோரக்கர் சூத்திரம் 
10. கோரக்கர் வசார சூத்திரம் 
11. கோரக்கர் மூலிகை 
12. கோரக்கர் தண்டகம் 
13. கோரக்கர் கற்ப சூத்திரம் 
14. கோரக்கர் பிரம்ம ஞானம் 

இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 23, 2018

உலகம் மாயை மயமானது

               Image may contain: 1 person
அனைத்து உயிர்வர்க்கங்களையும் உயிரற்ற ஜடப்பொருள்களையும் தன்னகத்தே கொண்ட அகில உலகமும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் போன்று தெளிவாகக் காணப்படினும், இவையனைத்தும் மாயையால் சிருஷ்டிக்கப்பட்ட ஜாலக்காட்சிகளே. 

உயிருள்ளவை, உயிரில்லாதவை என்ற சிருஷ்டி வகையெல்லாம் ஒரு வெளிப்பாடேயில்லை.  மனத்தில் ஏற்படும் மாயம் ஈதெல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. 

கண்ணாடியில் தெரியும் பிம்பம் கண்ணாடிக்குள் இல்லை. கனவில் அனுபவித்த சுகங்கள் அனைத்தும் விழிப்பு ஏற்பட்டவுடன் காணாமற்போகின்றன.   கண்விழித்தெழுந்தவுடன் கனவுலகம் மறைந்துபோகிறது. 

வேத மஹா வாக்கியங்களுக்கு குருவின் விளக்கத்தைக் கேட்ட பிறகு,  அத்வைத ஆனந்தப் பிரகாசம் தோன்றுகிறது. 

இறைவனின் அவதாரமும் தன்னலமற்ற தியாகத்தின் அடித்தளமும் இப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த சக்தியுமான ஸத்குரு மனம் கனிந்தால்தான், இந்த சாட்சாத்காரம்,  ( "வேத மஹா வாக்கியங்களின் நேர் அனுபவம்" ) வெளிப்படும். 

சுயஞ்ஜோதியானதும் என்றும் நிலைத்திருப்பதுமான ஆத்ம சொரூபமே அது. உயிருள்ளவற்றையும் உயிரில்லாதவற்றையும் தன்னுள் அடக்கிய பஞ்சபூதங்களாலான இப்பிரபஞ்சம், மாயை காட்டி இன்புறும் இறைவனின் லீலையே. 

பிரம்மாவி­லிருந்து புல்பூண்டுவரை நம் கண்முன் விரியும் பஞ்சபூதங்களாலான உலகம் மாயையால் விளைவிக்கப்பட்ட வெறும் காட்சியே. 

அஞ்ஞான இருட்டில் ஒரே பொருளானது,  கயிறாகவும் பாம்பாகவும் குச்சியாகவும் தண்ணீராகவும் தெரியக்கூடும். இப் பிரம்மாண்டமான உலகமும் அவ்வாறே தெரிகிறது. அதற்கென்று உண்மையான சொரூபம் ஏதுமில்லை.  கண்ணால் அறியப்படும் உலகம் மாயை மயமானது.

தத்துவஞானம் கிடைத்த பிறகே இம்மாயை விலகும்.  "பிராப்தம் வரும்பொழுது குருவின் உபதேசம்" தரும் எழுச்சியால் தத்துவஞானம் விளைகிறது.


' மகான் காலாங்கி நாதர் 'Picture


காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை... எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை. 
வாழ்க்கை குறிப்பு காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார். ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம் என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார் எனலாம். இவரது குருநாதர், திருமூலர். சீடனை பல விஷயங்களில் கடைத்தேற்றியவர். காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று எண்ணியிருந்தார். எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன. இப்படித்தான் ஒருமுறை, பூமியில் பிரளயம் ஏற்பட்டது. நிலப்பரப்பு முற்றும் நீரால் சூழ்ந்தது. மலைமுகடுகள் மட்டும் தப்பித்தன. மலை முகடுகளில் தான் சித்த புருஷர்களும் வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், பிரளயத்தால் காலாங்கிநாதருக்கு கிட்டியது. அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள் தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். உயிருள்ள அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது. அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது. இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது. பறவைகள் பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத் துணை செய்கிறது. நுட்பமான சிந்தனைகளால்  இவைகளை அறிந்த காலாங்கி நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத் தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார். அவரது குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன. இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து வியந்தனர்.                பிரளய சமயத்தில், மலை உச்சியில் இருந்த சித்தர்கள், காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர். அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம உணர்வை அவருக்குள் விதைத்தனர். ‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர் கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர். அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும் விளக்கினார். ‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத் தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன. மலையகத்தில் இப்படித் தட்டையான நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள் உண்டு. காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத் திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை பெய்தாலும் கீழே ஓடி விடுகிறது. மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள் இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன. அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில் இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின் அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே காலாங்கிநாதர் பெற்றார். எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள் கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன. தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன. 

                                                  மலைச் சிறப்பை உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம் கண்டு கொண்டார். ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார் என்றால், அவர்  புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார் என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம் செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார் என்பதே நுட்பமான உட்பொருளாகும். பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக இருக்கலாம். காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம் வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார். அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின் பட்டறிவைப் பாராட்டினார். வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார். அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள். மாயை என்றால், ‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள். அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும். 

கடலோரமாய் அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும். மறுபாகம் தாழ்ந்திருக்கும். அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும் நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும். எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ, அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய் விட்டால், அங்கே போராட்டம் இல்லை. அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது. சிந்திக்க சிந்திக்க இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க வைத்தார். அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல் இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை பலருக்கும் உபதேசிக்கலானார். இவரால் பலர்,  நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர். காலாங்கிநாதரோ நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். 

  ஒரு மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை. அது இருக்கும் இடத்திலேயே, அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான். அதுவும், நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது. சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன் மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய் உணர்ந்தார். இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது என்பது இவரது வாடிக்கையாகி விட்டது. திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய் திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும் அறிந்தார். இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர். அவர்கள், தசாவதார சித்தர்கள் ஆவர். திருமாலின் தசாவதார அம்சங்களிலேயே சித்த மூர்த்திகள், அந்த அவதார நோக்கங்களையே தத்துவமாகக் கொண்டு திகழ்ந்தனர். அவர்களையெல்லாம் தரிசனம் செய்தார். அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள் அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார். அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 ஜ் 8=64 என்கிற கலைகள் ஆனது.

இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில் அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று. இது சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று. இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப் பெற்றுள்ளோம். ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல், ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம் உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை வழிநடத்துகிறது. நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல் உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி இருக்கும்! கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால், காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக, நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார் என்பர். 

திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார். 

 குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை. 

     அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது. ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர். 


  இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

  காலாங்கி நாதர்      வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய 
வகாரத் திரவியம், 
வைத்திய காவியம், 
ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
 ஞான பூஜா விதி, 
இந்திர ஜால ஞானம், 
ஞான சூத்திரம், 
உபதேச ஞானம், 
தண்டகம் 
போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார். 
இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர். 

காற்றையே உடலாகக்  கொண்டவர் என்றும் காலனைப் போன்ற நெருப்பானவர் என்றும், காலனால் நெருங்க முடியாதவர் என்றும் காலங்கி நாதருக்கு பெயர்க் காரணமுண்டு. 

  காலங்கி நாதர் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். இவர் மூவாயிரம்வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோக முனிவர் இவரைப் பற்றிக்  கூறியுள்ளார். யுகங்களைக் கடந்து வாழ்ந்த காலங்கி நாதர் பல ரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்ற சம்பவங்கள் பலவுண்டு. திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூவுலகின் ஒரு பகுதியில் கொடியதொரு பிராளயம் ஏற்பட்டது. மழையும், புயலும் வெள்ளமும் கரை புரள பூவுலகம் மூழ்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த மரம்,செடி, கொடிகள், யாவும் மூழ்கிய நிலையில் காலங்கிநாதர் ஒரு பெரிய மலைமேல் ஏறினார்.வெள்ளம்உயர்ந்துகொண்டே இருந்தது. அதற்கேற்பக்  காலங்கி நாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டேபோனார்.காலங்கி நாதர் இப்படி ஒரு பிரளயத்தை அதுவரை சந்தித்ததே இல்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன் துயரம் நெஞ்சை வாட்டியது மலையின் உச்சியை நோக்கியே சென்று கொண்டிருந்த காலங்கி பல சித்தர்களும், ரிஷிகளும் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கண்டார். “ரிஷிமார்களே!...எல்லோரும் இவ்விடத்தில் கூடி நிற்கும் காரணத்தை நான் அறியலாமா? என்று கேட்டார்” காலங்கி நாதர். “சித்தரே இதற்கு மேல் எங்களால் உயரே ஏறிச் செல்ல முடியவில்லை.அதனால் இங்கேயே நிற்கிறோம்.வெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியாது. உம்மால் முடிந்தால் உயரேஏறிச் சென்று உயிர் பிழைத்துக்கொள்ளவும் ” என்று அந்த ரிஷிகள் காலங்கி நாதர்க்கு பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட பின்பும் காலாங்கி நாதர் மலையுச்சிக்கு ஏறி சென்றார்.

   அங்கு ஒரு பயங்கரமான புலி படுத்துக்கிடப்பதைக்  கண்டார். அதனருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது யாரோ ஒரு சித்தர் புலி உருவத்தில் படுத்து இருக்கிறார் என்பது. மனிதர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடவே அருவுருவாக அங்கு தங்கி வாழ்ந்து வருவது தெரிந்தது. காலாங்கி நாதர் அந்த சித்தருக்கு வணக்கம் செய்துவிட்டு மேலும் தம் பயணத்தை தொடர்ந்தார். மலை மீது ஓரிடத்தில் ஒரு சுனை இருப்பதைக் கண்டார். காலாங்கி நாதர் அந்தச் சுனை ஓரத்தில் ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டார்.மீனின் உடலும், மனித முகமுமாய் ஒரு ரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.அவர் மச்ச ரிஷி என அழைக்கப்பட்டவர்.  மச்ச ரிஷிக்கு வணக்கம் செய்து பயம் தொடர்ந்தபோது மற்றோர் இடத்தில் ஆமை உடலும் மனிதமுகமுமாய் ஒரு ரிஷியை தரிசித்தார். அவர் “ காலங்கி நாத நான் பன்னொடுங்காலமாக இங்குதவமிருக்கிறேன். என்னைப் பார்க்க இதுவரை யாரும் வந்தது இல்லை. இங்கே உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டு திரும்பினார் காலங்கி நாதர். அப்படி அழைத்தவர் வராகரிஷி. 

காலங்கி நாதர் அவரை வணங்கி உபதேசம் பெற்றார். பிரளயம் ஏற்பட்டு மலையுச்சி நோக்கி திரேதாயுகத்தில் பயணம் செய்த காலங்கி நாதர் அதன் பிறகும் பல ரிஷிகளைக் கண்டு உபதேசம் பெற்றார். வாமன, பரசுராமர், பலராமர்,பெளத்த, கல்கி, போன்ற ரிஷிகளும் திரேதாயுகத்திலிருந்து தவம் செய்து வருவதை அறிந்து காலங்கி நாதர் அவர்கள் யாவரிடமும் வணங்கி ஆசி பெற்றார்.சதுரகிரி மலைப்பகுதியில் வேதவியாசர்,மிருகண்டேயர்,பதஞ்சலி நாதரிஷி போன்ற முனிவர்களையும்,குதம்பைச் சித்தர்,பாம்பாட்டி சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்றவர்களயும் சந்தித்து அவர்களின் பேரருளைப்  பெற்றார். அதன் பின்பு காலங்கி நாதர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது அங்கே வந்த வணிகன் ஒருவன் அவரைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கி அழுதான். தான் அவரைப் பார்க்க வந்த நோக்கத்தைக் கூறினான்.

  சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட வகார தைலக்கிணறு உண்டு.உலோகத்தைத்  தங்கமாக மாற்றும் தைல மூலிகைக்  கிணறு.சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம் எனும் கிராமத்தில் இறைபக்தியும்,திருப்பணி கைங்கர்யங்கங்களில் சிறந்த வாமதேவன், கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று ஆலயப்பணியைத்  தொடந்தான்.ஆலயம் பாதிபாகம் கட்டி முடிவதற்குள் பொருள் பற்றாக் குறையால் பணியைத்  தொடர இயலவில்லை. பலரிடம் யாசித்தும் யாரும் உதவி புரியவில்லை. சதுரகிரியில் தவம் புரிந்து கொண்டிருக்கும் காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை சந்திக்க சென்றான்.நடந்தவற்றைக் கூறி நின்று போன சிவாலயப் பணி தொடர வழி செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி நின்றான்.ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக இருந்தார். ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். வாமதேவன் உண்மையிலேயே ஆலயம் கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை நிறைவேற்ற நினைத்தார். மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை, உதிர வேங்கை,ஜோதி விருட்சம்,கருநெல்லி முதலியவற்றாலும்,முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார். அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களைத் தங்கம் உண்டாக்கினார்.'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து கோயிலைக்  கட்டி முடி போஎன்றார். காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த பொன்னை எடுத்துச் சென்ற  வணிகன் வாமதேவன் தன் விருப்பப்படியே சிவாலாயம் கட்டி முடித்தான். அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர். பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக்  கொண்டு மூடிவிட்டார். 

துஷ்டர்கள், பேராசைக்காரர்,வீணர்களிடம் போய்ச்  சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,நான்கு திசைகளுக்கும் வாரகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் ஆகிய தெய்வங்களைக்  காவலுக்கு  நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். [ தைலக் கிணறு சதுரகிரியில் இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின் அருகில் இன்றும் காணலாம். கிணற்றின் மீது இரும்புச் சட்டங்களால் மூடப்பட்டுள்ளது. இன்றும் சித்தர்கள் அங்கு உருவாகவும், அருவுருவாக நடமாடுவதைப்  பலரும் கண்டுள்ளனர். குறிப்பாக பெளர்ணமி காலங்கள் விசேஷம் ] காலாங்கிநாதர் ககனகுளிகையின் உதவியோடு விண்வெளியாக சீன நாடு சென்று காலனுடைய அருள் பெற்று சமாதி அடைந்தார். சீன நாட்டில் காலங்கி நாதர் சமாதி அடைந்திருந்த முக்காதக் கோட்டைக்குள்நுழைந்து போகர் முனிவர் வணங்க சமாதியின் கதவு திறந்து ஒளிமயமாக காலாங்கிநாதர் போகருக்கு  தரிசனம் தந்தார்.வினை,எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்.இதன் அடிப்படையில்தான் எல்லாமே  இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை  எதிர்கொள்கிறான்.இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்பநிலை” அடைவதே  உயரிய சித்த நிலை எனப் படுகிறது.இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும்  சாத்தியமில்லை,குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும். 

  சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும்  பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது  குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.அநேகமாய் எல்லா மதங்களிலும் இந்த  வினைப்பயன் பற்றிய கூற்றுகளை முன்வைத்து அதை தீர்த்திடவும்,குறைத்திடவும் பல்வேறு  உபாயங்களை கூறியிருக்கின்றன.இவை யாவும் செலவு பிடிப்பதும், நடை முறைக்கு  சாத்தியமில்லாதவைகளாகவும் இருக்கின்றன. கர்மவினை குறித்து சித்தர்கள் பல்வேறு விளக்கங்களையும்,உபாயங்களையும்  கூறியிருந்தாலும்,  கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில்  பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார். 
பெருமையாம் கோரக்கர் குண்டா ஓரம்
பிறங்கும் ஒரு தீர்த்தமதில் நீராடி செய்து
அருமையாம் குண்டாநீர் அள்ளி உண்ண
செய்த பாவவினையெல்லாம் அகன்றுபோமே
ஒருமையாம் உள்ளமதில் கோரக்கர் தம்மை
உன்னியே துதிசெய்ய நல்வாழ்வுண்டகும் 

- காலங்கி நாதர் - 

மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம்.  
அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும்  அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம்  தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும்  கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர். காலங்கிநாதர் தனது “காலங்கிநாதர் ஞானவித்து ரகசியம் புத்தகம்” என்ற நூலில்  கோரக்கரின் இருப்பிடத்தையும்,தரிசனத்தையும் பின்வருமாறு கூறுகிறார். 
பார்க்கவே கோரக்கர் குண்டாதோன்றும்
தேரப்பா கஞ்சவுடன் மூலி சேர்ததிற் கடைந்து
சித்தர் முனி ஒவ்வொருவருக்கும் ஈவார்
நேரப்பா அதனருகே குகைதான் உண்டு
யென்றும் நிலையாக சிவயோகம் செய்வாரங்கே
கோரப்பா கோரக்கர் தம்மைக் கண்டு
கொண்டவனே ஞானாமிர்தம் உண்டோந்தானே 
- காலங்கி நாதர் - 

சதுரகிரி மலையில் கோரக்கர் கஞ்சாவுடன் மூலிகைகள் சேர்த்து அரைத்து சித்தர்களுக்கு  கொடைத்த இடமான கோரக்கர் குண்டா இருக்கிறது. அதன் அருகில் அவரது குகையும்  இருக்கிறது. அந்த குகையில் கோரக்கர் என்றும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.அவருடைய  தரிசனம் பெருபவர்கள் ஞான அமிர்தத்தை உண்டவர்கள் ஆவர் என்கிறார். 

அகத்தியரும், காலங்கி நாதரும் கோரக்கரின் தரிசனம் என்றும் கிடைக்குமென  அருளியிருப்பதை அவதானியுங்கள். தூய மனதுடன் அவரை வணங்கும் அனைவருக்கும் அவரது  தரிசனம் என்றும் கிடைக்குமெனவும், அப்படியான தரிசனத்தை பெற்றவர்கள் ஞான  அமிர்தத்தினை உண்ட பலனை அடைவார்கள் என்பதே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்திடும்  செய்தி! குருவருள் துனையுடன், தூய்மையான உள்ளத்துடன் ஆர்வமும்,அக்கறையும், தேடலும் உள்ள  எவரும் இன்றும் கூட அந்த பெருமகனாரை தரிசிக்க முடியுமென்றே தோன்றுகிறது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எல்லாப் பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள் ‌!

பாபாவே தன் அடியவர்களுக்கு, கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு ஆவார்.  அவருடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு அன்புடனும் ஆர்வத்துடனும்...