
ஆந்திராவில் ஆதோனியில் வசித்தவர் அனந்தவெங்கடேஸ்வரலு. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு சாயிபக்தர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாபாவின் பஜனையில் கலந்து கொள்வதிலும், பாபாவைப் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதிலுமே பொழுதைக் கழித்தார். இருப்பினும், இவருக்கு ஷீர்டி செல்லும் வாய்ப்பு மட்டும் தள்ளி தள்ளியேப் போனது.
ஒருமுறை அவரது ஊருக்கு அருகிலுள்ள ஹோலிபட் என்ற இடத்தில் திகம்பர சுவாமிகள் என்ற அவதூதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சுவாமிகள் எப்போதும் மலைப்பாங்கான பகுதியிலேயே சுற்றுபவர். யாரிடமும் அதிகம் பேசாதவர். அன்றைய தினம் அவர் ஆனந்தைப் பார்த்ததும், "அட ! இதப் பாரப்பா! நம்மைத் தேடி ஷீர்டி வந்திருக்கிறது" என்றார்.
அதைக் கேட்ட ஆனந்த் ஆச்சர்யத்துடன் அவரை வணங்கி, அவர் முன்னரே பாபாவின் சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்தார். அதை ஆர்வத்துடன் கேட்ட சுவாமிகள், ஆனந்தின் தலையையும் முதுகையும் அன்போடு வருடிக் கொடுத்துக் கொண்டே, "இன்று முழுவதும் என் கூட இரு!" என்று கூறி பழங்களை கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
அப்போது சுவாமிகள் ஆனந்திடம், "நவராத்திரி பூஜைக்காக ஒன்பது ரவிக்கைத் துணிகள், ஒரு புடவை, வளையல்கள், ஒரு தேங்காய் இவைகளை யார் மூலமாவது கொடுத்து அனுப்பு!" என்றார்.
இந்த திகம்பர சுவாமிகளின் தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் வெளியில் காத்திருக்க, அந்த நாள்முழுவதையும் அவர் ஆனந்தோடு கழித்தார். மறுநாள் ஆனந்த் புறப்படும் போது, சுவாமிகள் ஒரு ரோஜாவை அவனது சட்டைப்பையில் சொருகி,
"விரைவில் ஷீரடி செல்லும் உன் ஆசை நிறைவேறும் !"
என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.
அதற்கடுத்த வாரம் ஆனந்த் அலுவலகத்திலிருந்த அவரின் உயர்அதிகாரி, "ஆனந்த் ! தாங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த ஒருவாரம் விடுமுறையை அனுமதிக்கிறேன். ஷீரடி சென்று வாருங்கள்!" என்று கூற மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார் ஆனந்த்.
உடனடியாக கிளம்பி ஷீர்டி சென்று பாபா சமாதி மந்திரிலும், துவாரகமாயியிலும் தரிசனம் செய்தார். ஒருவாரம் முழுவதும் ஷீர்டியிலேயே தங்கி மனநிறைவு அடையும் வண்ணம் ஆரத்தியிலும் பஜனையிலும் கலந்து கொண்டார். ஷீரடி பயணம் முடிந்து ஆனந்த் வீடு திரும்பும்போது , "பாபா! தங்களின் கருணைக்கு நிகர் உண்டோ !" என்று ஆத்மார்த்தமாக பாபாவுக்கு நன்றி கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil