
ஹரித்வார் புவா எப்போது மசூதிக்கு வந்தாலும் துனிக்கருகிலுள்ள தூண் பக்கத்தில்தான் உட்காருவார். அங்கேயிருந்து பாபாவைத் தரிசனம் செய்வதும், அவரது உபதேசங்களைக் கேட்பதும் அவருக்கு பூரண திருப்தியைத் தரும்.
ஒருநாள் பாபாவின் தரிசனத்திற்கு வருவதற்கு ஹரிபுவாக்கு தாமதமாகிவிட்டது. மசூதிக்குள் நுழைந்தால், அங்கு புவா வழக்கமாக உட்காரும் இடத்தில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளைக் கட்டாயப்படுத்தி எழுந்திருக்கச் சொல்லிவிட்டு அங்கே அமர்ந்தார் ஹரிபுவா.
இதனைக் கண்டு சினம் கொண்ட பாபா, "எல்லோரும் எழுந்து முன்புற முற்றத்துக்குப் போங்கள் !" என்று சப்தமிட்டார்.
சிறிது நேரம் கழித்து பாபா சாந்தமானதும் அனைவரும் மசூதிக்குள் வந்தனர். ஹரிபுவாவும் உள்ளே வந்து மறுபடியும் அதே இடத்தில் உட்கார்ந்தார்.
இதைக் கவனித்த பாபா, "யாருக்கும் எதுவும், எந்த இடமும் சொந்தமில்லை ! அனைவரும் பயணிகள்தான். இன்று உங்களின் நிலத்தை உங்கள் வாரிசு நாளை யாருக்கு விற்கிறாராரோ, தானம் கொடுக்கிறாரோ, அவரே அனுபவிப்பார். அதற்குள் ஏன் இந்த பிடிப்பு? ஈர்ப்பு? 'எல்லா இடமும், பொருட்களும் படைத்தவனுக்கே சொந்தம்' என்று ஆவேசமாகக் கூறினார்.
பாபாவின் இந்த எச்சரிக்கையும் போதனையும் தனக்கானதே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஹரிபுவா பாபாவிடம் மன்னிப்பு கோரினார்.