
நீங்கள் செய்யும் அன்னதானத்தில் பாபா நிச்சயம் உணவருந்த வருவார்.
பேடுல் ஜில்லாவைச் சேர்ந்த டெண்டுல்கர் என்பவர் பாபாவின் பக்தர். அவர் ஒருமுறை ஷீர்டிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் பாபாவிடம் , "பாபா ! தாங்கள் ஒருநாளாவது என்னுடன் உணவருந்த வேண்டும் !" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பாபாவின் பதில் வெறும் புன்னகையாக மட்டுமே இருந்தது.
தான் கேட்டுக்கொண்டதை பாபா ஏற்கிறாரா, மறுக்கிறாரா என்று டெண்டுல்கருக்கு புரியவில்லை. இருப்பினும், டெண்டுல்கர் தினமும் தவறாமல் இரண்டு தட்டுக்கள் உணவு வாங்கி ஒரு தட்டு உணவைத்தான் உண்பார். மற்றொன்றை சகுண் என்பவரிடம் கொடுத்து, "இது பாபாவுக்கு! மூடி வையுங்கள்!" என்று கூறுவார். இரவு சாப்பாட்டு நேரம் கடந்ததும் பாபாவுக்கென்று மூடி வைத்த மற்றொரு தட்டு உணவை, பிச்சைக்காரர்களுக்கு அளித்துவிடுவார்கள்.
ஒருநாள் இரவு பத்து மணிக்கு மறுநாள் பால் கறப்பதற்கான கழுவிக் கொண்டிருந்தார் சகுண். அப்போது ஒரு சாது வந்து, "எனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவைக் கொடு !" என்று கேட்டார். சகுணும் உடனே அதை அவருக்குக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்ட சாது, அதை சாப்பிட்டு முடித்ததும், "இதை வாங்கி வைத்த மனிதனைக் கூப்பிடுங்கள் !" என்றார். உடனே டெண்டுல்கரை அழைத்து வர ஆளனுப்பினார் சகுண். ஆனால், "டெண்டுல்கர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். அவரை எழுப்ப முடியவில்லை" என்ற பதிலுடன் வந்தான்.
"பசித்தவர்களுக்கு அன்னமிடுவது உயர்ந்த செயல். ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஒரு துண்டு வெல்லமாவது கொடுத்தனுப்ப வேண்டும். இவருக்கு எல்லா நலன்களும் கிட்டும்" என்று கூறிச் சென்றார் அந்த சாது.
அவ்வமயம் அங்கு வந்த ஷாமா, சாதுவாக வந்தவர் பாபா என்பதை புரிந்துகொண்டு, சகுணிடம் , "வந்தவர் வேறு யாரும் அல்ல, நமது பாபாவே !" என்று கூறினார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil