
பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த ஸாயீயின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன். கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன். ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன். அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன் (தழுவுகிறேன்).
ஸாயீ ஸஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியசாந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மஹத்தான அனுபவங்களைப் பெறுகின்றனர்.
அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது. ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான். சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது. ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன். ஸாயீ எப்பொழுதும் ஸம்பூர்ணமானவர் அல்லரோ !
ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்; காரணம், ஸத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக ஸாயீயால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர்.
தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துச்சிப்பியைத் தூக்கியெறிபவர் அதனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார். நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது. அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே !
இங்கே, சொல்லின் மாத்திரையை (எழுத்தொலியை) நிர்ணயிப்பவர் ஸாயீயைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார். இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது.
காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ? சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?
ஸாயீயின் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது. கேட்பவர்கள் தங்களை மனத்தால் ஸாயீயாகவே பா(BHA)வித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர். அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.
அந்நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் ஸாயீயின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றிவிடும். அந்நிலையில்தான் நீரிலிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ? அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும் !
அந்நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் ஆன்மீக போதனை பெறுவர்; நகைச்சுவையை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்; கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொலிவையும் ஒலிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர். இவ்வாறாக, இக்காவியம் (ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம்) எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும் !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil