
கோர்ட் ரிஸீவராக இருந்து ரிட்டயர்டு ஆனவர் ஸ்ரீபதக். அவர் ஷீர்டி சாயி சமஸ்தானத்தில் பொறுப்பாளராக இருந்தார். ஒருநாள் மாலை அலுவலகத்திற்கு வந்த செய்தியில், அன்று இரவு சுமார் 600 பக்தர்கள் கொண்ட குழு ஷீரடிக்கு வரப் போவதாக தகவல் வந்தது. அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கவும் அதில் சொல்லியிருந்தது.
இந்த தகவலை கேட்டதும் ஸ்ரீபதக் யோசித்தார். "அடடா ! இன்று வசூலான பணத்தை முழுவதும் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டோமே? குறைந்தபட்சம் 1200 ரூபாயாவது இருந்தால்தானே, வரப்போகும் 600 பேருக்கும் உணவு, தங்கும் வசதி எல்லாம் செய்து தர முடியும் ! இப்போது என்ன செய்வது? "பாபா ! இதென்ன சோதனை !" என்று வருந்தினார்.
அப்போது அங்கு வந்த கிராமவாசிகள் இருவரும் ஸ்ரீபதக்கிடம் , "அய்யா ! பாபாவின் கோவிலில் அன்னதானம் செய்யனும்னு ஆசைப்பட்டு வந்தோம் ! கணக்கு முடிச்சு பேங்கில பணம் கட்டிட்டதால இந்த பணத்தை வாங்க மாட்டேங்றாங்க! நீங்களாவது இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அன்னதானத்திற்கு உதவுங்க !". என்று கூறி தலைக்கு அறுநூறு வீதம் ரூ.1200/-ஐ பதக்கின் கையில் திணித்தார்கள்.
பதக்கோ , "தங்களின் நல்ல மனத்திற்கு நன்றி ! ஆனாலும் மாலை ஆறு மணிக்கு மேல பணம் வாங்கிக்றதில்லையே ! அதனால நீங்க காலைல வாங்க!" என்று கூறினார்.
"சாமி ! கொஞ்சம் தயவு பண்ணுங்க! நாங்க அவசரமாக தொலைதூரம் போகவேணும். நாளைக்கு காலைல வாங்கிக்கிட்டதாகவே ரசீது போட்டு வையுங்க! நாங்க திரும்பி வர்றப்ப வாங்கிக்றோம்!" என்றனர்.
"எல்லாம் பாபாவின் அருள் !" என்று கூறி பணத்தை எண்ணி வாங்கிக் கொண்ட பதக், "ரசீது போடணும், பெயரைச் சொல்லுங்க !" என்று கேட்டார். அந்த இருவரில் ஒருவர் , "ஷீரடிகர்" ன்னு போட்டுக்கோங்க !' என்று கூறிவிட்டு கிளம்பினார்கள். அதன்பின் அவர்கள் ரசீது வாங்க வரவேயில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு பம்பாயிலிருந்து ஷீரடி வந்த டாக்டர்.கவாஸ்கர், ஸ்ரீபதக்கை சந்தித்தபோது , 'ஹே ! பதக்! சாயிபாபாவும், அப்துல்பாபாவும் மூன்று நாட்களுக்கு முன் என் கனவில் தோன்றி, "திடீரென 600 பக்தர்கள் வரப்போவதை எண்ணி பதக் ரொம்ப கவலைப்பட்டான். அதான் அன்னதானத்துக்காக அவன் கையில 1200 ரூபாயை திணித்துவிட்டு வந்தோம் !" என்று சிரித்தபடி கூறிவிட்டு மறைந்தார்கள் என்று கூறினார்.
இதைக் கேட்டதும் மெய்சிலிர்த்துப் போன பதக், "பாபா ! என்னே உந்தன் திருவிளையாடல் ! என்று கூவி கண்ணீர் மல்க பாபாவுக்கு நன்றி கூறினார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil