Sunday, March 31, 2019

பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை ! அன்புதான் எனக்கு முக்கியம்

Shirdi Sai Baba Answers

ஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம்.  அவர்களில் ஒருவர் டாக்டர். ராஜகோபாலாச்சாரி.  அவர் பாபாவின் படத்தை  தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார்.

டாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது.  அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர்.  ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது.

ஒருமாத பயணம் முடிந்து டாக்டர் , தனது வீட்டிற்கு திரும்பினார்.  அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு.  பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார்.  "கனவில் பாபா வந்தார்.  ஆனால் எதுவும் பேசவில்லை !  டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார்.  முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் !"  அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார்.

மறுநாள் காலையில் எழுந்த டாக்டர்,  "பாபாவின் படத்தைப் பார்த்தால்,  பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன." "அடடா ! பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் !  என்னை மன்னித்து விடுங்கள் பாபா !"  என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.

ஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் ,  "சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்றார்.  அதற்கு டாக்டரின் மனைவியோ , "இன்னும் சமையல் முடியவில்லை !  சற்று நேரம் பொறு !" என்று கூறினாள்.  "அம்மா !  பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை !  அன்புதான் எனக்கு முக்கியம் !"  என்றார் சாது.  உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள்.   வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார்.  ஆனால்  "அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும், ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன."  உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள்.  அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார்.

வாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் , "என்னம்மா !  என்ன விசயம் ?  ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்?"  என்று கேட்டார்.  டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி , "அவர் என் வீட்டில் சாப்பிட்டார்.  அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் !" என்றாள். 

பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார்.  திரும்பி வந்த சாது,  டாக்டரின் மனைவியிடம் , 'அம்மா ! பாக்கு சௌபாக்கியம் !  இன்னொன்று ஐஸ்வர்யம் !  சன்யாசிக்கு அவைகள் எதற்கு?   அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு !" என்று சொல்லிச் சென்றார்.

அதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது !  அது மட்டுமல்ல !  தபால்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் "சாயி" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.  சாதாரண "அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர்.  அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குருவின் மகத்தான மஹிமை

இயற்கைக்குப் புறம்பாக நிகழ்வுகள் நடக்கும்போது, மருத்துவர்கள் கைகட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.  அந்த சமயத்தில் ஸத்குருவு...