
கோவில் குருக்களின் மகள் கோடேஸ்வரி. அடிக்கடி அவளுக்கு உள்நாக்கு வீங்கி சாப்பிடவும் முடியாமல், சரியாகப் பேசவும் முடியாமல் பெரிதும் சிரமப்பட்டாள்.
வயதுக்கேற்ற போதிய உடல் வளர்ச்சியில்லாததற்கு அதுவே காரணம் என்றும், ஆபரேஷன் செய்தால் சரிசெய்து விடலாம் என்றனர் மருத்துவர்கள். ஆனால் தங்களுடைய பொருளாதாரமும், மகளின் நிலைமையும் அதற்கு ஒத்துவராது என அவளின் பெற்றோர் அஞ்சினர்.
குருக்களின் குடும்ப நண்பரான திரு.சேஷாத்ரி என்பவர் , "தினமும் மாலையில் பாபுசாஹேப் வீட்டில் பாபாவின் சத்சரித்திரத்தைப் படிக்கிறார். மகளோடு போய் அமர்ந்து கேளுங்கள்" என்றார். அதன்படி செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டிலும் பாபாவின் சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
12-12-1974 அன்று இரவு கோடேஸ்வரி ஒரு கனவு கண்டாள். ஒரு ஆஸ்பத்திரி. அதில் பாபா மருத்துவராகவும், பேலேரம்மா என்ற தேவதை நர்ஸாகவும், ஷேத்ரபாலையா என்ற தேவதை கம்பவுண்டராகவும் இருந்தனர்.
மருத்துவ நாற்காலியில் கோடேஸ்வரி உட்கார்ந்திருக்கிறாள். ஆடவும் அசையவும் முடியவில்லை. "ம்ம்.. பயப்படாதே ! வாயைத் திற !" என்கிறாள் நர்ஸ். மருத்துவரான பாபா ஆபரேஷன் செய்து முடிக்கிறார். கோடேஸ்வரிக்கு கிறக்கமாக இருந்தது. அப்படியே அசந்து தூங்கிவிட்டாள்.
கனவு கலைந்து தூங்கி விழித்தால், உள்நாக்கின் பழையவலி, வீக்கம் எதுவுமில்லை. துப்பினால் ரத்தம் வந்தது. அவளது பெற்றோர்கள் அதைக் கண்டு பயந்தனர். திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட முடிந்தது. ஒரு வாரத்தில் எல்லாம் சரியாயிற்று.
கோடேஸ்வரி, அதன்பின் நன்றாகப் பேசி நன்றாக சாப்பிட்டாள். உடல் வளர்ச்சியும் சீரானது. இதைக் கேட்ட ஊரில் உள்ள அனைவரும் அதிசயித்தனர்.
"பாபாவின் சத்சரித்திரம் செய்த அற்புதம்த்தை" கண்டு வியப்பும், மகிழ்ச்சியுமடைந்த கோடேஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் ஷீரடிக்குச் சென்று பாபாவின் சமாதியில் தங்களின் நன்றிக் கடனை ஆனந்தக் கண்ணீரால் திருப்பிச் செலுத்தினர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil