
போர்பந்தரிலுள்ள ஒரு வக்கீல் சாயிபாபாவின் பக்தர். ஒருமுறை அவர் ரயிலில் ஷீரடிக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைக் கேட்டார். பயணச்சீட்டை எடுக்க பர்ஸை தனது பேண்ட் பாக்கெட்டில் தேடியபோதுதான் , பர்ஸை யாரோ பிக்பாக்கெட் அடித்து திருடியது தெரியவந்தது. அதில் டிக்கெட் மட்டுமின்றி தனது பயணச் செலவுக்கென வைத்திருந்த நூறு ரூபாயும் பறிபோயிருந்தது.
தனது பரிதாபமான நிலைமையை டிக்கெட் பரிசோதகரிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு வயதான பிரமுகர் ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் கொடுத்தார். "அது தன் நண்பருடைய பயணச்சீட்டு என்றும், கடைசி நேரத்தில் அவர் பயணத்தை ரத்து செய்ததால் இதை இவருக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமே !" என்றும் கூற, பரிசோதகரும் சம்மதித்துச் சென்றுவிட்டார்.
இக்கட்டான சூழ்நிலையில் உதவி தன் மானம் காத்த அந்த பெரியவரோடு தன்னை அறிமுகம் செய்து கொண்டும் பேசிக் கொண்டுமே இருவரும் ஷீரடியை அடைந்தனர். ஷீரடியிலும் வக்கீலுடைய அனைத்து செலவுகளையும் அந்த பெரியவரே ஏற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் அவரின் அன்புப் பரிசாக "ஸ்ரீ ஸாயி சத்சரித்திரத்தையும்" வக்கீலுக்கு கொடுத்தார்.
" நான் ஊருக்குத் திரும்பிப் போனதும் நீங்கள் எனக்கு செலவழித்த தொகை அனைத்தையும் மணியார்டர் மூலம் அனுப்பி விடுகிறேன், தயவுசெய்து உங்கள் முகவரியைத் தாருங்கள் !" என்று வக்கீல் அந்தப் பெரியவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
ஷீரடிப் பயணம் முடிந்து ரயிலில் திரும்பி கொண்டிருந்த வக்கீல் , "சாயி சத்சரித்திரத்தைப் படிக்கலாம் என்று நினைத்து புத்தகத்தைப் புரட்டியபோது, அதிலிருந்து நூறு ரூபாய் தாள் ஒன்று விழுந்தது." தான் ஊருக்கு திரும்பி போகும் செலவுக்கும் அந்த பெரியவரே வைத்திருக்கிறார் போலும் ! "கேட்காமலே கொடுக்கும் பெருந்தகை !" என்று அந்தப் பெரியவரைப் பற்றி மனதுக்குள் நினைத்து சிலாகித்தார்.
வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெரியவர் கொடுத்த சாயி சத்சரித்திரத்தை பூஜை அறையில் வைக்கப் போன வக்கீல் திடுக்கிட்டார். "ரயிலில் தொலைத்துவிட்டதாக எண்ணிய பர்ஸ் அங்கே இருந்தது. அதுவும் பாபாவின் படத்தின் முன்னால் !"
அதற்கடுத்த வாரம் அந்தப் பெரியவருக்கு அனுப்பிய மணியார்டரும் திரும்பி வந்தது, "அப்படி ஒரு முகவரியே இல்லையென்று !"
அப்போதுதான் அந்த வக்கீலுக்குப் புரிந்தது, ரயிலிலும் ஷீரடியிலும் ஆபத்பாந்தவனாக வந்தது பெரியவரல்ல , "சாயிபாபா"வென்று !
எல்லோரிடமும் தட்சிணை வசூலித்த பாபா, "தனக்கு மட்டும் தக்ஷிணை கொடுத்திருக்கிறார் ! இது எப்பேர்ப்பட்ட பாக்கியம் !" என்று பெருமைக் கண்ணீர் மல்க, "சத்சரித்திரத்திலிருந்து விழுந்த நூறு ரூபாயை செலவழிக்காமல் பத்திரமாக பூஜையறையிலேயே வைத்து தினமும் பூஜித்தார் !"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil