
காட்ஜ்பட்டீல் என்பவர் தீவிரமான சாயி பக்தர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் ஷீரடிக்கு சென்று பாபாவைத் தரிசிப்பது வழக்கம். ஒருமுறை அந்த மாதக்கடைசியில் ஷீரடிக்கு போகலாம் என தீர்மானித்து வைத்திருந்தார். ஆனால் திடீரென அவருக்கு தொலைதூர ஊருக்கு உத்யோக மாற்றல் ஆணை வந்தது. அந்த ஆணையில் எந்த தாமதமுமின்றி உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிட்டிருந்தது.
ஆகவே பாட்டீல் அவசரமாக கிளம்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், ஷீர்டி பயணத்தை அரை மனதுடன் தவிர்த்துவிட்டு மாற்றல் ஆன ஊருக்கு ரயிலில் புறப்பட்டார்.
அவர் பயணித்த ரயில் கோபர்கானில் நின்றபோது, ஷீர்டி இருந்த திசையை நோக்கி பார்த்தபடி , "பாபா ! தங்களின் தரிசனம் கிடைக்கவில்லையே !" என்று ஏங்கி துக்கம் தொண்டையை அடைத்து கண்களை மூடியபடி கலங்கினார்.
ரயில் புறப்படும் போது கண்களைத் திறந்த பாட்டீல், அவர் உட்கார்ந்திருந்த ஜன்னல் கதவில் ஒரு பொட்டலம் இருந்ததைக் கண்டார். பிரித்துப் பார்த்தால் அது "பாபாவின் உதிப்பொட்டலம் !" ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.
மூன்று மாதங்கள் கழித்து ஷீரடிக்கு சென்று மசூதியில் பாபாவைத் தரிசனம் செய்தார். அப்போது பாபா அருகிலிருந்தவர்களிடம் , ''இவன் என்னைப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டான் ! அதான் ரயிலுக்கே உதி அனுப்பினேன் !" என்று கூறினார்.
அதைக் கேட்டதும் புல்லரித்துப் போன பாட்டீல் பாபா காலில் விழுந்து வணங்கினார். அப்போது பாபா தன்னுடைய அருட்கரங்களால் கொடுத்த உதியை தாயத்தில் அடைத்து தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil