மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது. அதைக் கட்டவிழ விடக்கூடாது. புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம். ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும்.
புலன்களை நம்பக்கூடாது. ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது. கொஞ்சங்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும்.
புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.
ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம். அழகை பயமின்றி ரஸிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை? ஆனால், துர்ப்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது.
இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரஸிக்கலாம். தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும். இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும்.
தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலன்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும்.
தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான். அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது.
சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன்கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலனுறுப்புகளை முரட்டுக் குதிரைகளாகவும், தொடுவுணர்வு, சுவை, பார்வை, வாசனை, ஓசை ஆகிய புலனின்பங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நரகத்திற்கு மார்க்கங்களாகவும் கருதவேண்டும்.
விஷயசுகங்களின்மீது சிறிதளவு பற்று இருந்தாலும் பரமார்த்த (வீடுபேறு) சுகத்தை அது நாசம் செய்துவிடும். ஆகவே, அதை மிச்சம்மீதியின்றித் தியாகம் செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்.
கை, கால் முதலிய புறவுறுப்புகள் பற்றிழந்துவிட்டாலும், அந்தக்கரணம் ஏங்குமானால், ஜனனமரணச் சுழற்சிக்கு முடிவேற்படாது. விஷயசுகங்கள் அவ்வளவு அபாயகரமானவை
விவேகமுள்ள சாரதி (ஸத்குரு) கிடைத்தால், லகான்களை லாவகத்துடன் கையாள்வார். அப்பொழுது, புலனின்பங்களாகிய குதிரைகள் கனவிலும் சிறிதளவும் நெறிதவறிச் செல்லமாட்டா.
சமநிலை கலையாத மனமுடையவனும் அடக்கும் சக்தி பெற்றவனும் உஷாரானவனும் தொழில்நுட்பம் தெரிந்தவனும் சாமர்த்தியசாலியுமான மனிதனுக்கு "ஸத்குரு தேரோட்டியாகக் கிடைக்கும் பாக்கியம் ஏற்படுமானால்," விஷ்ணுபதம் வெகுதூரத்திலா இருக்கிறது?
அந்தப் பதமே பர பிரம்மம் (முழுமுதற்பொருள்). வாசுதேவன் என்பது அதற்கு மற்றொரு பெயரே. அந்தப் பதமே அனைத்திலும் சிறந்த, உயர்ந்த, என்றும் நிலையான, அப்பாலுக் கப்பாலாய் இருக்கும் நிலை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil