பாபுஸாஹேப்ஜோக் என்பவர் கோபர்கானில் வசித்த ஸ்ரீஸஹாராம் மஹாராஜின் பக்தர். பாபாவுக்கும் மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவர். இவர் அடிக்கடி ஸ்ரீஸஹாராம் மஹாராஜின் மடத்திற்கு போவதுண்டு. அங்கு நடக்கும் தியானத்திலும் பூஜைகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். அந்த மடம் அமைதியான கிராமச் சூழலில், மரங்கள் செடி கொடிகள் என ஒரு நந்நதவனமாய் காட்சி தரும் அழகான இடம். அதில் எப்போதும் பட்டுப்போகாத ஓங்கி வளர்ந்த இரண்டு மாமரங்களும் உண்டு.

ஞானிகள் ஒவ்வொருவருக்கும் எப்போதும் ஆத்மார்த்தமான தொடர்பு உண்டு. அந்த வகையில் சாயிபாபாவும் ஸ்ரீஸஹாராம் மஹாராஜாவும் ஒருவருக்கொருவர் ஆத்மாவில் நட்புள்ள நண்பர்கள்.
ஒருமுறை பாபுஸாஹேப்ஜோக் ஸ்ரீஸஹாராம் மஹாராஜின் தரிசனத்திற்காக அவரது மடத்திற்கு சென்றிருந்தார். தரிசனம் முடிந்ததும் ஷீரடிக்குச் செல்லலாம் என நினைத்த ஜோக், "ஸத்குருவைப் பார்க்கப் போகும்போது வெறும் கையுடன் போகக்கூடாதே !" என்று யோசித்தார். அந்த நேரம் மஹாராஜின் மடத்தில் இருந்த மாமரத்திலிருந்த ஒரு பழத்தை பறித்தார். பறித்த பின்தான் தெரிந்தது அது
பழமல்ல காயென்று !.
இருப்பினும் அதை எடுத்துக் கொண்டு ஷீரடிக்கு கிளம்பினார் ஜோக். "கோபர்கான் மாமரத்துப் பழத்தை பாபா விரும்பி சாப்பிடுவாரே ! இப்படி அவசரப்பட்டு நான் பறித்தது மாங்காயாய் போய்விட்டதே! " என்று நினைத்துக் கொண்டே பயணித்த ஜோக், வழியில் மாம்பழம் விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டதும் சந்தோஷமாக நல்ல பழுத்த மாம்பழங்கள் இரண்டை
வாங்கிக் கொண்டார்.
நேராக மசூதிக்கு சென்ற ஜோக், தான் வாங்கிய பழுத்த மாம்பழங்களை பாபாவிடம் சமர்ப்பித்தார். அப்போது பாபா , "அந்த கோபர்கான் பழத்தை எடு !" என்று ஸ்ரீஸஹாராம் மஹாராஜ் மடத்தில் பறித்த அந்த மாங்காயை கேட்டு வாங்கி கண்களில் நீர் பெருக அதை உற்றுப் பார்த்துவிட்டு, "ஜோக் ! இதைத் துண்டுகளாக்கி எல்லோருக்கும்
கொடு !" என்றார்.
பாபாவிடமிருந்து பணிவுடன் அந்த மாங்காயை வாங்கிய ஜோக் , அதை துண்டுகளாக்கி எல்லோருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டார். அது பழுத்த மாம்பழத்தைவிட தேனாக இனித்தது கண்டு அனைவரும் வியந்தனர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil