
பம்பாயில் வசித்த எஸ்.என்.பிரதானும், அவர் மனைவியும் பாபாவின் பக்தர்கள். அவர்கள் தினமும் பாபாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஷீரடிக்கு அடிக்கடி செல்லவேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டாலும் பிரதானின் உடல்நிலை பிரயாணத்துக்கு ஏற்றதாக இல்லை.
10-11-953 அன்று இரவு உணவிற்கு பின் பிரதானும் அவர் மனைவியும் பாபாவின் லீலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது , "பாபா படத்திலிருந்து விபூதி வருகிறது, குங்குமம் கொட்டுகிறது என்கிறார்கள். தேஜஸ்வினிரெலே என்ற பக்தை வீட்டின் பூஜையறையில் பாபாவின் பாதச்சுவடுகள் இருந்ததாம் !... கரக்பூரிலே நாயுடு வீட்டிலே கூட பாபாவின் காலடித் தடம் பதிந்திருந்ததாம் !"... ம்ஹூம் ! நாம் என்ன பாவம் செய்தோமோ ! தினந்தோறும் பாபாவின் சரித்திரத்தை பாராயணம் செய்தும், நமது வீட்டில் ஒரு அதிசயம் கூட பாபா நிகழ்த்தவில்லையே ? நாம் செய்யும் பக்தி பூரணத்துவம் அடையவில்லை போலும்..!" என்று மிகவும் சலிப்புடன் பேசிக்கொண்டார்கள்.
மறுநாள் காலை பிரதானின் மனைவி சப்பாத்திமாவில் கலப்பதற்கு வெண்ணெய் டப்பாவை எடுத்தாள். அதன் மேல் பாபாவின் பாதச்சுவடுகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் கணவரை கூவி அழைத்து காட்டினார். இருவரும் கண்ணீர் மல்க அந்த பாதச்சுவடுகளைத் தொட்டு வணங்கியபடி மெய்மறந்து நின்றனர்.
அந்த நேரம் பக்கத்து வீட்டுக்காரர் பிரதானின் வீட்டிற்கு வந்தார். (அவர் சாயி பக்தர் அல்ல). வந்தவர் பிரதானிடம், "ஓ! பிரதான் ! நான் ஒரு அதிசயக் கனவு கண்டேனய்யா! அதில் நீங்கள் தினமும் பூஜை செய்யும் பக்கீர் எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் உடனே அவரிடம், "ஓ ஸ்வாமி! பக்கத்து வீட்டில் நுழைவதற்குப் பதிலாக அடையாளம் தெரியாமல் இங்கு வந்துவிட்டீரா? உமது பக்தன் பிரதானின் வீடு அடுத்தாற்போல் உள்ளது அங்கு போங்கள் !" என்று என் வீட்டில் நுழைவதற்கு முன் திருப்பிவிட்டேன். அவரும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே உன் வீட்டில் நுழைவதைப் பார்த்தேனய்யா !" ,... என்று பேசிக் கொண்டே அவர்கள் இருவர் கையிலிருந்த வெண்ணெய் டப்பாவை பார்த்தார். அடுத்த நொடி ஆச்சர்யத்துடன், "அட ! இங்கு பார்த்தீரா ! அவர் உமது வீட்டிற்கு வந்திருந்தார் என்பதற்கு அடையாளமாக அவரது பாதச்சுவடுகள் பதிந்திருக்கிறதே ! உண்மையிலேயே நீர் கொடுத்து வைத்தவர்தானய்யா !" என்று கூறிச் சென்றார்.
அன்று இரவு பிரதான் தம்பதிகளின் கனவில் பாபா தோன்றி , "என்ன ! உங்கள் ஆசை நிறைவேறியதா? நான்தான் எப்போதும் உங்களுடன்தானே இருக்கிறேன் " என்று கூறி மறைந்தார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil