Thursday, January 31, 2019

"மண் மண்ணோடு சேர்ந்ததற்கு முட்டாள்தனமாக அழலாமா?பம்பாயில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தவர் திரு. பிரதான்.  ஆச்சாரமான, மிகச் சிறந்த பக்திமான்.  இவரது ஏழு வயது மகன் திடீரென இறந்துவிட்டான். இந்த திடீர் நிகழ்வு பிரதானை பெரிதும் உலுக்கியது.  அவருக்கு ஐந்து மகான்கள் கனவில் வந்து ஆறுதல் கூறினர்.  அவர்களில் ஒருவர் சாய்பாபா.  அக்கணமே பாபாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ஷீர்டிக்குச் செல்ல வேண்டும் என எண்ணினார்..

அந்த எண்ணத்தில்  சிறிதும் தாமதிக்காமல்  ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசித்தார். அப்போது பாபா, "மண் மண்ணோடு சேர்ந்ததற்கு முட்டாள்தனமாக அழலாமா?  ஒருநாள் நாமும் அங்கே போக வேண்டியவர்கள்தானே?" என்று கூறியதும் பிரதான் தம்பதிகள் அசந்து போயினர்.  மேலும் பாபா, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்களைக் குறிப்பிட்டு க்ஷேமம் விசாரித்தார்.

அதேநேரம்,  பிரதானின் குடும்ப ஆலோசகராகவும் அவர்கள் வீட்டில் பூஜை, ஹோமம், சுபகாரியங்கள், திதி முதலானவற்றை நடத்தும் பூஜாரியாகவும் இருந்த மாதவ்பட்டுக்கு , பிரதான் குடும்பத்தினர் பாபாவை வழிபடுவது பிடிக்கவில்லை.

பிரதானின் மற்றொரு மகன் பாபு நிமோனியா காய்ச்சல் முற்றி ஜன்னி வந்து பிதற்றிக் கொண்டிருந்தான்.  பாபுவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவன் அபாயகட்டத்தில் இருப்பதாகக் கூறினர்.

"இதற்கு காரணம், ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நீங்கள்  முஸ்லிம்பக்கிர் பாபாவை வழிபட்டதால் ஏற்பட்ட அபச்சாரமே !" என்று  மாதவ்பட் கூறினார்.

அன்று இரவு மாதவ்பட் கனவில் பாபா தோன்றி,   " பாபுவுக்கு காய்ச்சல் வந்ததற்கு நான் காரணமா ?" என்று அதட்டலாகக் கேட்டார்.  அதைக் கண்டு மிரண்ட மாதவ்பட் கனவைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.

மறுநாள் பிரதான் வீட்டில் மாதவ்பட் நடத்திய யாகம் பூஜை ஜபங்களும் பலிக்காமல் போக, பாபுவின் நிலை முன்பைவிட மோசமானது.  இவனையும் இழந்துவிடுவோமோ என்று பிரதான் தம்பதியர் கண்ணீர் உகுத்தனர்.

மாதவ்பட் மனம் திருந்தியவராக தன் அஹங்காரத்தை விடுத்து,  பூஜை அறையில் இருந்த பாபாவின் படத்தின் முன் விழுந்து,  "பாபா ! உன்னையே முழுமுதற் தெய்வமாக எண்ணிக் கும்பிட்ட பக்தர் வீட்டில் துக்கம் வரலாமா?   இன்று மாலை நான்கு மணிக்குள் குழந்தை கீழ் தளத்துக்கு வர முடிந்தால்,  நீங்களே மும்மூர்த்திகளின் அவதாரம் தத்தாத்ரேயர் என்பதை ஒப்புக்கொள்கிறேன் !"  என மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

என்ன ஆச்சர்யம்!  பாபுவின் காய்ச்சல் படிப்படியாக குறைந்து,  முனகல் புலம்பல் நின்று நினைவு திரும்பியது.  சரியாக மாலை 4 மணிக்கு, "அப்பா !  நான் கீழே வந்து படுத்துக் கொள்கிறேனே?" என்று கேட்க,  ஆச்சர்யத்தோடு பார்த்த மாதவ்பட் பாபாவின் படத்தின் முன் வெட்கித் தலைகுனிந்தார்.  "அந்த நொடி முதலே மாதவ்பட் பாபாவின் தீவிர பக்தரானார்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 29, 2019

பாபா உதியின் மகிமை

தொடர்புடைய படம்

கர்னூல் மாவட்டத்திலுள்ள தோன் என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு.எம்.கே. ஆனந்த வெங்கடேஸ்வரலு (ஆனந்த்), திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தார்.  இவருக்கு மூன்று சகோதரர்கள்.  அவரது மூன்றாவது சகோதரர் சேஷுமணிக்கு பிறந்த மூன்றாவது மாதத்தில் இளம்பிள்ளைவாதம் நோய் ஏற்பட்டது.  அதனால், சேஷுமணியின் இடதுபக்க உறுப்புகள் செயலிழந்து போயின.  பத்து வயதாகியும் சேஷுமணியால் நிற்கக் கூட முடியவில்லை.

வித்யா நகரில் சாயி பக்தர் ஸ்ரீபரத்வாஜா வந்திருந்ததாக கேள்விப்பட்டு,  அங்கே நடக்கும் வியாழக்கிழமை சாயிபஜனையில் கலந்து கொள்ள நண்பருடன் சென்றார். அந்த சமயம் ஹரிஹரைச் சேர்ந்த ஸ்ரீசமர்த்த நாராயண மகராஜூம் அங்கு வந்திருந்தார்.

ஆனந்த வெங்கடேஸ்வரலு,  தன் தம்பியின் நிலைமையைப் பற்றி அவர்களிடம் வருத்தத்துடன் கூறி காலில் விழுந்து வணங்கினார்.

"ஹனுமான் சாலீஸாவைப் படித்தபடி இந்த விபூதியை உன் தம்பியின் உடலில் தடவு.  குணமாகிவிடும் !" என்று விபூதி அளித்தார் ஸ்ரீசமர்த்த நாராயண மகராஜ். 

"அந்த சாயிபாபாவே இவரின் ரூபத்திலிருந்து விபூதி அளிக்கிறார்! நம்பிக்கையுடன்  பெற்றுக்கொள்!  மற்றதை பாபா பார்த்துக் கொள்வார்!"  என்றார் பரத்வாஜா.

தன் இரண்டாவது சகோதரர் மூலமாக அந்த சக்தி வாய்ந்த விபூதியை வீட்டிற்கு அனுப்பி விபரத்தை சொல்லி அனுப்பினார். அவரின் ஊரோ ஒரு குக்கிராமம், அவர்கள் வீட்டிலோ "ஹனுமான் சாலீஸா" இல்லை.  அதைப் படிக்காமல் விபூதியை தடவக்கூடாது என்று நினைத்து, வீட்டில் உள்ளவர்கள் அந்த விபூதி பொட்டலத்தைப் பிரிக்கவே இல்லை.  அப்படியே சேஷுமணியின் தலையணைக்கடியில் வைத்துவிட்டனர்.

மறுநாள் ஆனந்த வெங்கடேஸ்வரலு கனவில் பாபா தோன்றி , தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த பக்தர்களிடம் "இவனை நான் நடக்க வைத்தேன்  !  ஆனால் இன்னும் இவன் நம்பவில்லை!"  என்று ஆனந்தைச் சுட்டிக் காட்டினார்.  ஆனந்துக்கு எதுவும் புரியாமல் கனவிலிருந்து விடுபட்டார்.

அதற்கடுத்த வாரம் ஊருக்குப் போகும்போது தன் சகோதரன் சேஷுமணி நடந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தோடு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.  அப்போதுதான் தான் கண்ட கனவுக்குப் பொருள் புரிந்தது.   "தடவாவிட்டாலும் தலையணைக்கடியிலிருந்த சாயியின் விபூதியே நடக்கும் ஆற்றலைத் தந்திருந்ததை நினைத்து வியப்புற்றார்."http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 28, 2019

வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் நமது பாபா


ஷாமாவின் தம்பியான பாவாஜி சாவூல்கிணற்றுக்கு அருகில் வசித்து வந்தார்.  பாவாஜியின் மனைவிக்கு அடிவயிற்றில் இரண்டு கட்டிகள் இருந்தது. அதனால் அடிக்கடி காய்ச்சலும், வாந்தி பேதியும் ஏற்பட்டது.

அந்த கட்டியின் வலி தாளாமல் பாவாஜியின் மனைவி துடிதுடித்து தினமும் தனது கணவரிடம் அழுது புலம்பினாள்.  இந்த வேதனையைப் பொறுக்க முடியாத பாவாஜி ஷீர்டிக்கு வந்து, தனது அண்ணன் ஷாமாவிடம் தனது மனைவிபடும் துன்பத்தை பற்றிக் கூறி உதவும்படி வேண்டினார்.

ஷாமா அவரை உடனடியாக மசூதிக்கு அழைத்துச் சென்றார்.  அங்கே பாபாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார்.  அப்போது ஷாமா பாபாவிடம்,  தனது தம்பி மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி, "பாபா!  தாங்களே வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் ! தாங்களே இவர்களைக் காப்பாற்ற வேண்டும் !"  என்று கூறி,  தற்போதைக்கு தனது தம்பியுடன் ஊருக்கு போகவும் அனுமதி கேட்டார்.

பாபா ஷாமாவிடம் உதியைக் கொடுத்து ,  'இந்தா! இந்த உதியை கட்டிகளின் மீது பூசச் சொல்!  கொஞ்சத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வை!  இந்தப் பின்னிரவு நேரத்தில் நீ போக வேண்டாம்.  காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடு!" என்றார். 

பாபாவிடமிருந்து உதியைப் பெற்றுக் கொண்ட ஷாமாவின் தம்பி நேராக தனது வீட்டிற்கு சென்றார்.  அங்கு தனது மனைவிக்கு கட்டிகள் இருந்த இடத்தில் உதியைப் பூசிவிட்டு, கொஞ்சம் உதியை தண்ணீரிலும் கலந்து கொடுத்தார்.  அடுத்த நிமிடமே அவளுக்கு வலி குறைந்து வியர்த்துக் கொட்டி ஜுரம் இறங்கியது.  தூக்கமும் வந்தது.  நன்றாக தூங்கி காலையில் எழுந்து பார்த்தால்,  வயிற்றுக்கடியிலிருந்த கட்டியைக் காணவில்லை.  வாந்தி பேதியும் நின்றிருந்தது. பாவாஜியின் மனைவி பாபாவின் லீலையை எண்ணி வியந்தார்.

காலை நேரம் பசித்ததால் எழுந்து டீ போடத் துவங்கினாள்.  அந்த நேரம் ஷாமா அங்கு வந்தார்.  நேற்றிரவு முழுவதும் உடம்பு சரியில்லாமல் இருந்த பெண் சுறுசுறுப்பாக டீ போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷாமா அதிசயித்தார். "காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடு!" என்ற "பாபாவின் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை"  என்று எண்ணி புல்லரித்து கண் கலங்கி நின்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 27, 2019

பாபாவின் உபதேசம்

Image may contain: 1 person

ஷீரடியில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம்.  அன்றைய தினம் மசூதியில் பாபாவைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாயிருக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஹேமத்பாந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபாவின் இடதுபுறம் ஷாமாவும்,  வலதுபுறம் வாமன்ராவும் அமர்ந்திருந்தனர்.

பாபா சிரித்தபடி, "ஷாமா!  ஹேமத்தின் கோட்டு மடிப்பில் சில நிலக்கடலைப் பருப்புகள் இருக்கின்றன பார்!" என்றார்.

உடனே  ஹேமத்பாந்த் தன்னுடைய கோட்டை உதறிவிட, அதிலிருந்து நிலக்கடலைப் பருப்புகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

"என் கோட்டு மடிப்பில் கடலைப்பருப்பு எப்படி வந்தது?  யார் போட்டது?"  என ஆச்சர்யத்தோடு கேட்டார் ஹேமத்.

"இது என்ன புதுமை?  சந்தைக்குப் போய் நீயே கடலைப்பருப்பு வாங்கித் தின்றிருப்பாய் ! இதிலிருந்து தனியாகத் தின்னும் பழக்கம் உனக்கிருப்பது இன்று வெளிப்பட்டது" என்றார் பாபா.

"பாபா !  நான் இதுவரை சந்தைக்குப் போனதும் இல்லை, போகவும் இல்லை.  கடலைப்பருப்பு வாங்கித் தின்னவும் இல்லை.  அப்படியிருக்க,  என் மீது இப்படி பழி போடுகிறீர்களே பாபா?"  என்று வருத்தத்துடன் கேட்டார் ஹேமத்பாந்த்.

அதற்கு பாபா, "அப்படியானால், கடலைப்பருப்பு கால் முளைத்து வந்ததா?  இன்றில்லாவிடில் நேற்று இது நடந்திருக்கலாம்!  யாராவது ஒருவர் தின்னும்போது உங்களுக்கும் நாலு கடலை கொடுத்திருக்கலாம்!" என்றார்.

மேலும் பாபா கூறும்போது,  "இங்கு பலபேர்,  ஆத்மாவில் கடவுள் இருப்பதாக வெளியில் டம்பமாகச் சொல்லிக் கொள்கிறார்கள் !  ஆனால் நம்புவதில்லை!  நம்பியிருந்தால் எதையும் உண்பதற்கு முன் கடவுளுக்கு ஆத்ம நிவேதனம் செய்யத் தவறமாட்டார்களே !  அப்படி ஆத்ம நிவேதனம் செய்யும் பழக்கம் இருந்தால்,  இது தெய்வம் சாப்பிடுவதற்கு உகந்ததா?  புனிதமானதா? என்று ஒருநிமிடம் யோசித்தாலும் போதும்,  கண்ட இடத்தில் கண்டதையும்,  கடவுளுக்கு படைக்கத் தகாததையும் வாங்கிச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்களே !. அப்படியிருந்துவிட்டாலே அவருக்கு தாமஸகுணம் மறைந்து சத்வகுணம் அதிகமாகும்" என்று ஹேமத்தைக் காரணமாக வைத்து பாபா இந்த உபதேசம் செய்ததாக மசூதியில் இருந்த மற்றவர்கள் கருதினார்கள். 

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 26, 2019

உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு ! இனிமேல் இங்கு வராதே !

Image may contain: 1 person, closeup

மும்பைக்கருகில் அக்ரூல் என்னுமிடத்தில் வசித்த திரு.கேசவ்பிரதான் என்பவர் 1916-ல் தன் நண்பரோடு ஷீரடிக்கு பாபாவைத் தரிசிக்க வந்தார்.  அவர் பாபாவிடம், "பாபா! என்னிடம் அன்பு கொண்ட எல்லோரும் என் குழந்தைகளே என்கிறீர்கள்!  அப்படியானால் ஏன் நீங்கள் அக்ரூலுக்கு வரக்கூடாது?"  என்று கேட்டார்.

பாபா அவரிடம் தன் படம் ஒன்றைக் கொடுத்து,  "உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு !  இனிமேல் இங்கு வராதே !"  என்றார்.  பாபாவின் உத்தரவுக்கு உட்பட்டு , கேசவ்பிரதான் தனது சொந்த ஊரான அக்ரூலில் பாபாவுக்கு கோவில் கட்டினார்.  அந்த கோவிலில் பாபாவின் தரிசனம் வேண்டி வந்தவர்கள் பலரும் "கோவிலின் எல்லையில் பாபா சகஜமாக நடமாடுவதைப் பார்த்ததாகக் கூறினார்கள்" 

1940-ல் கேசவ் பிரதானின் காலம் முடிந்தது.  பாபா ஆலயத்தைப் புதுப்பிக்க குப்தா,  நாராயண் புரோஹித், தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வேல்வால்கர் போன்ற பக்தர்கள் முயன்றனர்.  ஆனால் அதற்கான போதிய நிதி வசூலாகவில்லை. 

நிதி வசூலுக்கு வேறுவித முயற்சியாக,  கோவிலில் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சப்தாக பாராயணம் செய்யப்பட்டது.  பாராயணத்தின் நான்காவது நாள் நாராயண் புரோஹித் கனவில் பாபா தோன்றி,  "என்னுடைய தூனி எங்கே?  தூனி இல்லாத ஆலயத்துக்கு எப்படி வசூலாகும்?" என்று பாபா கோபமாகக் கேட்டதாகவும், அதே சினத்துடன் அவர் மீது கற்களையும் வீசி எறிந்ததாகவும் நாராயண் புரோஹித் கூறினார்.

உடனடியாக  மற்ற கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து அனுமதி பெற்று ,  கோவில் வளாகத்திலேயே 8"*4" சதுர அடிப்பரப்பில் தூனிக்கான கட்டிடம் எழுப்பி,  7-4-1949ல் காலை பத்து மணி சுபமுகூர்த்த வேளையில் தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வால்வேல்கர் தூனியை ஏற்றினார்.

தூனியை நிறுவிய மறுநாள் அதிகாலை சுமார் மூன்று மணியளவில், "பாபா கோவிலின் கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் கதவை மூடிக்கொண்டதைக் கண்கூடாகப் பார்த்ததாக" அந்த ஊர் மக்கள் பலரும் ஆச்சர்யத்தோடு கூறினர்.

Image may contain: 1 person, sitting

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 25, 2019

பாபா காலண்டர் / பாபா பேசிய அதிசயம்

Image may contain: 1 person, indoor
                                   
                         " யாமிருக்க பயமேன் "
                            துவராகமாயி  தரிசனம் தருகிறார் பாபா. 

பாபாவின் பக்தர் பந்காராவின் அனுபவம்.

திரு. பங்காரா என்ற டெல்லிவாசி, எல்லா மகான்களிடமும் பக்தி செலுத்தும் பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் மிகவும் பழைய பழக்க வழக்கங்களில் ஊறிய அவரது மனைவிக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. 1956ஆம் ஆண்டு அவருக்குச் சாய்பாபாவின் படமுள்ள ஒரு காலண்டர் கிடைத்தது. பாபாவின் மேல் விசேஷ பக்தி என்று எதுவும் இல்லாமல், அதை அவர்கள் தங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்தனர். ஒருநாள் அவர் படுக்கை அறையிலிருந்து வெளியே வரும்போது, காலண்டரில் இருந்த மகானை வணங்கி, அவரது பாதங்களைத் தொடும்படி திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதைப்பற்றி தம் மனைவியிடம் தெரிவித்தால், வீணாக விவாதம் வளரும் என்று அஞ்சியவராக, அவர் அதைத் தம் மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.அவரது மனைவி, தான் வீட்டில் இருந்த படங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, படுக்கை அறையிலிருந்து ஒரு மர்மமான குரல், "குழந்தாய், எனக்குத்  தவறாமல் மாலை அணிவிப்பாய், உனக்கு நன்மை உண்டாகும் " என்று கூறுவதைக் கேட்டதாகவும் , இருமுறை இச் சொற்களைக் கேட்ட அவள், தன்னை அறியாமலேயே, அதன்படி செய்ததாகவும் கூறினாள். திரு. பந்காராவின் நண்பர் ஒருவர், அவரது அனுபவங்களைக் கேட்டு, பாபாவின் படத்துக்குச் சட்டம் (FRAME) இட்டு, ஒரு வியாழக்கிழமையன்று, அவர்களது பூஜையறையில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ய, அவரது மனைவி அதற்கு நாள்தோறும் மாலையிடுவது வழக்கமாயிற்று.
                                ஒரு நாள் பாபாவின் படத்திலிருந்து, அவளது ஆசை என்ன என்று கேட்கும் குரலை அவள் கேட்டாள். தன்  கணவன் நலமாயிருக்க வேண்டும் என்ற தன் முதல் ஆசையையும், பின்னர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்ற இரண்டாவது ஆசையையும் தெரியபடுத்தினாள். சாயியின் பூஜை தொடங்கிய ஒரு வாரத்தில் வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டது.  திரு.பந்காராவிற்கு ஊதிய உயர்வும் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்  திரு.பந்காராவுக்கு ஒரு மகன் பிறந்தான்.  
 பந்காரா குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் பாபாவிடம் பிரார்த்தனை செய்தவுடன், பொருத்தமான தீர்வு அவர்கள் மனதில் உதிக்கும். பாபாவின் அருளால் அவர்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறி வந்தது.
எங்கெல்லாம் பாபாவின் படம் இருக்கிறதோ, அங்கே பாபா வாசம் செய்கிறார்.
பாபாவை நேரிலே தரிசிப்பதற்கும் அவரின் படத்தை தரிசிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 24, 2019

பாபாவே ஸ்ரீ தத்தாத்ரேயர்


1911ம் வருடம் டிசம்பர் மாதம் ஒருநாள் மாலை ஐந்து மணி.  அன்று தத்தாத்ரேய ஜெயந்தி.  மசூதியில் பாபா பக்தர்கள் புடைசூழ அமர்ந்திருந்தார்.  திடீரென்று பாபா, "எனக்கு பிரசவ வலி கண்டுவிட்டது.  எல்லோரும் அப்பால் போங்கள்.  நான் பிரசவித்ததும் வரலாம்"  என்று கூச்சலிட்டார்.

அந்த நேரம் அவர் அனுசூயா தேவியாகவே மாறியிருக்க வேண்டும் என்கிறார் பலவந்த் கோஜோக்கர்.

எல்லோரும் போன பிறகு சிறிது நேரத்தில் "எல்லோரும் வந்து குழந்தையை பாருங்கள்" என்ற பாபாவின் குரல் கேட்டது.

பலவந்த் கோஜோக்கர் உட்பட அனைவரும் ஓடி வந்து பாபாவின் இருக்கையை பார்த்தனர்.  அங்கே மூன்று தலையுள்ள குழந்தையை பார்த்து அனைவரும் பிரம்மித்துப்போய் நின்றனர்.  இந்த காட்சி ஒருநிமிடம் நீடித்தது.  புராணங்களின்படி தத்தாத்ரேயர் அவதரித்த நேரம் அது.

தொடர்புடைய படம்

                                             ஸ்ரீ  தத்தாத்ரேயர்  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 23, 2019

சாயி தன் பக்தர்களை வருத்தப்பட விடமாட்டார்.தோபேஸ்வரைச் சேர்ந்த காகாமஹாராஜ் புகழ்பெற்ற மகான்.  அவர் ஒருமுறை பூனாவுக்குச் சென்றிருந்தபோது, அவரைக் காணவும்,  ஆசீர்வாதம் பெறவும் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடினர்.  
மகான் காகாமஹாராஜைக் காணும் ஆர்வத்தில் கூடிய கூட்டத்தில் எச்.வி. ஸாதே எனும் ஸாயி பக்தரும் ஒருவர். 

ஒவ்வொருவரும் மஹாராஜை தங்களின் இல்லத்திற்கு பிட்சைக்கு அழைத்தனர்.  பிட்சைக்கு அழைத்த பக்தர்களின் பலரின் அழைப்பையும் மஹாராஜ் அவர்கள் தட்டிக் கழித்தார்.  ஸாதேயும் தன் பங்குக்கு மஹாராஜை அழைக்க,  அவரின் அழைப்பும் மறுக்கப்பட்டது.  இது ஸாதேவுத்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது.

அன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் ஒரு சீடன் ஸாதேயிடம் வந்து, "காகா மஹாராஜூக்கு நாளை பிட்சை உங்கள் வீட்டில்தான்"  என்று சொல்லிச் சென்றான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத ஸாதே கொண்ட ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

ஸாதே, உடனடியாக மளமளவென்று காய்கறிகள், அரிசி, மளிகை, வெண்ணெய், நெய், பூ, பழம், தாம்பூலம் என விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தடபுடலாக செய்துமுடித்தார்.

மறுநாள்,  பிட்சை முடிந்து காகா மஹாராஜ் ஓய்வாக இருக்கும்போது, அவரிடம் ஸாதே மிகவும் பவ்யமாக,  "மஹாராஜ் மன்னிக்கவும்!  முதலில் பிட்சைக்கு அழைத்த போது மறுத்தீர்கள்!  அப்புறம் தங்களை ஒப்புக் கொள்ளச் செய்தது எதுவோ?" என்று வினவினார்.

அதற்கு காகாமஹாராஜ் பலத்த சிரிப்புடன், "ஒப்புக் கொள்ளச் செய்தது எது என்று கேட்காதே!  எவர் என்று கேள்!  இதோ உன் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறாயே! இந்த, இந்த சாயிதான் என்னைக் குடைந்து தள்ளிவிட்டார்.  தன் பக்தர்கள் வருத்தப்பட அவர் தாங்கமாட்டாரே!" என்று ஸாதேயின் வீட்டில் மாட்டியிருந்த பாபாவின் படத்தைக் காண்பித்து புன்னகைத்தார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 22, 2019

காப்பாற்றுங்கள் பாபா, எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்


முதல் உலகப் போர் நடந்த சமயம்.... இந்திய கடற்படை தளபதியாக இருந்த கைகன்சிரி தருவாலாவும் போரில் பங்கேற்றார்.

அவருடன் சென்ற கப்பல்கள் அனைத்தையும் எதிரி நாட்டு விமானங்கள் குண்டு வீசி அழித்து கடலில் மூழ்க செய்து விட்டன. அடுத்து தன் கப்பல் மீதும் குண்டு வீசப்படும் என்று தருவாலாவுக்கு தெரிய வந்தது. அந்த கப்பலில் இருந்த அனைவரும் மரண பீதியில் அழுதனர். ஆனால் தருவாலா மனம் கலங்கவில்லை. சாய்நாதரை கண் கண்ட தெய்வமாக வழிபட்டு வந்த அவர் நம்பிக்கையோடு பாபா படத்தை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்தார். 

பாபாவின் கண்களை உன்னிப்பாகப் பார்த்தப்படி, ‘‘எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். காப்பாற்றுங்கள் பாபா. தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்’’ என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரடி மசூதியில் அப்போது பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்த சாய்பாபா திடீரென அலறியபடி கீழே விழுந்தார். அனைவரும் ஓடோடி வந்து பாபாவை தூக்கினார்கள். 

பாபா சட்டையில் இருந்து தண்ணீர் வழிந்தது. அவர் தலை, உடல் அனைத்தும் தொப்பலாக நனைந்திருந்தது. ஏதோ தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தவர் போல பாபா காணப்பட்டார். அவர் இருந்த இடத்தில் தண்ணீர் வழிந்தோடி சிறு குளம் போல தேங்கி விட்டது. இதைப் பார்த்து பக்தர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர். ‘‘என்ன நடந்தது. பாபா’’ என்று கேட்டார். 

அப்போது ‘‘அவர் 3 கப்பல்களையும் காப்பாற்றி விட்டேன்’’ என்றார். வேறு எதுவும் அவர் சொல்லவில்லை. இதனால் சீரடியில் இருந்த யாருக்கும் அவர் சொன்னது புரியவில்லை. 

3 நாள் கழித்து மசூதிக்கு ஒரு தந்தி வந்தது. தளபதி தருவாலா அதை அனுப்பியிருந்தார். ‘‘பாபா உங்கள் அருளால் 3 கப்பல்களில் இருந்த நாங்கள் குண்டு வீச்சில் சிக்காமல் தப்பி விட்டோம். உங்களுக்கு கோடான கோடி நன்றி’’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதன் பிறகே தொலை தூரத்தில் கடலுக்குள் தளபதி தருவாலாவை பாபா காப்பாற்றி இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த அற்புதம் உறுதிபடுத்தியது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 21, 2019

உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்பாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள் விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாயி சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார். சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை ( ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ ) சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால் எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். நம்பிக்கையோடோ, நம்பிக்கை இல்லாமல் கூட சொல்லுங்கள். சாயி நாமம் எல்லா நல்ல மாற்றங்களையும்  அளித்து சாயியின் மீது அதீத பக்தி உடையவராக உங்களை ஆக்கும். 

"தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்."


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 19, 2019

பாபா எப்போதும் உன் பின்னே இருந்து பாதுகாக்கிறார்.

                      Image may contain: 35 people


சத்குரு தம் பக்தர்களிடம் கொள்ளும் அன்பு, ஒரு தாய் தன்  குழந்தையின் மேல் காட்டும் அன்பைப் போன்றது என்றாலும் அதனையும்விட மேலானது. அவரைச் சரணடைபவர்கள் யாராயிருந்தாலும், அவர்களுடைய பெரிய, ஏன் சிறிய துன்பங்கள் யாவையும் அவர் கவனித்துக் கொள்வார். அவருடைய சொற்கள் இறுதியான உண்மை என்பதால் அவர் உடலை விட்டு நீங்கியபின்பும், அவர் உறுதியளிப்பவை யாவும் நடைபெறுகின்றன. ஓர் எடுத்துக்காட்டை காண்போம்.
சில சமயங்களில் குதிரை பூட்டிய வண்டிகளில் பாபா தொலை தூர இடங்களுக்குச் செல்வதுண்டு. ஹீராலால் என்ற பக்தர் அவரது வண்டியை ஓட்டுவார். பாபா ஒருமுறை இன்னும் சில தினங்களில் தம் உடலை விட்டு நீங்கப் போவதாகக் கூறியவுடன் ஹீராலால் அழ ஆரம்பித்தார். ஹீராலால் பாபாவிடம் 'யாருடைய பாதுகாப்பில் எங்களை விட்டு விட்டு நீங்கள் செல்கிறீர்கள்?' என்றார். பாபா அவரிடம் 'நீ எப்போதும் எனக்கு முன்னே இருப்பாய்! (குதிரை பூட்டப்பட்ட வண்டியில் வண்டியோட்டி முன்னால் அமர்ந்திருப்பான்) நான் எப்போதும் உனக்குப் பின்னே இருப்பேன்!' என்றார்.
                                              - ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி-

பின்குறிப்பு : இங்கு பாபா என்று குறிப்பிட்டது ஹஸ்ரத் பாபா தாஜூதின் என்ற சத்குருவை. பாபாவின் காலத்தில் வாழ்ந்த ஐந்து சத்குருக்களில் ஒருவர். ஷீரடியின் ஸ்ரீ சாய்பாபா 
இந்த ஐந்து குருக்களின் குழுவிற்குத் தலைமையாகப் பரம சதகுருவாக விளங்கினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 18, 2019

பக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபாஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது  இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 17, 2019

பாபாவின் சமாதி /சாயி சமஸ்தானம் உருவாகுதல் / காகா சாஹேப் தீக்ஷித்

Image may contain: 1 person, sunglasses and text

1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபாவின் உடலைவிட்டு உயிர் பிரிந்த போது, எல்லா பக்தர்களுக்கும் அது பெருத்த அடியாக இருந்தது. சாயியின் உடலை என்ன செய்வது என்பது பற்றி  மேலும் குழப்பமும், முரண்படும் ஏற்பட்டன. "என்னுடைய சமாதியிலிருந்தும் நான் சுறுசுறுப்பாக இயக்குவேன்" என்பது பாபாவின் அருள் முரசு. ஆகவே அவரது உடலை என்ன செய்வது என்பது பற்றி சரியான முடிவு அத்தியாவசியமாயிற்று. அவருடைய சமாதி எங்கே அமையவேண்டும்? அதை யார் கட்டுவது? யாருடைய பொறுப்பில் அது இருக்கவேண்டும்? ஜனங்களுடைய (இந்துக்கள், முஸ்லீம்கள் இரு சாராருடையவும்) பெரும்பான்மையான கருத்து, பாபா மறைந்த போது, பாபா மசூதியில் வசித்ததால் அவர் ஒரு முஸ்லீம் என்பது; ஆகவே படே பாபா உள்பட எல்லா முஸ்லீம்களும் உடலைச் சூழ்ந்து கொண்டு அவருடைய சமாதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகிவிடும். ஆகவே முஸ்லீம்கள் சமாதி தங்கள் பொறுப்பில் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர். துரதிருஷ்ட  வசமாக எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள். அந்த அவலியாவுக்கு ஏற்றதான ஒரு சமாதி கட்டடத்தை எழுப்புவதற்கு போதுமான செல்வாக்கும், வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. பாபாவை வழிபட்ட பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்று அடித்துக்கூறி அக்காரணத்தால் சமாதியை வழிபட தாங்களே தகுந்தவர்கள் என்பதை நிலைநாட்டினார். அங்கே வந்த கோபர்காம் மாம்லத்தார் இரு தரப்பினரையும் அவரவரைச் சார்ந்த ஜனங்கள் கையொப்பமிட்ட மகஜர்களைத் தயார் செய்து சமர்பிக்கும்படி  கொண்டார். இந்த விஷயத்தில் பாபாவின் விருப்பம் என்னவாயிருக்கும் என்பது நன்கு அறியப்படவில்லை. அவர் அதை பற்றி பேசவில்லை. ஆனால் அவர் கடைசியாக உடல் நலமின்றி இருந்தபோது, 'வாடாவுக்கு என்னை எடுத்திச் செல்லுங்கள்' (அதாவது பூடி வாடா ) எனக் கூறினார். பூடியின்  கட்டடம் தமது சமாதியாக இருக்க வேண்டுமென்பது பாபாவின் பூரண விருப்பம். மாம்லத்தார் தமது சிரமத்தைக் கூறினார். எல்லா பிரிவினரும் ஒத்துக் கொண்டால் அந்த ஒப்பந்தத்தின் அடைப்படையில் உடலை என்ன செய்வது என்று அவரால் தீர்மானித்துக் கூற முடியும் எனப் பகன்றார். அப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு வராவிடில் அவர்கள் அகமத்நகர் சென்று ஜில்லா மாஜிஸ்டிரேட்டின் உத்தரவைப் பெறவேண்டும் என்றும், மாம்லத்தாரான தாம் அந்த உத்தரவைநிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டார். காகா சாஹேப் தீக்ஷித் அகமத் நகர் செல்ல தயாரானார். பாபாவின் தீவிர பக்தரான இவர் மிகவும் புகழ்பெற்ற சட்ட ஆலோசகர் ஆவார். அவர் அகமத்நகர் சென்றால் அவர் தமக்கு சாதகமாக உத்திரவைப் பெற்றுவிடுவார் என்றும் தங்களுக்கு எதுவுமிராது என்றும் முஸ்லீம்கள் யோசித்தனர். ஆகையால், அவர்கள் இந்துக்களுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்; பாபாவின் உடல் பூடிவாடாவில் அடக்கம் செய்யப்படவேண்டும். வழக்கம் போல் சமாதியின் நிர்வாகப் பொறுப்பும் இந்துக்களிடம் இருக்கும்; ஆனால் சமாதிக்கு முஸ்லீம்கள் தடையின்றி வந்து போகலாம் என்ற மரபு தொடரவேண்டும். அதன்படி மாம்லத்தார் தாமே ஒரு உத்தரவு பிறப்பித்தார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாபாவின் உடல் பூடி  வாடாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அங்கேயே உள்ளது. அது ஒரு தற்காலிக தீர்வே. அதைவிட முக்கியமானது வருங்காலத்தில் நடக்கவேண்டியதற்கான வழிமுறை. அது அகமத்நகர் ஜில்லா கோர்ட்டரால்  நிர்ணயிக்கப்படும் ஒரு திட்டம். தமது சிறந்த சட்டத் திறமை. லௌகீக ஞானம், உயர்ந்த பக்தி ஆகியவற்றைக் கொண்டு தீக்ஷித் ஒரு திட்டம் தயார் செய்து, செல்வாக்குள்ள பல பக்தர்களின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பித்தார். 1922ம் ஆண்டு ஜில்லா கோர்ட்டால் அந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி சீரடி சாயி சமஸ்தானம், பாபாவின் சமாதி, மற்ற விஷயங்கள் யாவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பதினைந்து நபர்கள் அடங்கிய ஒரு நிர்வாகக் குழு கொண்ட தர்மகர்த்தாக்கள் சபையினரிடம் சமஸ்தான சொத்துக்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தீக்ஷித் கௌரவ காரியதரிசியாக பொறுப்பேற்பதில் திருப்தி அடைந்து, அவருடைய நிர்வாகத் திறமையால் எல்லா பிரிவினரையும் சந்தோஷமடையச் செய்தார். இந்த விதமாக தீக்ஷித் சீரடி சாயி சமஸ்தானத்தின் வெற்றிக்கு உறுதியான அஸ்திவாரத்தை போட்டார். இன்று சமஸ்தானம் உள்ள நிலைக்கு அவரே முக்கிய காரணமாவார்.

                  
                                               "காகா சாஹேப் தீக்ஷித்"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 16, 2019

பாபாவிடம் பக்தியுடன் இருஅக்கல்கோட் சுவாமி சமர்த்த மஹராஜ், இந்தியாவின் தலைசிறந்த மஹான்களுள் ஒருவர். தத்தாத்ரேயரின் அவதாரம். தம்மிடம் வந்தவர்கள் பலருக்கு அவர் உயர்ந்த ஆத்மீக அனுபவங்களைக் கொடுத்து, அவர்களைப் பெரிய மஹான்களாக்கியுளார். அவர் அக்கல்கோட்டில் (மஹாராஷ்டிரம்) 1856 முதல் 1878 வரை வாழ்ந்தார். 1878-ஆம் ஆண்டில் அக்கல்கோட் மஹராஜ் மஹாசமாதி அடைவதற்கான நேரம் நெருங்கிய போது,  கேசவ் நாயக் என்னும் பக்தர், அவரிடம் கண்களில் நீர்மல்க, " மஹராஜ், நீங்கள் போய் விட்டால் எங்களுக்கு வேறு புகலேது? " என்று  கேட்டார். மஹராஜ் , தம் பாதுகைகளைத் தம் பிரதிநிதியாக வைத்து வழிபடும் கேசவ் நாயக்கிடம் கொடுத்து, "எனது அவதாரம் அஹமது நகரிலுள்ள ஷீரடியில் ஏற்படப்போகிறது. அங்கே எப்போதும் செல். அவரிடம் பக்தியுடன் இரு. அவ்வாறு செய்தால் நான் இல்லாததால் துன்பப்பட மாட்டாய். நீ மகிழ்வுடன் இருப்பாய் என்றார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 13, 2019

கூப்பிடும் குரலுக்கு ஓடிப்போய் உதவும் சாய்பாபா

Image may contain: 1 person

சாய்பாபா மீது யார் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் மனங்களை அவரே கட்டுப்படுத்தி, நல்வழியில் மட்டுமே செலுத்தும், தீவிர மனோவசிய சக்தியைக் கொண்டு விளங்கினார், அவர். சாய்பாபா அருளால் எல்லாமும் சாத்தியமாயின. ஏதாவது ஒரு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டு தப்பிப்பதற்காக நாலா பக்கங்களிலும் துணை நாடும் ஆயிரமாயிரம் நபர்களைக் காட்ட முடியும். மன உளைச்சலில் அவர்கள் கேட்பார்கள். "கடவுளே கிடையாதா? அருள் தந்து காக்க, மன அமைதிக்கு எந்த மந்திரங்களும் கிடையாதா? என்னைக் காப்பாற்ற ஏதாவது ஒன்று எதிர் வராதா?" இது போன்ற சூழலில் யார் மூலமாவது தன்னுடைய  மனிதரை  தன்னிடம் இழுத்துக்கொள்கிறார் பாபா. இது முழுக்க முழுக்க பூர்வ ஜென்ம புண்ணியத்தால் நிகழ்வது. பாபாவிடம் சரணடைந்தது மட்டுமல்லாமல், அவர் ஒருவரால் தான் உயிர் குடிக்குமாறு நேரும் இடையூறுகளிலிருந்து காக்க முடியும் என்ற அனுபவத்தை அம்மனிதன் பெறுகிறான். தன்  மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்துவிட்ட பக்தனின் நன்மைக்காக மட்டுமே தனது இறைசக்தி அனைத்தையும் செலவழித்த சாய்பாபாவுக்கு இணையான மற்றொரு சாதுவை, வேறெங்குமே காட்ட முடியாது என்கிறார் நரசிம்ஹ ஸ்வாமிஜி. மேலும் அவர் சொல்கிறார் ; "ஜாதி, மதம், பால் இன  பாகுபாடின்றி மனித குலத்தைக் காக்கவல்ல ஒரே இறை சக்தியாய் நன்மைக் காட்டினார் சாய்பாபா. மனித குலமே அவரை இஷ்ட தெய்வமாகவும் அல்லது வழிகாட்டும் குருவாகவும் கொள்ளுமாறு செய்த அவர், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தர்மத்தின்படி, கூப்பிடும் உண்மையான குரலுக்கு ஓடிப்போய் உதவும் எங்கும் நிறைந்த அருளாய் திகழ்கிறார்.

                Image may contain: 1 person

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 11, 2019

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படி

No photo description available.

ஹரி நாமத்தை விடாது ஜபித்துக் கொண்டேயிருந்த ஒரே காரணத்தினால் ஹரியே தன முன் தோன்றி காட்சியளித்ததாக 
H.S.தீக்ஷித்திடம் சொல்லியிருக்கிறார் சாய்பாபா. அக்கணத்திலிருந்து நோயாளிகளுக்கு மருந்து தருவதை நிறுத்தி விட்டதாகவும் ஹரியை நினைவுபடுத்தும் விபூதியையே சர்வலோக நிவாரணியாகக் கருதி வழங்கி வருவதாகவும் மேலும் சொல்லியிருக்கிறார். தனக்கு இதய நோய் இருந்ததாகவும் அப்போது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை நெஞ்சோடு நெஞ்சாக பொத்தி வைத்து படுத்துக் கொண்டதாகவும் அச்சமயத்தில் அதிலிருந்து இறங்கி உள்போன ஹரி இதய நோயைக் குணப்படுத்தித் தந்ததாகவும் சாய்பாபா சொல்லியிருக்கிறார். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 10, 2019

அலைச்சலும் குழப்பமும்

Image may contain: one or more people


உமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயியின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கு எல்லா அற்புதங்களும் நிகழும்பம்பாயைச் சேர்ந்த கடைக்காரரான சங்கர்லால் கெஷவ்ராம் பட், ஒரு கால் ஊனமானவர். இவர், சாய்பாபாவின் மாயமான தெய்வீக சக்தியைப் பற்றி கேள்விப்பட்டு 1911ல் ஷீரடிக்கு வந்து, சாஷ்டாங்க நமஸ்காரம் சமர்ப்பித்தார். அவரும் அருளாசி தந்தார். பிறகு, தோணித்துறைக்குப் போவதற்காக ஆற்றுநீரில் கொஞ்சம் இறங்கி சங்கர்லால் நடக்கும் போது, தொய்ந்து செயலிழந்திருந்த இவருடைய கால் நரம்புகள் அனைத்தும் புத்துணர்வு பெற்று சகஜமாகிவிட, இவரால் நிமிர்ந்து நெட்டைக்குத்தலாக நிற்க முடிந்தது. கால் ஊனமும் முழுமையாக குணமாகியது.

நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஷீரடியில் ஓட்டலொன்று நடத்தி வந்த அதன் முதலாளி, அவருடைய மகள் வாதங்கண்டவள் என்றும் அதனால் அவளால் நடக்கவே முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மகளை உடனே சாய்பாபாவின் சமாதிக்குக் கொண்டு போய் அங்கேயே படுக்க வைத்துள்ளனர். ஒருசில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தப் பெண் எழுந்து நடந்து கோயிலைச் சுற்றி வருவதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஆச்சர்யத்தில் அறையப்பட்டிருந்த அவளுடைய பெற்றவர்களுக்கு, சாய்பாபா வந்து எழுந்து நடக்கச் சொன்னதாகவும் அவர் சொன்னபடியே செய்வதில் அப்போது தனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறாள் அச்சிறுமி. 

ஆக, சாயியின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கு வாழ்க்கையில்  எல்லா அற்புதங்களும் நிகழும்.  ஓம் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 9, 2019

வெற்றி உனக்கு நிச்சயம்

Image may contain: 1 person
"பாபா !  நிபாட்டில் நாளை விசாரணை.  வெற்றி கிடைக்க ஆசீர்வதிக்க வேண்டும்.  புறப்படுவதற்கு உத்தரவு வேண்டுகிறேன் !" என்றார் பாவ் சாஹேப் துமால்.

"வெற்றி உனக்கு நிச்சயம் வேண்டுமென்றால் பத்து நாட்கள் ஷீர்டியில் இருந்து பஜனையில் கலந்து கொள் !" என்றார் பாபா.

"பாபா !  நாளை என் கட்சிக்காரரை விசாரிக்கப் போகிறார்கள்.  நான் கோர்ட்டில் நாளை கட்டாயம் இருந்தாக வேண்டுமே !" என்று துமால் கலக்கத்துடன் பாபாவிடம் கேட்க,  பாபாவோ கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.  பாபாவிடமிருந்து உத்தரவு வராததால், வேறு வழியின்றி பத்து நாட்களும் துமால் ஷீரடியிலேயே தங்கி பாபா தரிசனத்திலும், பஜனையிலும் , நிவேதனம் தயாரிப்பதுமாக இருந்துவிட்டார். நிபாட் பயணத்தை கைவிட்டார்.

பத்தாவது நாள், "நீ நிபாட்டுக்கு புறப்படு !" என்றார் பாபா.  பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டு உடனடியாக நிபாட்டை சென்றடைந்தார் துமால்.

கோர்ட்டுக்கு சென்றதும், "பத்து நாட்களுக்கு முன்பாக ஜட்ஜ்க்கு அடி வயிற்றில் திடீரென்று கடுமையான வலி ஏற்பட்டதாகவும்,  ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து நேற்றுதான் வீடு திரும்பியதாகவும்,  அதனால் விசாரணை இன்றுதான் தொடங்கவிருப்பதாகவும்" சக வக்கீல்கள் கூறவும்,  'பாபாவின் சர்வசக்தி வாய்ந்த வார்த்தைகளை" நினைத்து பிரம்மித்து நின்றார். 

அதேநாளில் அந்த வழக்கும் துமாலுக்கு சாதகமாக தீர்ப்பு வர,  அவரது கட்சிக்காரர் பெருந்தொகையை துமாலுக்கு பரிசளித்தார்.  அதன்பின்பு, வக்கீல் தொழிலில் துமாலின் புகழ் உச்சத்திற்கு சென்றது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 8, 2019

உயிர் பிரிந்த பின்னும் பாபா துணையாக இருப்பார்

Image may contain: 1 person, indoor

மரணத்துக்குப் பிந்தைய காலகட்டங்களில் இந்துக்கள் கடைபிடிக்கும் கடமைகளையும் சடங்குகளையும் சாய்பாபா மறுத்தவரல்லர். அப்படிப்பட்ட சடங்குகளை சிரத்தையாய்  செய்து முடிப்பதன் மூலம் விடுபட்டுப் போன ஆன்மாவுக்கு சில நல்ல நிகழ்வுகள் நடக்கும் என நம்பினார் அவர். ஆன்மா பிரியும்போதும் பிரிந்த பின்னரும், அதுபோக வேண்டிய பாதையினை சிரமமின்றி வழிநடத்திக் காட்டிக் கொடுக்கும் ஒப்புயர்வற்ற சக்தியினைக் கொண்டு நிகழ்ந்தார் அவர்.  சாய்பாபா சொல்லியிருக்கிறார் ; "என் பக்தன் ஆயிரமாயிரம் மைல்கள் தள்ளி இறந்தாலும், அவனது ஆவியை என்னிடமிழுத்து வந்து அது சிரமமின்றி பிரயாணித்து கரை சேர நான் வழிவகை காட்டித் தருவேன்." என்று 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 7, 2019

சாய்பாபா நம்மைக் காப்பார்


       
பாலாஜி பட்டேல், சாய்பாபாவின் மிகச்சிறந்த பக்தர். சாய்பாபா செல்லும் ஷீரடி சாலைப்பகுதிகளை தினந்தோறும் பெருக்கி சுத்தமாக்கி வைத்திருப்பார் இவர். இவரது முதலாமாண்டு நினைவு தினத்தின் போது ஒரு விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வந்திருந்த விருந்தாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாயிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு. திருமதி பாலாஜி கலங்கினார். அனைவருக்கும் விருந்தளிக்கும் அளவுக்கு கையிலிருப்பிலிருக்கும் உணவு பத்தாது என அவர் விசனப்பட்டார். இதற்கு அவருடைய மாமியார் தந்த ஆறுதல்: "கவலைப்படாதே.  இது நம்முடைய உணவல்ல. அனைத்தும் சாய்பாபாவுடையது. ஒவ்வொரு பாத்திரத்தையும், விபூதி நிரம்பிய சிறு துணி மூட்டையால் மூடு. அந்த மூடியைத் திறக்காமல் பாத்திரத்திலிருப்பவற்றை எடுத்து வந்திருப்போருக்குப் பரிமாறு. இந்த இக்கட்டிலிருந்து சாய்பாபா நம்மைக் காப்பார்." அறிவுறித்தியபடியே அப்பெண்மணி செய்தார். அவரை சந்தோஷத்தின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும்படியாய், இருந்த உணவு அனைவருக்கும் போதுமான அளவுக்கு வந்தது. மிஞ்சியும் போனது. இதுபற்றிய ஹேமத்-பண்ட்டின் குறிப்பு:  " யாரொருவன் சாய்பாபாவைத் தீவிரமாக உணர்கின்றானோ, அதே அளவு ஆழத்தோடு, அவனையும் அவர் உணர்கிறார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 6, 2019

பக்தர் முன் பாபா நேரிடையாகத் தோன்றினார்.

Image may contain: 1 person, closeup

பாலாராம் மாங்கர் என்ற பக்தர் தம் மனைவி இறந்துவிடவே மனம் நொந்து ஷீரடி வந்தடைந்து பாபாவின் நிழலிலே தங்கலானார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பாபா, அவரிடம் பன்னிரண்டு ரூபாய்களைக் கொடுத்து சதாரா ஜில்லாவிலுள்ள மச்சீந்திரகாத் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார். பாபாவை விட்டுப் பிரிந்து செல்ல முதலில் பிரியப்படாவிடினும், பாபா அவ்வூருக்குச் சென்று தியானம்  செய்வது அவருடைய நன்மைக்கே என்று கூறவே மாங்கர் மச்சீந்திரகாத் சென்றார். அங்கே நல்ல இயற்க்கைச் சூழ்நிலையிலே தியானம் செய்து வந்தபோது அவர் ஒரு காட்சியை கண்டார். பாபா அவர் முன்பு நேரிடையாகத் தோன்றினார். தான் ஏன் இவ்வூருக்கு அனுப்பப்பட்டார் என மாங்கர் கேட்க, பாபா,  "ஷீரடியில் உன் மனதில் பல எண்ணங்களும் கவலைகளும் எழுந்து மனம் நிலையற்றிருந்தது. நான் மூன்றரை முழு உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருப்பதாக நீ எண்ணியிருந்தாய். நான் ஷீரடியில் மட்டும் தான் இருக்கிறேனா, அல்லது பக்தர்கள் நினைத்த விடங்களிலெல்லாம் இருக்கிறேனா, என்பதைக் கண்டுகொள். இதற்காகவே இவ்வூருக்கு உன்னை அனுப்பினேன்" என்று கூறியருளி மறைந்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 4, 2019

தன்னை நம்பிய பக்தனை எந்த சூழ்நிலையிலும் பாபா காப்பாற்றுவார்.

Image may contain: 5 people

ஒரு சமயம் பக்தர் கபர்டேயின் மகன் ப்ளெக் நோயால் மோசமாய் தாக்கப்பட்டிருந்த போது சாய்பாபாவிடம் ஓடிப்போன திருமதி  கபர்டே, எப்படியாவது தனது மகனை அவர் காப்பற்றித் தந்துவிட வேண்டுமென மன்றாடியிருக்கிறார். அந்தப் பிளேக் நோயை  தானே ஏற்றுக் கொண்டு விட்டதாய் குறிப்பிட்ட சாய்பாபா, அந்நோய் ஏற்படுத்தித் தரவல்ல BUBOES எனும் அக்குள் வீக்கத்தையும் தம் உடம்பில் காட்டியிருக்கிறார் அவர். 
நெடுநாட்களாக தீராத கண் நோய் கொண்டிருந்த பூனாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, சாய்பாபாவிற்கு  எதிராய் வந்தமர்ந்த  ஒரு சம்பவத்தை எழுதிருக்கிறார்  கபர்டே. நோய்  கண்டு பொங்கிக் கொண்டிருந்த அக்கண்களை  சாய்பாபா ஒருமுறை சிறு  நோட்டம் விட, அதிலிருந்து கொட்டும் கண்ணீரும் நின்றது... வலியும் போனது. பதிலாக சாய்பாபாவின் நயனங்களில் கண்ணீர் பொங்கிப் பொங்கி ஊற்றுவதைக் கவனித்திருக்கிறாள் அவள். நோய் இங்கிருந்து அங்கு போய்விட்டதை அப்போது உணர்ந்தாள். உண்மை என்னவென்றால், தன்னை நம்பிய பக்தனை எந்த சூழ்நிலையிலும் பாபா காத்தருள்வார். எத்தகைய நோயின் பிடியிலிருந்தும் காப்பாற்றுவார். ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 3, 2019

எனக்கு பூஜை செய்ய தேவையில்லை. உறுதியான நம்பிக்கை போதும் .

Image may contain: 3 people, people smiling, people sitting

யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் ஆழிப்பவரும்  குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்
எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பா(BHA)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியால் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


பாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.

பாபா தமக்கு "வேண்டாம்" என்று கூறிய ஷோடோபசார (16 உபசாரங்கள்) பூஜை கீழ்க்கண்டவாறு.

1.ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ  எழுந்தருளும்படி  வேண்டிக் கொள்ளுதல்.

2.ஆசனம்- தெய்வத்திற்கு  ஓர் இருக்கை சமர்பித்தல்.

3.பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச்  சுத்தநீர் சமர்பித்தல் 

4அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.

5.ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

6.ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

7.வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.

8.யக்ஞோபவீதம்- பூணூல் அணிவித்தல்.

9.கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.

10.புஷ்பம்- மலர்களை சமர்பித்தல்.

11.தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.

12.தீபம்- விளக்கை காட்டுதல்.

13.நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.

14.தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.

15.பிரதக்ஷினம்  - வலம்  வருதல்.

16.மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் .  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 2, 2019

பாபாவே எல்லா தெய்வங்களின் அம்சம்

Image may contain: 1 person


தீவிரமான கணபதி பக்தை ஒருத்தி இருந்தாள்.  அவள் தீராத  தலைவலியால் அவதிப்பட்டு வந்தாள்.  எத்தனை மருத்துவம் பார்த்தும் அவளது தலைவலி நோய் தீரவில்லை.

அவள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, ஒருநாள் பாபாவிடம் ஓடோடிவந்து, "பாபா! மருத்துவம் என் தலைக் குடைச்சலோடு தோற்றுவிட்டது.  தாங்கள்தான் மாமருந்து !  தாங்களே கருணை புரியவேண்டும்!" என்று வேண்டினாள்.

பாபா கருணையுடன் அவளுக்கு தன் கரங்களால் உதியை அள்ளிக் கொடுத்தார்.  உதியை வாங்கி தலையில் அணிந்து கொண்ட மறுநிமிடமே அவள் தலைவலி பறந்துவிட்டது.

பாபாவிடம் கண்ணீர்மல்க கைகூப்பி அவள் நன்றி சொன்னபோது, பாபாவோ , "அம்மா ! நீ கொடுத்த எத்தனை நைவேத்யங்களைத் தினமும் தொந்தி புடைக்க உண்டிருக்கிறேன் !  உனக்காக இதுகூட செய்யமாட்டேனா?" என்றார் அன்புடன்.

"பாபா !  நான் தங்களை முதன்முறையாக இப்போதுதான்  பார்க்கிறேன்.  அப்படியிருக்க, தொந்தி புடைக்க எப்படி தினமும் நைவேத்யம் தந்திருக்க முடியும்?" என்று கேட்டாள்.

அதற்கு பாபா , "அம்மா!  உள்ளன்புடன் நீ பூஜிப்பது கணபதியாக, சிவனாக, சத்தியநாராயணனாக இருந்தாலும் அது என்னையே வழிபட்டதாகும் !" என்றார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 1, 2019

BABA IS ALWAYS WITH YOU. HAPPY NEW YEAR 2019

சாய் பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


No automatic alt text available.
குருவின் சரிதத்தை படிப்பதின் பலன்   வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. 

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் ( தமிழ் ), 
ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ( தமிழ் ),
ஸ்ரீ குரு சரித்திரம் ( தமிழ் ),
ஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி ( தமிழ் ),
ஸ்ரீ சுவாமி சமர்த்தர் சரிதம் (ஆங்கிலம் ),
ஸ்ரீ ராம விஜயம் ( தமிழ் ),

ஆகிய புத்தகங்களை நமது தளத்தில் பதிவேற்றியுள்ளோம் https://www.shirdisaibabasayings.com/
சாய் பக்தர்கள் தினமும் படித்தும் மற்றவர்களுக்கு பகிர்ந்தும் எல்லா நன்மைகளையும் பெற வேண்டுகிறோம்.

குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...