Tuesday, April 30, 2019

மௌனமாயிருக்கை நன்று

                            Ramana Maharishi
"அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!"
                                                     - ரமண மகரிஷி 

"அவரவர் பிராப்தப் பிரகாரம்- இந்த ஜென்ம விஷயங்கள், முன் ஜென்ம வினை காரணமாகத்தான் நடக்கின்றன. அதற்குத் தான் பிராப்தம் என்று பெயர். உனக்கு நடக்ககூடிய விஷயங்கள் திடுமென்று நடக்கக்கூடியது அல்ல! முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.

இந்த மாதிரியான தொடர்ச்சியை யார் செய்கிறார்கள் ? அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பவன். விதியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு மாபெரும் சக்தி. ஒரு கடவுள் தன்மை, உன்னிடத்தில் இருந்து கொண்டும், என்னிடத்தில் இருந்து கொண்டும், அனைவரிடத்தில் இருந்து கொண்டும் ஆட்டுவிக்கிறது. 

என் கர்மவினைக்கு தகுந்தாற்போல் என்னை ஆட்டுவிக்கிறது. என்னை ஓரிடத்தில் உட்கார வைக்கிறது. உன்னை ஓரிடத்தில் உட்கார வைக்கிறது; விதியின் வலிய கரங்கள் நடத்துகிற நாடகம்.

எது நடக்காது என்று தீர்மானிகப்பட்டுவிட்டதோ, அதை எத்தனை முயற்சி செய்தாலும் நடத்தமுடியாது; எது நடக்க வேண்டும் என்றிருக்கிறதோ அதை எப்படியும் தடை செய்ய முடியாது. இது தான் முடிவு; இது தான் இறுதிநிலை; இது தான் சத்தியம்; இது தான் திண்ணம். எனவே மெளனமாக இருத்தல் நன்று! 

ஞான விஷயத்தில் வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை, எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது  . வாழ்வு விதி முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டது. நான் மாற்றிவிடுகிறேன் என்று எவர் கங்கணம் கட்டினாலும், அது நகைப்புக்குரிய விஷயம். 

மிகப்பெரிய சக்தியின் கீழ் எந்த வலுவுமற்றுச் சிறு துரும்பாக அசைந்து கொண்டு இருக்கிறோம். கர்வப்படுவதற்கும் கங்கணம் கட்டிக்கொள்வதற்கும் எந்த அவசியமுமில்லை.

இதை மனதில் இருத்திக்கொண்டால் எந்தவித கர்வமும் எழாது. நான் யார் தெரியுமா! நான் நினைத்தால்.... எதையும் மாற்றிவிடுவேன் போன்ற பேச்சே வராது. செய்யும் காரியத்தில் விருப்பு - வெறுப்பு இருக்காது. பலன் எதிர்பார்க்காது. அப்போது அந்தக் காரியம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். கர்வமற்ற சீரான செயல்கள் உடைய வாழ்க்கை உன்னதமாக இருக்கும். 
அதுவே வாழ்க்கை. மற்றதெல்லாம் குழப்பங்கள்." 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 10, 2019

ஆபரேஷன் எதுவும் தேவையில்லை

Image result for shirdi saibaba hd painting

ஆலந்தி எனும் கிராமத்தில் வசித்தவர் ஒரு துறவி.  என்னதான் சம்சார வாழ்க்கையில் துறவறம் பூண்டிருந்தாலும்,  ஊழ்வினை காரணமாக அவர் காதில் தாளமுடியாத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். 

துறவியின் வேதனையைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்து விவசாயி ஒருவர்  துறவியிடம் சென்று,  "அய்யா !  ஷீரடி என்றொரு கிராமம் இருக்கிறது.  அங்கே சாய்பாபா எனும் சாது ஒருவர் இருக்கிறார்.  அவர் தரும் உதியே பக்தர்களின் கடும் நோய்களையும் தீர்த்து விடுவதாக பலனடைந்தோர் கூறுகின்றனர்.  தாங்களும் அங்கு சென்றுதான் பாருங்களேன்!" என்றார்.

அதைக் கேட்ட துறவி உடனடியாக ஷீரடிக்கு சென்றார்.  அங்கே இருந்த ஷாமாவை அணுகி விபரத்தைக் கூற, ஷாமாவும் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்.

ஷாமா பாபாவிடம் மெதுவாக , "பாபா !  இவருக்கு காதில் சொல்லமுடியாத வலியும் வீக்கமும் பல வருடங்களாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  ஆனாலும் அந்த வலியும் வீக்கமும் இன்னும் குறைந்தபாடில்லை !  டாக்டரிடம் கேட்டால் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறுகிறாராம். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அரற்றுகிறார்.  தாங்கள் உதி அளித்து ஆசி அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். !" என்றார்.

பாபா அந்த துறவியை அருகில் அழைத்து, "அல்லாஹ் அச்சா கராஹே !" என்று கூறி தனது உதியை அவரது காதில் ஊதினார்.  துறவியும் பாபாவை பணிவுடன் வணங்கிவிட்டு ஊர் திரும்பினார்.

ஒருவாரம் கழித்து ஆலந்தி சுவாமிகள் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  அதில் "தனக்கிருந்த  காது வலியும் வீக்கமும் பாபா ஊதிய காற்றிலேயே பறந்துவிட்டதாகவும் ,   ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று டாக்டர் தீர்க்கமாக சொல்லிவிட்டதாகவும்,  பாபாவே எனது கண்கண்ட தெய்வம் !"  என்றும் எழுதி இருந்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 9, 2019

குருத்தியானம்

Image may contain: 1 person, standing

எவ்வளவு உலக விவகாரங்களில் ஈடுபட்டு இருப்பினும், ஓய்ந்த நேரங்களில் குருவின் பால் அன்பைச் செலுத்தி குருத்தியானம் செய்தல் அவசியம். இப்படி குரு வழிபாட்டைச் சிரமேற் கொள்வதால் சத்குருவின் பார்வை நம் மீது விழுந்து நமது பாவங்களை தகிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 8, 2019

சாய்பாபா என்பவர் யார்?


சாய்பாபா என்பவர் யார்?  அவர் எப்பேர்ப்பட்ட அவதாரம் ? ‌அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி ராமகிருஷ்ண ஸ்வாமிஜி என்பவருக்கு அவரது ஆன்மீக குருவான பூஜ்யஸ்ரீ நரசிம்மசுவாமிஜி அருளி போதித்த உரை :


"அமைதியாய் அமர்" எனும் சாய்பாபாவின் அறிவுரையை என்றும் மறக்காதே !  பொறுமை,  பொறுமை, காத்திரு !   இந்தப் பொறுமை இறுதியில் கனி தரும்.

"முதலில் சாய்பாபாவின் பாதாரவிந்தங்களில் கவனம் வை!  பின் அப்படியே மேல்நோக்கி கவனத்தைக் கொண்டு போ !  சாய்பாபா பொன்னுடலின் ஒவ்வொரு பாகமாய் கவனத்தைக் குவித்தபடி தியானித்து இறுதியில் அத்திருவுருவம் முழுக்கவும் நினை! 

இப்படியே அவதாரத் திருவுருவின் கீழிருந்து மேலும்,  மேலிருந்து கீழும்,  ஆனால்,  "முழு விடுதலை தேவை!" என்ற ஒரே நோக்கோடு மனம் முழுவதையும் பாபாவின் பாதாரவிந்தங்களில் மட்டுமே குவித்து வைத்து பிரார்த்தி !.   அந்த "இறைமகனாரின் முழுக் கருணையும் உனக்கு கிடைக்கும் !".  முழு ஆனந்தம் - சச்சிதானந்தம் - உன்னை மேவும்.

பிரம்மாவுக்கும்,  விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்,  சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது.  சாய்பாபா எனும் பரிசுத்தமான மாசுமறுவற்ற எங்கும் நிறைந்த ஒரே பரப்பிரம்மத்தில் மும்மூர்த்திகளையும் ஒருங்கே நீ காணலாம்.

கட்டுப்படுத்தி பூட்டி மறைத்து வைக்காமல்,  அவருக்குள் இருக்கும் ஆனந்தமயமான இறைமையை,  அங்கெங்கனாதபடி எங்கெங்கிலும் காட்டி ஆடிக் கொண்டிருக்கிறார் சாய்பாபா.  இது உன் நினைவிலிருக்கட்டும் !

நிஜ சாதுக்களும் சந்நியாசிகளும் அப்படி எங்கும் நிறைந்துள்ள அந்த ஆனந்தத் தாண்டவத்தைக் கண்குளிர காணுவதிலேயே ஆனந்தமடைந்துக் கொண்டிருக்கின்றனர்.  நீயும் அதை முழுமையாக உணரலாம்.  

அவரது பாதங்களுக்குள் வந்து, முழுமையாக அடைக்கலம் அடைந்துவிடுவோருக்கு அவரது கருணை மழையைக் கட்டுக்கடங்காது பொழிந்து தள்ளுவார்.

"சாய்பாபா"தான் உன் தாய் !  அவளுக்கு உன் பசி தெரியும்.  ஊட்டுவார்.  ஆன்மீகப் பசியெடுத்துக் கதறும் உன் கூக்குரலைப் பசியில் அழும் குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு உடனே தீர்க்கும் தாயாய் வந்து அவர் தீர்த்துவிடுவார்.

ஆனால் ஒன்றினை மட்டும் மனதில் எழுதிக்கொள் !... "மிக உயர்ந்த ஆன்மீக பலாபலன்களை எட்ட வேண்டுமென்றால்,  எல்லா வகையிலும் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்து ஒழுகாது முடியாது!"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 7, 2019

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்


வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 6, 2019

நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்தவரை ஆசிர்வதித்த பாபா

     

ஆந்திராவில் புகழ்பெற்ற எழுத்தாளரான கோபிசந்த் ஒரு தீவிர நாஸ்திகர்.  கடவுள், பூஜை, வழிபாடு, பிரார்த்தனை இவற்றிலெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்.

1954-ல் அவர் கர்நூலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது அவர் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட, அவளை பிரசவத்திற்காக அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.  பனிக்குடம் உடைந்து மூன்று நாட்களாகியும் குழந்தை பிறக்கவில்லை.  அவரது மனைவியின் நிலைமையும் கவலைக்கிடமானது.  டாக்டர்கள் கையை விரித்து விட்டனர்.

கோபிசந்த் மனம் நொறுங்கிப்போனார்.  செய்வதறியாது விழிபிதுங்கி நின்றார்.  இரவு முழுவதும் தூங்கவில்லை.  மறுநாள் காலை வீட்டிலிருந்து காபி எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் ஒரு பாபா கோவில் இருப்பதைக் கண்டு  தன்னையறியாமல் ஒருகணம் நின்றார்.

தன்னுடைய நாஸ்திகம், கடவுளுக்கெதிரான அஹங்காரம் ஆணவம் ஆகிய வீம்புகளையெல்லாம் சுருட்டிவிட்டு,  பாபாவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார். 

"பாபா !  உங்களுக்கு அபார சக்தி இருப்பதாக பலரும் கூற கேட்டிருக்கிறேன்.  நீங்கள் கொடுக்க நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்கிறார்கள்.  மரணத்தின் பிடியிலிருக்கும் எனது மனைவிக்கு சுகப்பிரசவம் கொடுத்து சிசுவையும் சேர்த்து காப்பாற்றுவீர்களானால், நானும் உங்களை நம்புவேன் !" என்று கண்ணீர் விட்டு  கதறி அழுது ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்தார்.

ஆஸ்பத்திரிக்குப் போனதும் அவர் மனைவிக்குச் சற்று முன் ஆண்குழந்தை பிறந்ததாக நர்ஸ்கள் கூறினர்.  அதைக் கேட்டுப் புல்லரித்துப் போன கோபிசந்த், மகிழ்ச்சியின் மிகுதியால் அப்படியே இருக்கையில் உட்கார்ந்து விட்டார்.

சற்று நேரம் கழித்து பிரசவ மயக்கம் தெளிந்த தனது மனைவியை கோபிசந்த் சந்தித்தபோது  அவள்,  கப்னி அணிந்த ஒரு பக்கீர் எனது நெற்றியில் விபூதி இட்டார்.  கொஞ்சம் விபூதியை தண்ணீரில் கலந்து குடிக்கச் சொன்னார்.  "சுகப்பிரசவமாகிவிடும்  பயப்படாதே !" என்றார்.  அடுத்த நிமிடமே குழந்தை பிறந்துவிட்டது என்றாள்.

"தன்னிடம் நம்பிக்கையுடன் சரணாகதியடைந்து வைத்த பிரார்த்தனையை அடுத்த நிமிடமே ஆசீர்வாதித்துக் கொடுத்த பாபாவிற்கு" நன்றிக் கடனாக தனது குழந்தைக்கு "சாயிபாபா" என்றே பெயர் சூட்டினார் கோபிசந்த்.  அதோடு நின்றுவிடாமல் வியாழக்கிழமை தோறும் தனது வீட்டிலும் சாயிபஜனையை செய்தார்.  தவறாமல் சாயி ஆலயம் சென்று தியானம் செய்வார்.  எந்த இடத்தில் சாயி பஜனை, பூஜை நடந்தாலும் முதல் ஆளாக இருப்பார்.  இப்படியாக தீவிர சாயி பக்தரானார் கோபிசந்த்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 5, 2019

பாபா சர்வாந்தார்யாமி

                       
ஷீர்டியில் நானாவல்லி என்ற பாபாவின் பக்தன் ஒருவன் இருந்தான்.  அவன் ஒருநாள் மசூதிக்கு வந்து, எப்போதும் தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பாபாவைப் பார்த்து ,  "பாபா !  எழுந்திருங்கள் !  நீங்கள் உட்காரும் ஆசனத்தில் ஏதோ விஷேசமிருக்கிறது.  நான் சிறிது நேரம் அதில் உட்காரப் போகிறேன் !" என்றான்.

பாபாவோ, தான் ஒரு கடவுளின் அவதாரம் என்ற அஹங்காரம் கொள்ளாமல்,  "தன்னுடைய ஆசனத்தில் ஒரு சாதாரண மனிதன் அமர்வதா?" என்ற ஆணவம் கொள்ளாமல்,  "என்னையே ஒருவன் எழுந்திரு! என்று ஆணையிடுவதா?" என்று கோபம் கொள்ளாமல், எதுவுமே பேசாமல் எழுந்தார். 

நானாவல்லியும் ஆசை ஆசையாக, குதூகலமாக கம்பீரமான தோரணையுடன் பாபாவின் ஆசனத்தில் அமர்ந்தான்.  பாபாவின் ஆசனத்தில் அமர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே தடாலென எழுந்து பாபாவின் கால்களில் விழுந்தான்.

பாபாவை கைகூப்பி நமஸ்கரித்தபடியே,  "பாபா !  இது முள் ஆசனம் !  உட்கார்ந்த ஒருசில நொடிகளுக்குள்ளே ஓராயிரம் பக்தர்களின் துயரங்கள் மண்டைக்குள் ஓடுகிறதே !  அய்யகோ! அந்த குடைச்சலை என்னால் தாங்க முடியவில்லையே !  நான் அற்ப மானிடன் !  நீங்கள் சர்வாந்தார்யாமி !"  என்னை மன்னித்து விடுங்கள் பாபா ! மன்னித்து விடுங்கள் !"  என்று கதறியபடி கூறிச் சென்றான். 

பாபா மஹாசமாதி அடைந்த 13-ம் நாள் நானாவல்லி இறைவனடி சேர்ந்தான்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 4, 2019

எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்


                      


உலகில்  உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்  . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த கருணாமூர்த்தி , "மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்!"

பாபாவின் பார்வையில் "அனைத்து உயிரினமும் ஒன்றே !" என்று அவர் நிலைநாட்டியதன் நோக்கம்,  நாம் இவ்வுலகில் காணப்படும் ஜீவராசிகள் அனைத்திடமும்  கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ! "பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை !" என்பதை தனது  பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .

சீரடியில்  பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை,  அவள் தங்கியிருந்த வீட்டில் பாபாவுக்கான மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தாள்.  மும்முரமாக சமையல் செய்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு விடாமல் குரைக்கத் தொடங்கியது. 

வீட்டுக்கார அம்மாள், "சூ ! போ !" என்று விரட்டினாள்.  திருமதி.தர்கட்டோ அவளைத் தடுத்து , "பாவம் ! பசி போலும் !  அதுதான் இப்படி தொடர்ந்து குரைக்கிறது!". என்று கூறியபடியே,  சமையற்கட்டிலிருந்த  காய்ந்த ரொட்டி இரண்டை எடுத்து வந்து நாய்க்கு போட்டாள்.  நாயும் அதை வயிறார சாப்பிட்டு விட்டு திருமதி.தர்கட்டைப் பார்த்து நன்றியுடன் வாலை ஆட்டிவிட்டு சென்றது.

பேச்சு மும்முரத்திலிருந்த திருமதி.தர்கட் , "அடடா!  மதிய ஆரத்திக்கு நேரமாயிற்றே !" என்று அவசரமாக பாபாவுக்காக தயார் செய்த உணவை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் வேகவேகமாக சென்றார்.  பாபா அவளிடம், "அம்மா !   பொறு! பொறு!  ஏன் இந்த அவசரம் !   அதுதான், நீ தந்த உணவு தொண்டைவரை நிற்கிறதே?  அப்போதே நல்ல பசி!  சரியான நேரத்தில் என் பசியாற்றினாய்.  இந்தக் கருணை உள்ளத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ளாதே !" என்றார்.

திருமதி.தர்கட்டோ , "பாபா! நான் இப்போதுதானே மசூதிக்கே வருகிறேன்!  பிறகு நான் எப்படி உங்களுக்கு சாப்பாடு போட்டேன் !  நானே வேறொருவர் வீட்டில் இருக்கிறேன்!" என்று ஆச்சர்யத்தோடு கேட்டாள்..

"அம்மா !  சற்று நேரத்திற்கு முன் உன் வீட்டு வாசலில் வந்து குரைத்த நாய்க்கு இரண்டு காய்ந்த ரொட்டித்துண்டைப் போட்டாயே,  அந்த நாய்க்குள் நானே இருந்தேன் !  எறும்புக்கும் பசிக்குமே என்று கவலைப்பட்டு தோட்டத்திலே தானியங்களைப் போட்டு வைத்திருக்கிற புண்ணியவதி ஆயிற்றே நீ !" என்றார் பாபா.

அதைக் கேட்ட திருமதி.தர்கட்,  "ஓ !  பாபா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி !  அனைத்து உயிரினங்களிலும் உறைந்துள்ள சர்வவியாபி இவரே!"  என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மெய்சிலிர்த்து நின்றாள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 3, 2019

ஆண்டவன் அருள் புரிவான்


1916-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலகங்காதர திலகர், பண்டித மதன்மோகன் மாளவியா, ஸ்ரீ யோகி சுத்தானந்த பாரதி ஆகியோர் லக்னோ கூட்டத்தில் அமர்ந்திருக்கின்றனர்.  ஒரே கூச்சல் குழப்பம்.  கீதை படித்துக் கொண்டிருந்த சுத்தானந்த பாரதி "இரைச்சலிட்டால் சுயராஜ்யம் கிடைத்துவிடுமா?" என்றார்.

"அப்போ சுயராஜ்யம் எப்படித்தான் கிடைக்கும்?" என்று கேட்டார் திலகர்.

"மகான்களின் ஆசி வேண்டும் !  சுயராஜ்யம் எப்போது கிடைக்கும் என்பதை ஞான திருஷ்டியால் கண்டறிந்து சொல்வார்கள் !"  என்று பதில் சொன்னார் சுத்தானந்த பாரதி.

"சரி !  அந்த மகான் யார்?  எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார் திலகர்.

சுத்தானந்தரும், கபர்டேயும் ஒரே சமயத்தில் , "ஷீர்டி சாயிபாபா !" என்றார்கள்.  மறுநாள் அதிகாலை தலைவர்கள் குழு ஷீரடிக்குப் புறப்படுவதென்று முடிவு செய்து கிளம்பினார்கள்.

ஷீரடிக்கு காலை ஏழு மணிக்குச் சென்று குளித்துவிட்டு, நேராக பாபாவைத் தரிசிக்க சென்றார்கள்.  அங்கு வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்த சாயியை வணங்கினர்.  சுத்தானந்த பாரதி சத்தமாக இந்துபஜன் பாடினார்.  "சத்தம் போட்டால் சுதந்திரம் கிடைத்துவிடுமா?"  என்று இந்தியில் கேட்டார் பாபா.

"பின் எப்படி கிடைக்கும்?" என்றார் திலகர்.

"போய் தூங்கு !  அதற்கென்று ஒரு மஹாத்மா வருவான் !"  என்றார் பாபா.  திலகர் மௌனமாய் நின்றார்.

பாபா கபர்டேயிடம் ,  "கீதையின் 12-ம் அத்தியாயம் படி !" என்றார்.  கபர்டேயும் நிதானமாகப் படித்தார்.

"மௌனமாய் இரு ! ஆண்டவன் அருள் புரிவான் !" 

"சோதனைகளைத் தாங்கிக் கொள் ! சுயராஜ்யத்திற்காக உன்னையே அர்ப்பணித்துக் கொள்வாய் !  தியாகம் ஒருபோதும் வீணாகாது !  தற்போதைக்கு பார்வையாளனாய் இரு ! காலத்தால் அழியாத புகழ் கிடைக்கும் !"  என்றார் பாபா.

"ஆஹா !  அற்புதம் !  இவை மஹானின் மனத்தின் ஆழத்திலிருந்து வரும் சத்தியமான வார்த்தைகள் !  நிச்சயம் நிறைவேறும் !" என்று நம்பிக்கையுடன் கூறினார் திலகர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 2, 2019

சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும்ஷீரடி சாயிபாபாவின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி,  எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.

ஸ்ரீசாயி அஷ்டோத்திர சத நாமாவளிகளில்,
"ஆனந்தாய நம :" "ஆனந்ததாய நம: "  என இரண்டு நாமாவளிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வித்தியாசத்தில்தான் எவ்வளவு பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது தெரியுமா?

இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருத்த மாக பாபா எத்தகைய அதிசயங்களை நிகழ்த்தி யிருக்கிறார் தெரியுமா..?


ஆனந்தாய நம:

ஆனந்ததாய நம:

இந்த இரண்டு நாமாவளிகளும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜி அருளிய ஶ்ரீசாய் அஷ்டோத்திர சத நாமாவளியில் இருக்கும் நாமங்களாகும்.

முதல் நாமாவளியின் பொருள் "ஆனந்தமாக இருப்பவர்" என்பதாகும்;
 "ஆனந்தத்தை வழங்குபவர்"  என்பது அடுத்த நாமாவளியின் பொருளாகும். 

நாம் ஒருவரிடம் ஒன்றைக் கேட்டால், நாம் கேட்பது அவரிடம் இருந்தால்தான், அவரால் அதை நமக்குக் கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை அவரால் நமக்குத் தரமுடியாது. அப்படியே இருந்து, அவர் நமக்கு அதைக் கொடுத்தாலும், அவரிடம் அது குறைந்துவிடும்.

ஆனால், சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். அதேநேரத்தில், அவரிடம் அது குறைந்துவிடப்போவதும் இல்லை. எப்போதுமே ஆனந்தமாக இருக்கும் சாயிநாதர், நாம் வேண்டுகின்ற ஆனந்தத்தை நமக்கு வழங்குவதுடன், அவரும் ஆனந்தம் குறையாதவராகக் காணப்படுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 1, 2019

காமம்

saibaba i am always with you க்கான பட முடிவு

உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...