Monday, December 30, 2019

கஜானன் மகராஜ்

ஸ்ரீ கஜானன் மஹராஜ்  சரித்திரம் படிக்க கீழே உள்ள 'ஐ க்ளிக் செய்யவும்  
         

கஜானன் மகராஜ் எனப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஸ்ரீ கஜானன் அவதூதரின் இளமைக்கால வாழ்க்கை பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகள் எதுவுமில்லை. மஹாராஷ்டிராவில் உள்ள சஜ்ஜன்கர் என்னும் இடத்தில் அவர் பிறந்தார் என்று மக்கள் ஊகம் செய்தாலும், அவர் பிறந்த இடம், பிறந்த தேதி, அவரது பெற்றோர் இவையாவும் புரியாத புதிராகவே உள்ளன. ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, ஸ்ரீ கஜானன் அவதூதர் போன்ற ஞானிகள் தங்கள் கடந்த காலத்தைப்பற்றி வெளிப்படுத்தவில்லை. ஸ்ரீ சாயிநாதரையுடைய பிறப்பைப் பற்றியும் உறுதிப்படுத்தப்படாத பல கதைகள் உள்ளன.மஹாராஷ்டிராவில் உள்ள ஷேகாவ்ன் என்னும் கிராமத்தின் வெளிவட்டாரத்தில், குப்பைமேட்டில் தூக்கி எறியப்பட்ட உணவுப் பண்டங்களை ஸ்ரீ கஜானன் அவதூதர் சேகரித்துக் கொண்டிருக்கும்போதுதான், பங்கத்லால் அகர்வால் என்ற ஒருவரால் முதன்முதலாகக் கவனிக்கப்பட்டார். நல்ல ஆரோக்கியமான, ஒளி வீசுகின்ற உடலைப் பெற்றிருந்தபோதும், விழிப்புணர்வின் உச்சகட்ட நிலையில் அப்போது அவர் இருந்ததால், தம் உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் ஆடைகள் எதுவும் இல்லாமல் இருந்தார். பங்கத்லால், இவரின் நடவடிக்கையை பார்த்து, இவர் ஒரு சித்தராக இருக்கக்கூடும் என உணர்ந்தார்.அது 1878-ம் வருடம் பிப்ரவரி 23-வது நாள். பங்கத்லால், அவருடைய நண்பர் தாமோதர் பந்த்  குல்கர்ணியுடன் மகராஜைப் பணிவுடன் நெருங்கி, 'மகராஜ், தூக்கி எறியப்பட்ட இவ்வுணவை நீங்கள் ஏன் உண்ண வேண்டும்?  நீங்கள் பசியோடு இருந்தால், அதற்கு தகுந்த ஏற்பாடுகளை நிச்சயம் நான் செய்து தருகிறேன் என்று கேட்டார். இருப்பினும் மகராஜ் அவரது சொற்களுக்குச் செவிசாய்க்காமல், எந்தவிதப் பற்றுமில்லாமல் தம்முடைய உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைக் கண்ட பங்கத்லால், அருகிலுள்ள ஆஸ்ரமத்திற்கு சென்று, கிடைத்த உணவைச் சேகரித்துக் கொண்டு மகராஜிடம் திரும்பி வந்தார். அந்த உணவை அளித்தபோது, மகராஜ், எல்லா உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து அப்படியே விழுங்கினார். ஞானிகளுக்கு இந்த நிலையில் ருசி என்ற உணர்வே இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். பின்னர் ஆடுமாடுகளுக்கு என வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து மகராஜ் தண்ணீர் குடிக்கலானார். இதைப் பார்த்து திகைத்த பங்கத்லால், தான் ஒரு சாதாரண மனிதர் முன்னாள் அல்ல, மிகுந்த உயர்ந்த நிலையை அடைந்த ஆத்மாவின் முன் இருக்கிறோம் என்பதை உணர்ந்தார். பயபக்தியுடன் அவரை வீழ்ந்து வணங்கி, அவரது ஆசிகளை வேண்டி நின்றவர், தன தலையை நிமிர்ந்து பார்த்தபோது, மகராஜ் மறைந்து விட்டார்!
                           மறைவதும், பின் மீண்டும் தோற்றமளிப்பதும், முன் காலத்தில் இந்திய யோகிகள் பெற்றிருந்த அஷ்டமாசித்திகளில் ஒன்றாகும்.  மகாராஜின் திடீர் மறைவினால் பங்கத்லால் மிகுந்த வருத்தமும், உற்சாகமற்ற நிலையையும் அடைந்தார். ஆனால் அதேசமயம், தானாகவே அந்த நேரத்தில் அங்கு வந்த கஜானன் அவதூதர்தான் தன்னுடைய சத்குரு என்பதை அவர் சிறிதும் அறியவில்லை. சத்குருக்கள் அல்லது பரிபூரணமடைந்த குருக்கள், ஆன்மீக இலக்கை நோக்கித் தன சீடர்களை வழிநடத்திச் செல்ல, அதற்குரிய நேரத்தில் சீடர்களைத் தம் பக்கம் இழுப்பர் அல்லது அவர்களை நாடிச் செல்வர். எல்லா நேரமும் பங்கத்லால், கஜானன் மகராஜ் நினைவிலேயே இருந்தார். அன்று முழுவதும், அவரை தேடியும், அவருக்கு வெற்றி கிட்டவில்லை.இருப்பினும், மாலையில், அவர் ஒரு கீர்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள பழைய சிவாலயத்திற்குச் சென்றபோது அங்கு மகாராஜை மீண்டும் கண்டார். அவரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுற்று, உணர்ச்சியில் தொண்டை அடைக்க, மகராஜை தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு வேண்டிக்கொண்டார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி மகராஜ் அவர் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து அவரது தெய்வீக லீலைகள் தொடங்கின.

எல்லா மனிதப் பிறவிகளுக்கும், மற்றும் மற்ற ஜீவராசிகளுக்கும் ஆன்மீக எழுச்சியை நோக்கி ஓர் உலகளாவிய உந்துதல் கொடுப்பதே சத்குருவின் வேலையாகும். ஜாதி, மதம், பால், தேசம் மற்றும் ஜீவராசிகளின் இடையே உள்ள வேறுபாடுகள் இவை எதுவும் அவர்களுக்குப் பொருட்டல்ல. அவர்கள் மனிதர்களுடன் உள்ளபோது மனிதர்களாகவும் மிருகங்களுடன் இருக்கும் போது அவற்றுடன் ஒன்றி மிருகங்களாகவும் உள்ளனர். அவர்கள் இந்த நிலையை அடையத் தொடங்கியவுடன் கண்ணுக்கு தெரியாத சக்தியால் இழுக்கப்பட்டதுபோல், எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அவர்களைத் தேடி வருகின்றனர். உண்மையில், இதைதான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா எப்போதும் கூறுவார்; 'காலில் கட்டிய நூலைக் கொண்டு ஒரு பறவையை இழுப்பது போன்று நான் என் குழந்தைகளை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தும் இழுத்துக் கொள்கிறேன். 
கஜானன் அவதூதரின் வரவுக்குப்பின், பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், இவ்வுலக வாழ்வின் நன்மைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் எனப் பங்கத்லால் வீட்டினில் கூட ஆரம்பித்தனர்.   பங்கத்லால், தன்னால் இயன்ற அளவு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயன்றார். ஒரு பூரணமடைந்த சத்குருவை ஒருவரின் விருந்தாளியாக உபசரிப்பது என்பது எளிதானது அல்ல. சாதாரண மனிதனுக்கு சத்குருவின் நடவடிக்கைகள் சில சமயங்களில் கொஞ்சம்கூட ஊகிக்கமுடியாததாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகள் போலும், சில நேரங்களில் பைத்தியம் போலும், மற்றும் சில நேரங்களில் ஏதோ ஆட்க்கொள்ளப்பட்டவர்கள் போலும் அவர்கள் நடந்து கொள்வர். எப்படி இருந்தாலும், அவர்கள் எது செய்தாலும், அது மற்றவரின் நன்மைக்காகவே இருக்கும். சத்குருவின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை ஆன்மீகத்தில் மிகுந்த எழுச்சி பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
கஜானன் மகராஜ், அடிக்கடி பங்கத்லால் வீட்டிலிருந்து எந்த நேரத்திலும் அமைதியாகத் தப்பித்துச் சென்று விடுவார். அவர் எங்கு செல்கிறார் என்பதைப் பற்றி பங்கத்லாலிடம் கூறவும் மாட்டார். பங்கத்லால் கடும் முயற்சிகள் எடுத்து அவரைத் தேடித் சென்று திரும்பி வரும்படி வேண்டிநிற்பார். ஒருநாள், அட்காவ்ன் என்னும் இன்னொரு கிராமத்தில் மகராஜ் அமைதியாகத் தங்கினார். நண்பகல் பொழுதில், சூரியன் உச்சியில் இருக்கும்போது, தன்  நிலத்தை உழுது கொண்டிருக்கும் ஒரு விவசாயியிடம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டார். பாஸ்கர் படேல் என்ற பெயருடையை அந்த விவசாயி, அவருக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று வசைபாடினார்.. மகராஜ் எந்த மாற்றமும் இல்லாமல் புன்னகை புரிந்துவிட்டு, பழைய கிணறு போல் தோன்றிய ஓர் இடத்திற்கு மெதுவாக நடந்து சென்றார். அவரை சோதிக்கும் வண்ணம் பின்னாலிருந்து பாஸ்கர் பட்டேல் மறுபடியும் அவரிடம் அது ஒரு வறண்ட கிணறு என்றும், அதிலிருந்து யாரும் எப்படித் தண்ணீர் பெறமுடியும் என்றும் கூறினார். மகராஜ் அக்கிணற்றை அடைந்து சில நிமிடங்கள் தியானம் செய்ததும் பன்னிரண்டு வருடங்களாக வறண்டு கிடந்த அக்கிணற்றில், விரைவிலேயே சுத்தமான நீர் நிரம்பியது.  அத்தண்ணீரால்  அவர் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார். இந்த அற்புதத்தைக் கண்டவுடன், பாஸ்கர் பட்டேல் இவர்( கஜானன் மகராஜ்) சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்து தன்னுடைய மரியாதையற்ற நடத்தைக்காக மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டார். சத்குருக்கள் கடல்போல் எல்லையற்ற அன்பும், கருணையும் கொண்டவர்கள். பழிவாங்கும் எண்ணமோ, கோபமோ, எரிச்சலோ அடைய இயலாதவர்கள். அதனால்தான் கிருபாசிந்து, தயாநிதி போன்ற அடைமொழிகளால் அவர்களைக் குறிக்கிறோம். பாஸ்கர் பட்டேலின் நிலையைக் கண்டு மகராஜ் மனமிரங்கி, கிணற்றில் அவருக்காத் தண்ணீர் உண்டாக்கியிருப்பதாகவும் , எனவே பட்டேல் தினந்தோறும் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிராமத்திலிருந்து கஷ்டப்பட்டுக் கொண்டு வரவேண்டாம் எனவும் கூறினார்.

ஒருவர் வாழ்வில், சத்குருவின் பாதுகாப்பு என்பது மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலமாகும். ஏனெனில், தன்  குழந்தைகளைக் காப்பதற்காகச் சத்குரு எந்த அளவுக்குச் செல்வார் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. ஒருமுறை, கஜானன் மகராஜ்  
பங்கத்லாலின் அழைப்பிற்கிணங்கி, அவருடைய விவசாயப் பண்ணைக்கு மக்காச்சோளம் உண்பதற்குச் சென்றார்.  பக்தர்கள் கூட்டத்துடன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து, தீமூட்டி, சோளத்தைச் சுட ஆரம்பித்தனர். மரத்தின் மேல் ஒரு தேன்கூடு இருப்பதை யாருமே கவனிக்கவில்லை! தீயினின்றும் புகை கிளம்பிக் கூட்டை அடைந்ததும், தேனீக்கள் படையாக வெளிவந்து எல்லாரையும் கொட்ட ஆரம்பித்தன. மகாராஜைத் தவிர மீதி எல்லாரும் ஓடி விட்டனர். பின்பு எல்லா தேனீக்களும் மகராஜின் உடலில் தங்கிவிட்டன. மகராஜ் சிறிதும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். தூரத்திலிருந்து இதனைக்கண்ட பங்கத்லால், மகாராஜின் நிலைமை கண்டு வருத்தமுற்றார். அவர் மகராஜை நெருங்கி உதவிட எண்ணியபோது, மகராஜ் தேனீக்களைப் பார்த்து 'நீங்கள் உங்கள் இடத்துக்கு திரும்பிச் செல்லுங்கள்' என்னுடைய அன்பான  பக்தன் பங்கத்லால் இங்கு வருகிறான். அவனுக்கு எதுவும் துன்பம் நேரிடக்கூடாது' என்று கூறினார். அவர் இந்த வார்த்தைகளைக் கூறிய மறுகணமே, தேனீப்படைகள் முழுவதும் கூட்டிற்குத் திரும்பின. பக்தர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, மகராஜ் புன்னகை புரிந்து, ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தார். உடனே, எல்லாக் கொடுக்குகளும் அவர் உடலிலிருந்து நூற்றுக்கணக்கில் உதிர்ந்தன. மக்களும் ஆறுதலடைந்தனர்.   சத்குருவானவர் தம் குழந்தைகளைக் கஷ்டப்பட அனுமதிக்காமல், வலி அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்கிறார்.

                                                                                            -  தொடரும் 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

புற்று நோயை குணப்படுத்திய பாபா

https://youtu.be/jfptSQq9dm4 http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil