Sunday, May 19, 2019

உன் பணம் எனக்கு வேண்டாம்

shirdi saibaba hd க்கான பட முடிவு
சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம் என்பதை கேள்வியுற்றார். 

உடனே அந்த நபர்,  தன்னிடம் இருந்த 18 ரூபாய்களை மசூதியில் அமர்ந்திருந்த கொலாம்பே என்பவரிடம் கொடுத்து , "இதை பத்திரமாக வைத்திரு !  நான் ஊருக்கு போகும்போது வாங்கிக் கொள்கிறேன்!" என்றார். 

பாபா தக்ஷிணை கேட்டால் தம்மிடம் காசே இல்லையென்று சொல்லிவிடலாமென திட்டமிட்டிருந்தார்.   தன்னுடைய புறப்படும் நேரம் வந்ததும் பாபாவிற்கு வந்தனம் செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப பாபாவிடம் உத்தரவு கேட்டு நின்றார்.

பாபா அந்த பக்தரிடம், "தக்ஷிணை கொடுக்காமல் போகக் கூடாது !  உன் பணம் எனக்கு வேண்டாம் !  அதோ..!  அவனிடமிருந்து வேண்டுமானால் வாங்கிக் கொடு!" என்று பாபா கையைக் காட்டிச்  சொன்னார்.  அவர் கையைக்  காட்டிய இடத்தில் கொலாம்பே உட்கார்ந்திருந்தார்.

அதைப் பார்த்த அந்த நபர் வெலவெலத்துப் போய், "ஆஹா !  பாபாவிடம் எந்தத் தந்திரமும் மந்திரமும் பலிக்காது போலவே !"  என்று ஆச்சர்யமுற்ற அவர்‌ உடனடியாக  தன்னுடைய செய்கைக்கு மன்னிப்பு கோரி,  கொலாம்பேயிடம் இருந்த தனது தொகையில் இரண்டு ரூபாயை வாங்கி தக்ஷிணையாக பாபாவிடம் சமர்ப்பித்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கொலாம்பேவோ, "நான் பயங்கரமான மதுப்பிரியன்.  பாபாவுக்காக பெருந்தன்மையாக குடியை வெகு சிரமப்பட்டு விட்டுவிட்டேன். அதனால் பாபா என்னிடம் தக்ஷிணையே கேட்பதில்லை " என்று எல்லோரிடமும் பெருமை பேசிக்கொண்டிருந்தான். 

அடுத்த முறை பாபாவின் தரிசனத்துக்கு வந்த கொலாம்பேயிடம் பாபா, "இங்கு எதுவும் இலவசத்திற்கல்ல !  ம்ம்ம்... இரண்டு ரூபாய் தக்ஷிணை கொடு !" என்று கேட்டார்.  அதைக் கேட்டு தலைகுனிந்த கொலாம்பே , "மானுட ஜம்பம் மஹானிடம் செல்லுபடியாகாது போலவே !" என்று நினைத்து தனது தக்ஷிணையை சமர்ப்பித்தார்..

 மீண்டும் பாபா ,  "தீயவன் திருந்தியதற்கு சலுகை கொடுத்தால் நல்லவனாகவே வாழ்கின்றவனுக்கு என்ன கொடுத்தாலும் போதாதே ?" என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 18, 2019

தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே?

                       shirdi saibaba hd க்கான பட முடிவு

நானா சாகேப் சாந்தோர்கர் தனது நண்பர் ஷட்டகர் பினிவாலேயுடன் ஷீரடிக்கு  புறப்பட்டார்.  கோபர்கானில்  இறங்கிய அவர்கள் இருவரும் கோதாவரியில்  குளித்தனர். 

அவருடைய நண்பர் பினிவாலே என்பவர் தத்தாத்ரேயரின் தீவிரமான பக்தர்.  அக்கரையிலிருந்த  தத்தர் கோவிலைப் பார்த்ததும், "தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே?" என்றார்.  ஆனால்,  அதற்கு நானாவோ ,  "நாம் ஏற்கனவே பார்த்த கோவில்தானே!    ஒவ்வொன்றுக்கும் தாமதித்தால் நேரம் ஆகிவிடும் !  ம்ம்.. கிளம்பலாம் !"  என்று கூறிக்கொண்டே கரை ஏறினார்.  

கரையேறும்போதே ஒரு முள் நறுக்கென்று அவருடைய காலில் குத்தியது. " ஓ! பாபா!" என்று கூறிக்கொண்டே அந்த முள்ளை பிடுங்கி தூர எறிந்து விட்டு,  அப்படியே அங்கிருந்த எருக்கஞ்செடிப் பாலை, முள் குத்திய இடத்தில் பிழிந்து விட்டு , அவசர அவசரமாக கிளம்பினார்.

ஷீரடிக்கு  வந்ததும் நேராக மசூதிக்கு சென்ற அவர்கள்,  பாபாவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர். 

அப்போது பாபா , "ஓ ! நானா !  எல்லாம் தெரிந்த நீயே இப்படி செய்யலாமா?  தத்தரும் நானும் வேறு வேறா?  இன்று உனக்குக் கிடைத்தது லேசான தண்டனை !  கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஒருவரின் ஆர்வத்தைத் தடுப்பது தெய்வக்குற்றம் !  எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இரு !" என்றார்.

இதைக் கேட்ட நானாவின் நண்பர் பினிவாலே பாபாவை மீண்டும் ஒருமுறை ஆச்சர்யத்துடன் வணங்கினார்.   ஆனால் நானாவோ,  பாபாவின் முன்னர் தலைகுனிந்து மன்னிப்பு கோரினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 17, 2019

என்னை நம்பு ! நான் எல்லையில்லாக் கருணையுள்ளவன்

          Image may contain: 1 person, smiling

பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் புரந்தரே என்பவர் தீவிர பாபா பக்தர்.  அவருடைய மனைவியோ பக்தியில் நாட்டமில்லாதவர்.

ஒருமுறை புரந்தரேயின் மனைவியை பிளேக் நோய் தாக்கியது.  பிளேக்கின் தாக்கம் தீவிரமாக இருப்பதாகவும்,  இனிமேல் மருத்துவத்தால் பலனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர்.

மனமுடைந்து போன புரந்தரே, ஒருநாள் ஊரிலிருந்த தத்தரின் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றார்.  அப்போது தத்தரின் கோயில் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பக்கீர்,  ரகுவீர் பரந்தரேயை அழைத்து, சிறிது  உதியும் தீர்த்தமும் கொடுத்து, "என்னை நம்பு !  நான் எல்லையில்லாக் கருணையுள்ளவன் !  என்னை அறியாமல் உன் மனைவியின் உயிர் போகாது !" என்றார்.

அதைக் கொடுத்தது சாட்சாத் பாபாவேதான் ! என்று உணர்ந்து கொண்ட ரகுவீர்,  வீட்டிற்கு சென்று உதியை மனைவியின் உடல் முழுவதும் பூசிவிட்டு,  அவளது வாயிலும் சிறிது போட்டு தீர்த்தத்தையும் பலவந்தமாக கொடுத்தார்.

அடுத்த நிமிடமே புரந்தரேயின் மனைவிக்கு கிட்டியிருந்த பற்கள் நெகிழ்ந்தன. குளிர்ந்த உடல் கதகதப்பாய் ஆனது.  அவளும் சாதாரண நிலைக்கு வந்தாள்.

அன்று மாலையில் தினப்படி செக்-அப்பிற்காக  அவர்கள் வீட்டிற்கு வந்த டாக்டர், ரகுவீரின் மனைவி படுக்கையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு வியந்தார்.  நடந்தது என்ன என்பதையும் புரந்தரேயிடம் விவரமாகக் கேட்டறிந்து,  பாபாவின் அற்புத லீலையை எண்ணி வியந்து திரும்பினார்.

மருத்துவம் கைவிட்டபோதிலும் ஷீரடி மஹானின் உதி தன் விதியை மாற்றியதை நினைத்து, குற்றவுணர்வுடன் உருகிய புரந்தரேயின் மனைவி, "பரப்பிரம்மமே பாபாதான் !" என்று தீர்க்கமாக உணர்ந்தாள்.  

முழுவதுமாக  குணமடைந்த அவள்,  சீரடிக்குக் கணவருடன் சென்று பாபாவை தரிசனம் செய்து,  தன்னுடைய நன்றியை பாபாவின் பாதங்களில் கண்ணீரால் நமஸ்கரித்து செலுத்தினாள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 16, 2019

எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும்

Image may contain: 1 person

சாவித்திரிபாய் டெண்டுல்கர் என்பவர் பாபாவின் பக்தை.  "ஸ்ரீஸாயிநாத் பஜன்மேளா" என்ற 800 பாடல்களைக் கொண்ட நூலைப் பதிப்பித்திருக்கிறார்.   பாபாவின் லீலைகளை விளக்கும் அற்புதமான புத்தகம் இது.

அப்படிப்பட்ட தீவிரமான பாபா பக்தையான சாவித்திரிபாய், தன் மகனிடம், "பாபு !  உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது பரீட்சைக்கு படிக்கலையா?" என்று கேட்டாள். 

அதற்கு அவள் மகன் பாபுவோ,  "இல்லைம்மா !  நான் என்ன கஷ்டப்பட்டு படித்தாலும் இந்த வருஷம் பாஸ் பண்ணமாட்டேன் என்று கைரேகை நிபுணரும் நாடி ஜோசியரும் உறுதியாக சொல்கிறார்கள். அஷ்டமத்து சனி நாளிலே குரு என்று கிரகங்கள் பாதகமாக இருக்கிறதாம் !  அப்புறம் ஏன் கண்முழிச்சுப் படிக்கணும் ?" என்றான்.

அதைக் கேட்ட சாவித்திரிபாய் மகனின் நிலையை பாபாவிடம் கூறி தீர்வு பெறுவதற்காக உடனே சீரடிக்கு புறப்பட்டாள்.  மசூதியில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று,  அவரது பாதங்களை வணங்கி,  தனது மகனின் நிலைமையைக் கூறினார். 

"எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும் !  உன் பிள்ளையை நன்றாகப் படிக்கச் சொல் !  நிதானமான அமைதியோடு பரிட்சை எழுதட்டும் !  கவலை என்கிறது மனதை அரிக்கும் கறையான், அதைக் கழுவிவிடு ! கைரேகைக்காரர், ஜோதிடர் உரைகளைத் தூக்கி எறி ! அவன் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவான் !"  என்று பாபா அவளிடம் உறுதியளித்து, சிறிது உதியையும் அளித்து அவளை ஆசீர்வதித்தார். 

சாவித்திரியும் மனநிறைவோடு ஷீர்டியில் இருந்து கிளம்பி ஊருக்கு திருப்பினாள்.  பாபா சொன்னதை அப்படியே தனது மகன் பாபுவிடம் சொல்லி,  பாபா கொடுத்த உதியையும் அவனுக்கு பூசிவிட்டாள்.

பாபுவும், "பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து" இரவுபகல் பாராமல் படித்து பரிட்சை எழுதி மருத்துவ தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றான்.

பாபாவின் மீதான நம்பிக்கையும்,  பாபாவின் பரிபூரண ஆசிகளும் கிரகங்களின் கெடுதல்களையும் நீக்கிவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 9, 2019

நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்களேன் ! நல்லது நடக்கும் !1947-ல் நெல்லூரில் வாழ்ந்த ஸ்ரீராமுலு என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.  அங்கே அவளுக்கு குளிர்காய்ச்சலும், வலிப்பும் வந்துவிட்டது.  குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி ஆபரேஷன் செய்து வெளியே எடுத்தனர்.  ஸ்ரீராமுலு மிகவும் மனமுடைந்துவிட்டார்.

மனைவிக்கு பிரசவம் ஆன மறுநாள் அவர்  வகித்த வேலையின் பதவிக்காலமும் முடிவடைந்தது.  நண்டும் சுண்டுமாக மூன்று குழந்தைகள்.  ஆஸ்பத்திரி படுக்கையிலேயே கிடக்கும் நோயாளி மனைவி.  வேலையில்லாத அவலம்.  வறுமையின் பிடியில் ஸ்ரீராமுலு மிகவும் கஷ்டப்பட்டார்.  ஏதோ இரக்கமுள்ள சில நண்பர்கள் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுத்து உதவினர்.  பதிமூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி மனைவி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

வீட்டுக்கு வந்த மனைவிக்கோ கால்களின் வீக்கம் வற்றவில்லை.  நிற்ககூட முடியாத பலகீனம்.  இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட தனது மனைவியை தானே கைத்தாங்கலாக தூக்கி வைக்கும் தர்மசங்கடமான நிலைமை ஸ்ரீராமுலுவுக்கு.

தன்னுடைய கர்மவினையை நினைத்து கலங்கிப் போயிருந்த ஸ்ரீராமுலுவின் பரிதாபமான நிலைமையைப் பார்த்த ஒரு நண்பர், அவரிடம் வந்து, "ஷீரடி சாய்பாபா என்று ஒரு மகான் இருக்கிறார்.  அவர் எளியோர்களின் இறைவன்.  அவரை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்களேன் !  நல்லது நடக்கும் !" என்றார்.  தனது நண்பரின் வழிகாட்டுதலை ஏற்று, தனது குடும்பத்தின் நிலைமையை விரைவில் சீராக்குமாறு பாபாவிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்தார்.

மறுநாள் வழக்கம்போல காய்கறிகள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வந்தபோது அவர் முன்னே பாபா எதிர்பட்டார்.  ஒரு கணம் 'இது கனவா நனவா' என ஆச்சர்யத்தோடு பாபாவை உற்று நோக்கிய ஸ்ரீராமுலு , "பாபா சமாதியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டன.  பாபாவாவது நேரில் வருவதாவது" என்று மனதுக்குள் நினைத்தார்.

இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு ஒருவித தயக்கத்துடன் பாபாவை நோக்கி "அய்யா !  நீங்கள் யார்?"  என்று கேட்டார்.  "நீ யார் என்று உணர்ந்து கொண்டால் நான் யார் என்பது தன்னால் தெரியும்" என்று பதிலளித்தார் பாபா.

பாபாவின் லீலைகளை பலர் சொல்லக் கேட்டிருந்த ஸ்ரீராமுலு உடனே சுதாரித்துக் கொண்டு, "தாங்களே பாபா என்றால் இன்று எங்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் !" என்றார்.  பாபாவும் சற்றும் தாமதிக்காமல் சிரித்துக் கொண்டே , "அதற்காகத்தானே வந்திருக்கிறேன்!". என்றார்.

பாபாவை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்த ஸ்ரீராமுலு,  தன் வீட்டிலிருந்த பழைய துணிகளையெல்லாம் சுருட்டி மெத்தை தயார் செய்து அதை கயிற்றுக் கட்டிலில் போட்டு பாபாவை அதன் மீது அமர வைத்து ,  தனது கண்ணீர் கலந்த தண்ணீரால் பாதபூஜை செய்தார். ஸ்ரீராமுலுவின்  எளிமையான பக்தியில் இரக்கம் கொண்ட பாபா,  பாதபூஜை செய்த தண்ணீரை எடுத்து , "ம்ம்.. இந்தாருங்கள் !  அனைவரும் அருந்தி மகிழுங்கள் !" என்றார். ஸ்ரீராமுலு, குழந்தைகள்,  மனைவி அனைவரும் பயபக்தியுடன் அருந்தினார்கள்.

ஸ்ரீராமுலு விரைந்து கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் பாபாவைக் காணவில்லை.  எழுந்திருக்ககூட முடியாமல் எந்நேரமும் படுத்தே இருக்கும் தனது மனைவி நின்று கொண்டிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்து , "பாபாவை எங்கே?" என்று கேட்டார்.

அவரது மனைவியோ, பாபா என்னை நோக்கி,  "அம்மா !  எழுந்திரு! உணவை நீ பரிமாறு !  அசாத்தியப் பசி !"  என்றார்.  தட்டுத் தடுமாறி எழுந்து வந்து அவருக்கு பரிமாறினேன்.  ஒரு பிடிதான் சாப்பிட்டார்.   "ஆஹா ! மனது நிறைந்தது !  இதோ வருகிறேன்!" என்று கூறிவிட்டு போய்விட்டார்!' என்றாள்.

அதைக் கேட்ட ஸ்ரீராமுலுவோ பாபாவின் விந்தையை நினைத்து வியப்பில் ஆழ்ந்தார்.  அதற்கடுத்த நிமிடத்திலிருந்து அவரது மனைவி அடிக்கடி சிறுநீர் கழிக்கலானாள்.  அன்று மாலைக்குள் கால்களில் வீக்கம் வற்றி சகஜமாக நடமாட ஆரம்பித்தாள்.  அதன்பிறகு அவர்களின் குடும்பத்தின் வறுமை நிலையும் அடியோடு மாறி சுபிட்சமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 7, 2019

எல்லாம் பாபாவின் அருள்


Image may contain: 1 person, smiling

கோர்ட் ரிஸீவராக இருந்து ரிட்டயர்டு ஆனவர் ஸ்ரீபதக்.  அவர் ஷீர்டி சாயி சமஸ்தானத்தில் பொறுப்பாளராக இருந்தார்.   ஒருநாள் மாலை அலுவலகத்திற்கு வந்த செய்தியில்,  அன்று இரவு சுமார் 600 பக்தர்கள் கொண்ட குழு ஷீரடிக்கு வரப் போவதாக தகவல் வந்தது.  அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கவும் அதில் சொல்லியிருந்தது.

இந்த தகவலை கேட்டதும் ஸ்ரீபதக் யோசித்தார்.  "அடடா !  இன்று வசூலான பணத்தை முழுவதும் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டோமே?     குறைந்தபட்சம் 1200 ரூபாயாவது இருந்தால்தானே,  வரப்போகும் 600 பேருக்கும் உணவு,  தங்கும் வசதி எல்லாம் செய்து தர முடியும் !  இப்போது என்ன செய்வது?  "பாபா !  இதென்ன சோதனை !"  என்று வருந்தினார்.

அப்போது அங்கு வந்த  கிராமவாசிகள் இருவரும் ஸ்ரீபதக்கிடம் , "அய்யா !  பாபாவின் கோவிலில் அன்னதானம் செய்யனும்னு ஆசைப்பட்டு வந்தோம் !  கணக்கு முடிச்சு பேங்கில பணம் கட்டிட்டதால இந்த பணத்தை வாங்க மாட்டேங்றாங்க!  நீங்களாவது இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அன்னதானத்திற்கு உதவுங்க !". என்று கூறி தலைக்கு அறுநூறு வீதம் ரூ.1200/-ஐ பதக்கின் கையில் திணித்தார்கள்.

பதக்கோ , "தங்களின் நல்ல மனத்திற்கு நன்றி !  ஆனாலும் மாலை ஆறு மணிக்கு மேல பணம் வாங்கிக்றதில்லையே !  அதனால நீங்க காலைல வாங்க!" என்று கூறினார்.

"சாமி !  கொஞ்சம் தயவு பண்ணுங்க!  நாங்க அவசரமாக தொலைதூரம் போகவேணும்.  நாளைக்கு காலைல வாங்கிக்கிட்டதாகவே ரசீது போட்டு வையுங்க! நாங்க திரும்பி வர்றப்ப வாங்கிக்றோம்!" என்றனர்.

"எல்லாம் பாபாவின் அருள் !" என்று கூறி பணத்தை எண்ணி வாங்கிக் கொண்ட பதக், "ரசீது போடணும்,  பெயரைச் சொல்லுங்க !" என்று கேட்டார்.  அந்த இருவரில் ஒருவர் , "ஷீரடிகர்" ன்னு போட்டுக்கோங்க !' என்று கூறிவிட்டு கிளம்பினார்கள்.  அதன்பின் அவர்கள் ரசீது வாங்க வரவேயில்லை.

மூன்று நாட்களுக்குப் பிறகு பம்பாயிலிருந்து ஷீரடி வந்த டாக்டர்.கவாஸ்கர், ஸ்ரீபதக்கை சந்தித்தபோது , 'ஹே ! பதக்! சாயிபாபாவும், அப்துல்பாபாவும் மூன்று நாட்களுக்கு முன் என் கனவில் தோன்றி, "திடீரென 600 பக்தர்கள் வரப்போவதை எண்ணி பதக் ரொம்ப கவலைப்பட்டான்.  அதான் அன்னதானத்துக்காக அவன் கையில 1200 ரூபாயை திணித்துவிட்டு வந்தோம் !" என்று சிரித்தபடி கூறிவிட்டு மறைந்தார்கள் என்று கூறினார்.

இதைக் கேட்டதும் மெய்சிலிர்த்துப் போன பதக், "பாபா !  என்னே  உந்தன் திருவிளையாடல் ! என்று கூவி கண்ணீர் மல்க பாபாவுக்கு நன்றி கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 5, 2019

எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு


Image may contain: one or more people
 "ஒரு பக்தன் அல்லது பக்தனாய் உயர நினைப்பவன், முதலில் தன்னைக் கற்புடையவனாகவும், சுத்தமானவனாகவும் அடியார்க்கு அடியவனாகவும் நேர் கொண்ட சத்திய பார்வை கொண்டவனாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குருவருளைப் பெறத் தகுதி உண்டாகும்.

இரண்டாவதாக, அன்புக்குரிய குருவின் மீது தரங்குறையா நம்பிக்கை மிக மிக அத்தியாவசியம். இது பலதரப்பட்ட தெய்வீக உயர்ந்த அனுபவங்களுக்குக் கொண்டு சென்று கடைசியாய் வெகு உயரத்திலிருக்கும் "சத்_சித் _ஆனந்தம்" (சச்சிதானந்தம்) எனப்படும் இறைமை பொங்கும் பேரானந்த இலக்கிற்குக் கொண்டு போய் விடும். 

"ஓரடி உயர்ந்தால் அதுவே எனக்குப் போதும்" என்பது மட்டுமே பக்தனுக்குரிய சரியான குணாதிசயமாகும்.
ஆனால்,  எல்லாம் வல்ல இறைவனை விளக்கும் சிக்கலான வேதாந்தத்தைப் பற்றியும் சித்தாந்தத்தைப் பற்றியும் முடிவு பண்ணிக்கொள்ளும் தேவையே அப்போது எழாது.  சீடனாயிருக்கும் நிலையில் இவற்றைப் பிரித்து அறியும் மூளையெல்லாம் அவனுக்கு இருக்காது. 

ஆனால் இந்த ஆன்மீக விசயத்தில்,  தன்னிடம் முழுமையாக சரணடைந்த ஒருவனை ஸத்குரு தூக்கிவிடுகிறார். இவற்றைப் புரிந்து கொள்ளும் மேம்பட்ட ஞானத்தை அவனுக்குப் புகட்டுவார்.  அவனுக்கு உள்ளேயுள்ள விசாலமான மெய்ஞ்ஞானத்துக்கு ஒளியூட்டுவார். இப்படியெல்லாம் சத்தியத்தின் புரிதலுக்கு பாதை வகுப்பார். சித்தாந்தத்தையும் , வேதாந்தத்தையும் அப்போது அவன் உணரலாம். உணர்ந்து அதற்குள் ஐக்கியமாகி வாழ்ந்தும் விடலாம் !" 


பாபா ஒருபக்தரிடம் சொன்னார்:

"ஆன்மீக உயர்வுக்குப் புத்தகங்களாய் படித்துக் கொண்டிருக்காதே !  அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை ! உள்மனதில் வை !  வைத்ததோடு நின்றுவிடாமல்  எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு!  அதுவே போதும் !  உன் உயர்வு நிச்சயம் !"

(பாபாவைப் பற்றி கேப்டன் நார்க்கே கூறியது )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...