Tuesday, May 19, 2020

சித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்

தொடர்புடைய படம்
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும் 
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திருமூலர்

அண்டம் என்று சொல்லப்படும் வெட்டவெளி, பிருத்திவி, அப்பு, தேயு, வாயு, வெளி என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. அதனால்தான் அங்கிருந்து வரும் இந்த உயிர்களும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நமது பஞ்சஞானேந்திரங்கள் என்று அழைக்கப்படும் ஐம்பொறிகளும் அவற்றின் செயல்களான ஐம்புலன்களும் பஞ்சபூதங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்துகொண்டு, இந்தப் பிண்டத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்யுங்கள் என்ற கருத்தைத்தான் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் தமது மெய்யன்பர்களுக்குப் போதித்தார்.

பக்தர்களைக் கவர்ந்த வசீகரம்

1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பதி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில் திடீரென்று ஒருநாள் கோவணத்துடன் தோன்றிய சுவாமிகளின் முகவசீகரம் அந்த ஊர் மக்களைக் கவர்ந்திழுத்தது. அவர் எங்கு பிறந்தார், எங்கிருந்து வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை.

அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்திக்காட்டினார்.

காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றினார். மீண்டும் தமிழகத்துக்கு ’ வந்து, கணக்கன்பதியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938-ம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை நிறுவினர்.

“ கரணங்கள் நான்கும் தனக்குள் ஒடுங்கிடில்
கருமம் இல்லையென்று பாரு”

அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றால் ஆட்டிவைக்கப்படும் பஞ்சஞானேந்திரியங்களையும் அடக்கினால் வினைகள் தீரும். வினைகள் தீர்ந்தால், நாம் எடுத்த பிறவியின் நோக்கம் புலப்படும் என்றார்.

அத்துடன் அகங்காரம் நீங்க சாந்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள் என்றார். அடங்காமல் அலைந்துகொண்டிருக்கும் சித்தத்தை அடக்க, ஏகம் என்ற எங்கும் நிறைந்திருக்கும் சிவத்தைப் பற்றிக்கொள்ளவும் கூறினார். புத்தி தெளிவு பெற சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; பின்னர் மனம் தானாகவே இறையுடன் ஒன்றும் என்று போதித்தார்.

உடல் நீங்கிய தருணம்

1945-ம் ஆண்டு சென்னை மாகாண கவர்னரின் கேம்ப் கிளார்க் தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். கவர்னர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், தமது உடலிலிருந்து ஆன்மாவை விலக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார்.

அதன்படி,1946-ம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு சுவாமிகள் விதேக முக்தி அடைந்தார்.

சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் ஒளிவடிவாக இன்றும் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் இருந்து, தம்மை நாடி வருபவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

சுவாமிகளைத் தரிசிக்க

கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்தில் சுவாமிகளின் குருசேத்திரம் அமைந்துள்ளது.


                               guru great sachidanandam

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 18, 2020

சித்தர்கள் வரலாறு - பத்திரகிரியார்

சித்தர் பாடல்கள்: பத்திரகிரியார் ...


அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் (‘மெய்ஞானப் புலம்பல்’) மிகவும் புகழ் பெற்றவை. 
இவரைப் பற்றிய வரலாறாக வழங்கி வரும் கதை கீழ்க்கண்டவாறு:
உஜ்ஜைனி அரசர் பட்டினத்தார் தலயாத்திரை செய்து கொண்டிருந்த காலத்தில் உஜ்ஜைனி மாகாளபுரத்திற்குச் சென்று மாகாளேசுவரரை வணங்கி விட்டு ஊருக்கு வெளியே காட்டுப் பிள்ளையார் கோவில் ஒன்றில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். உஜ்ஜைனி அரண்மனையில் கொள்ளையிட்டு வந்த கள்வர்கள் ஒரு முத்துமாலையை அந்தக் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கையாகத் தூக்கி எறிய அது நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. கள்வர்களை விரட்டிக் கொண்டு வந்த வீரர்கள் முத்து மாலையுடன் இருந்த பட்டினத்தாரை, அரசன் பத்திரகிரியின் முன் சென்று நிறுத்த அவன் தீர விசாரிக்காமல் அவரைக் கழுவிலேற்ற ஆணையிட்டான். பட்டினத்தார் ஒருபாடல் பாட அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அந்தக் கணமே ஞானம் பெற்றான் மன்னன் பத்திரகிரி. தன் அரச போகங்களைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக அவருடனேயே கிளம்பி விட்டார். 
திருவிடைமருதூர் துறவி பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் திருவிடை மருதூரை அடைந்து அங்கே கோவில் வாசலில் துறவிகளாக அமர்ந்திருக்கத் தொடங்கினர். பத்திரகிரியார் ஊருக்குள் சென்று பிச்சை பெற்று வந்து குருவுக்குத் தந்து அதில் மிஞ்சியதைத் தானும் உண்டு வாழ்ந்து வந்தார். ஒருநாள் பத்திரகிரியார் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு பெட்டைநாய் அருகே வந்து நிற்க அதற்குச் சிறிது உணவளித்தார். அன்று முதல் அது அவருடனேயே இருக்க ஆரம்பித்தது.
துறவியா குடும்பஸ்தனாதிருவிடை மருதூர் கோவிலின் கிழக்கு கோபுரவாசலில் பட்டினத்தாரும் மேற்குக் கோபுர வாசலில் பத்திரகிரியாரும் அமர்ந்திருப்பது வழக்கம். ஒருமுறை ஒரு பிச்சைக்காரன் பட்டினத்தாரிடம் பிச்சை கேட்க, அதற்கு அவர் “நான் சகலமும் துறந்த துறவி; மேற்குக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான்; அவனிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அந்த வார்த்தைகளைக் கேள்வியுற்ற பத்திரகிரியார் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய திருவோடும், உடன் இருக்கும் நாயும் தன்னைக் குடும்பி ஆக்கி விட்டனவே என்கிற அயர்வில் திருவோட்டினைத் தூக்கி அறிய அது உடைந்ததோடு அது நாயின் மீது பட்டு அதுவும் இறந்து போனது. அந்த நாய் காசிராஜனின் மகளாகப் பிறந்தது. அவள் வளர்ந்த பின் முற்பிறவி ஞாபகம் கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பத்திரகிரியாரிடம், “துறவியாகிய தங்கள் எச்சில் சோறு உண்டு வளர்ந்த நாய் தான். நான்; எனக்கு முக்தி கிடைத்திருக்க வேண்டுமே; பிறவி எப்படி வாய்க்கலாம்?” என்று முறையிட்டாள். அவர் மருதூர் இறைவனிடம் முறையிட அங்கே கிளம்பிய ஜோதியில் இருவரும் முக்தி பெற்றனர். 
மெய்ஞானப் புலம்பல் துறவியாக பத்திரகிரியார் பாடிய பாடல்கள் “மெய்ஞானப் புலம்பல்” என்ரு அழைக்கப்படுகின்றன. மிக எளிய வார்த்தைகளையும் ஆழமான அர்த்தங்களையும் கொண்டிருக்கும் பாடல்கள் அவை. 
எடுத்துக்காட்டுப் பாடல்கள் 
 ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் 
 தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்? 
 வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும் 
 வாடிக்கை எல்லாம் மறந்திருப்பதெக்காலம்? 
 நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து 
 தான் அவனாய் நின்று சரணடைவதெக்காலம்? 
 நான்நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல் 
 நீநின்ற கோலமதில் நிரவிநிற்பதெக்காலம்? 
 உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி 
 இதயத் திருநடனம் இனிக் காண்பதெக்காலம்? 
 பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல் 
 சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்? 

பத்திரகிரியார் வரலாறு பத்திரகிரியார் அரச குலத்தில் தோன்றினவர்; சிவ பத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர்; அறநெறி வழாது உஞ்சேனை மாகாளம் என்னும் பதியை யாண்டவர். அவரது அரசாட்சி காலத்தில் ஒருநாள் திருடர் பலர் ஒன்றுகூடி நகர்ப்புறத்திலே யுள்ள ஒரு குறுங்காட்டிலே திருக்கோயில் கொண்டு வீற்றிருந் தருளும் விநாயகக் கடவுள் திருச்சந்நிதியடைந்து "பெருமானே! யாங்கள் இன்றிரவு அரசமாளிகை புகுந்து களவிடப் போகிறோம். தேவரீர் திருவருள் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்து, ஊரை யடைந்து, நள்ளிரவில் அரண்மனை புகுந்து, தாம் விரும்பியவாறு பட்டாடைகளையும், பொன்னாபரணங்களை யும், மாணிக்கப் பதக்கங்களையும், பிறபொருள்களையும் திருடிக்கொண்டு சென்றார். அன்னார் செல்லுங்கால் தமக்குத் திருவருள் புரிந்த கணபதி ஆலயமடைந்து ஒரு மாணிக்க மாலையை அக்கடவுளுக்குச் சூட்டி வழியே போய்விட்டனர். அதுபோழ்து அர்த்த ராத்திரியாகையால்அம்மாணிக்கமாலை விநாயகர் திருக்கழுத்தில் விழாமல் அங்கு நிஷ்டைகூடியிருந்த பட்டினத்தடிகள் திருக்கழுத்தில் விழுந்தது. பொழுது விடிந்ததும் அரசமாளிகையில் களவு நிகழ்ந்த செய்தி ஊரெங்கணும் பரவிற்று. அரசன் ஆணைப்படி வேவு காரர்கள் திருடர்களைத் தேடத் தொடங்கினார்கள். ஊர்ப் புறத்தேயுள்ள குறுங் காட்டுவழிச் சென்ற வேவுக்காரர்களிற் சிலர் விநாயகராலயத்தினுள் நிஷ்டை செய்து கொண்டிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில் வேந்தன் மாணிக்கமாலை பொலிதலைக் கண்டு அவரைப் பற்றிப் பலவாறு துன்புறுத்தி னார். 
                                                    சுவாமிகள் நிஷ்டை கலைந்து வேவுகாரர்களைத் திருநோக்கஞ் செய்தருளினார். அவர்கள் அடிகளைப் பிடித்துத் தள்ளிக் கொண்டுபோய் அரசன் முன்னிலையில் நிறுத்தி னார்கள். பத்திரகிரி மன்னர் தீர விசாரியாது பட்டினத்தாரைக் கழுவேற்றுமாறு கட்டளையிடத் தண்டவினைஞர்கள் சுவாமி களைக் கழுமரத்தருகே அழைத்துச் சென்றார்கள். பெருமான் கழுமரத்தைத் திருநோக்கஞ் செய்தருளி "என்செயலாவ தொன்று மில்லை" என்னுந் திருப்பாசுரத்தைத் திருவாய் மலர்ந்தருளினார். உடனே கழுமரம் அக்கினியால் எரியுண்டு சாம்பராயிற்று. இச்செய்தி கேள்வியுற்ற அரசர்பெருமான் விரைந்து ஓடிவந்து சுவாமிகள் திருவடிக்கமலங்களில் அடியற்ற பனைபோல் விழுந்து தங்குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார். பட்டினத்தடிகள் ஞானதிருஷ்டியால் பத்திகிரி யாரது சத்திநிபாதநிலையை யுணர்ந்து "நாய்க்கொரு சூலும்" என்னுந் திருச்செய்யுளையருளிச்செய்து ஞானதீட்சை செய்தருளினார். பத்திரகிரியாரும் உள்ளத் துறவடைந்து ஞானாசிரியராகிய பட்டினத்தார் ஆணைவழி நிற்பாராயினர். பட்டினத்துச் சுவாமிகள் பத்திரகிரியாரை நோக்கி "திருவிடை மருதூருக்குச் செல்க" என்று கட்டளையிட்டுத் தாம் கேத்திர யாத்திரை செய்யச் சென்றுவிட்டார். பத்திரகிரியார் குருவாணைப்படி திருவிடைமருதூரை யடைந்து சிவயோகத்தி லமர்ந்திருந்தனர். பட்டினத்தார் பல தலங்களைத் தரிசித்துப் பலவகைப் பாக்களைப் பாடித் திருவிடைமருதூர் சேர்ந்தனர். பத்திரகிரியார் வீடுகடோறுஞ் சென்று பிச்சையேற்றுக் குருராயனை உண்பித்துச் சேடத்தைத் தாமுண்டு குருவின் திருவுள்ளக் குறிப்பின்படி மேலைக்கோபுர வாயிலிலிருந்து குருநாதனை வழிபட்டு வந்தனர். வருநாளில் ஒருநாள் பத்திரகிரியார் பிச்சையேற்று ஆசாரியாருக்கு நிவேதித்துத் தாஞ்சேடத்தை யுண்ணப்புகுங்கால், ஒரு பெட்டைநாய் பசியால் மெலிவுற்று வாலைக் குழைத்துக் கொண்டு வந்தது. 
                                                   அதனைக் கண்டதும் பத்திரகிரியார் இரக்க முற்று அதற்குச் சிறிது அமுதிட்டனர். அன்று தொட்டு அந்நாய் அவரை விட்டுப் பிரியாமல் அவ்விடத்திலேயே தங்கிவிட்டது. அந்நாய் முற்பிறப்பிலே அங்கதேயத்திலே விலைமாது வடிவந்தாங்கி யிருந்தது. அவ்விலைமாது இளையர், முதியர் என்னும் வேற்றுமையின்றிக் கூடிக் கலந்து பொருளீட்டி மது உண்டு தீயொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினாள். ஒருநாள் ஒரு பிரமசாரி குருவாணைப்படி அமுதுநாடி அத்தாசி இல்லம் போந்தான். அவள் தான் தூர்த்தர்களோடு உண்டு மிகுந்த சேடத்தை அப் பிரம்சாரிக்கு அன்பின்றி விளையாட்டாகத் தந்தாள். பிரமசாரி அதையுண்டு சென்றான். அவ்விலைமாது தான்புரிந்த பாவச்செயல்களின் காரணமாகப் பெட்டை நாயாகப் பிறந்தாள். அவள் பிரமசாரிக்குச் சேடமீந்ததன் பயனாகப் பத்திரகிரியார்பா லுறைந்து அவர் அளிக்குஞ் சேடத்தை யுண்ணும் பேறுபெற்றாள். பத்திரகிரியார் அந்நாயைப் பாதுகாத்து வந்தனர். வருங் கால் ஒருதினம் மருதவாணர் ஒரேழை வடிவந்தாங்கிப் பட்டினத்தடிகளிடஞ் சென்று "ஐயா! பசியால் வருந்துகிறேன்; அன்னமிடும்" என்று கேட்டார். அதற்குச் சுவாமிகள் "மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி யிருக்கின்றான்; அங்குச் செல்க" என்றார். ஏழைக் கோலந் தாங்கிவந்த ஏழை பங்காளன் அங்ஙனே மேலைக் கோபுர வாயிலை யடைந்து அங்கிருந்த பத்திரகிரியாரைக் கண்டு "ஐயா! கீழைக் கோபுர வாயிலில் ஒருவரிருக்கின்றார். அவரை யென் பசிக்கு அன்னமிடுமாறு கேட்டேன். அவர் 'மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி யிருக்கின்றான்; அங்கே செல்க' என்று சொன்னார். அவர் சொற்படி யான் இங்கு வந்தேன். என் பசியை யாற்றும் என்றார். அது கேட்ட பத்திரகிரியார் "அந்தோ! பிச்சையேற்கும் இந்த வோடும், எச்சில் தின்னும் இந்த நாயுமோ என்னைக் குடும்பி யாக்கின" என்று கையிலிருந்த ஓட்டையெறிந்தார். அது நாயின் தலையிற்பட்டது. படவே ஓடுமுடைந்தது. நாயு மாண்டது. மருதவாணரும் மறைந்தனர். மாண்டநாய் ஞானி யெச்சிலுண்ட விசேடத்தால் காசி மகாராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தது. அரசன் பேரன்போடு ஞானவல்லியென்று நாமஞ்சூட்டி வளர்த்து வந்தான். 
                                                      ஞானவல்லி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து திருமணப்பருவம் அடைந்தாள். அரசன் ஞான வல்லியின் அறிவு குணஞ் செயலுக் கேற்ற ஒரு நாயகனைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தான். அதனை யறிந்த ஞானவல்லி ஒருநாள் தந்தைபால் சென்று "ஐயனே! யான் யாருடைய வாழ்க்கைக்கும் உரியவளல்ல; திருவிடைமருதூரிலே மேலைக் கோபுர வாயிலிலே எழுந்தருளியுள்ள தவசிரேஷ்டருக்கே யுரியவள்" என்று கூறினள். மன்னவன் பெண்ணின் மன உறுதியைக்கண்டு தெளிந்து அவள் விரும்பியவாறே அவளைத் திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஞான வல்லி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கி "அடிநாய் மீண்டுந் திருவடி நாடி வந்தது" என்றாள். பத்திரகிரியார் அவளது பக்குவநிலையை யறிந்து அவளது கையைப் பற்றிக் கொண்டு சென்று கீழைக்கோபுர வாயிலில் வீற்றிருந்தருளுந் தமது ஞான குருவள்ளல் திருமுன் நிறுத்தி "சுவாமி! தேவரீர் எச்சிலுண்ட நாயினுக்கு இவ்விழி "பிறவி யெய்தலாமோ" என்று விண்ணப்பித்தார். 
பட்டினத்தடிகள் "எல்லாஞ் சிவன் செயல்" என்று திருவருளைத் தியானஞ் செய்ய, ஆண்டு ஒரு பெருஞ் சோதி தோன்றிற்று. 
அதில் பத்திரகிரியார் அப் பெண்ணுடன் புகுந்து இரண்டறக் கலந்தார். 
 பத்திரகிரியார் திருநக்ஷத்திர தினம் 
 பத்ர கிரிமன்னன் பால்வண்ண னாயதினஞ் 
 சித்திரை மாமகமாஞ் செப்பு. 

திருவிடைமருதூர் திருத் தலச்சிறப்பு மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றானும் சிறப்புடைய திருத்தலம் திருவிடைமருதூர் ஆகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை வழித்தடத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்திற்குப் பேருந்து மூலமாக அல்லது புகைவண்டி மூலமாக வரலாம். 
 திருவிடைமருதூர் திருத்தலத்தை 
 திருஞானசம்பந்தர் 
அப்பர் சுந்தரர் 
மாணிக்கவாசகர் 
கருவூர்தேவர் 
பட்டினதடிகள் 
 அருணகிரிநாதர் 
கவிகாளமேகம் 
ஆகியோர் அருந்தமிழ்ப்பாக்களால் பாடிப் பரவி உள்ளனர். இத்தலம் பாடல்பெற்ற திருத்தலமாகும். 
                                                         இத்தலத்தில் வரகுண பாண்டியன் பத்திரகிரியார் ஸ்ரீதர் ஐயாவாள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் நான்கு தேரோடும் வீதி நான்கு மடவிளாகம் கொண்டு அழகிய ஊராக விளங்குகிறது. தேரோடும் வீதிகளில் கீழைவீதியில் அருள்மிகு விஸ்வநாதர் ஆலயமும் தெற்கு வீதியில் அருள்மிகு ஆத்மநாதர் ஆலயமும் மேலை வீதியில் அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயமும் வடக்கு வீதியில் அருள்மிகு சொக்கநாதர் ஆலயமும் அமைய நடுநாயகமாக அருள்மிகு மகாலிங்கப் பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆதலால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்று போற்றப்பெறுகிறது.மேலும் நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்கள் அமைய நடுநாயகமாக திருவிடைமருதூர்த் திருத்தலம் அமைந்துள்ளது. கிழக்கே பாணாபுரமும் அருள்மிகு பாணாபுரீஸ்வரர் திருக்கோயில் தெற்ககே திருநீலக்குடி அருள்மிகு மனோக்கிய நாத சுவாமி திருக்கோயில் மேற்கே திருபுவனம் அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் வடக்கே இடங்கொண்டீச்சுரம் (கல்யாணபுரம்) அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில் ஆகிய தலங்கள் நான்கு திக்கிலும் அமைந்துள்ளது. 
                                                      சித்தர்கள் அனைவருமே எளிமையான பின்புலங்களில் இருந்தே வந்திருக்கின்றனர். சமூகத்தின் எளிய  ஒடுக்கப் பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளாகவே சித்தர்களை தமிழ் சமூகம் ஆணவப்  படுத்தியிருக்கிறது. எதிலும் விதி விலக்கு உண்டே! இந்த கருத்தியலுக்கு விதிவிலக்கானவர்கள் இரண்டு பேர் ஒருவர் வணிகக் குடும்பத்தில்  பிறந்து பெரும் செல்வம் ஈட்டி அதில் திளைத்த பட்டினத்தார். அரசராக இருந்தவர் என  தகவல்கள் கூறுகின்றன. பட்டினத்தாரை தனது குருவாகக் கொண்டு அரச சுகபோகங்களைத்  துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டவர். "வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?"  "நவசூத்திர வீட்டை நான்என்று அலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?"  "புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?" - பத்திரகிரியார் - பட்டினத்தார் வடமாநிலங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரை கள்வன் என்று பழிசுமத்தி கழுவிலேற்ற உத்தரவிட்ட அதே பத்திரகிரி மன்னன் தான் இந்த பத்திரகிரியார். அரசனாக இருந்த இவர் சுக போகங்களை துறந்து சித்தரானவர். 
                                                      ஒருநாள் அவர் அருகில் வந்த பெண் நாய்க்குட்டி ஒன்றிற்கு சிறிது உணவிட்டாராம், அன்றிலிருந்து அந்த நாய் அவரை பின்தொடர்ந்து அவர் பார்வை பட்டு விமோசனம் அடைந்து, பின்னர் அது காசி மன்னனின் மகளாக பிறந்து முற்பிறவி நினைவுடனேயே இருந்து பத்திரகிரியாரையே மணந்ததாக சொல்வர். பத்திரகிரியார் பாடல்கள் பெரும்பாலும் "எக்காலம்?" என்ற கேள்வியுடன் முடிவதாக அமைகின்றன. இவர் திருச்செட்டாங்குடியில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முக்தி அடைந்ததாக கருதப்படும் பத்திரகிரியார்  எழுதிய அருட்புலம்பல் எனப்படும் மெய்ஞான புலம்பல் என்கிற நூல் சித்தர் நூல்களில்  தனித்துவம் வாய்ந்தது.  அருட் புலம்பல் என அறியப் படும் இந்த பாடல்கள் எளிய தமிழில்,முதல் வாசிப்பில்  எளிதாய் பொருள் உணரும் வகையில் எழுதப் பட்டிருப்பது சிறப்பு. எனினும் மீள்  வாசிப்புகளில் மட்டுமே இந்த எளிய சொல்லாடல்களின் பின்னிருக்கும் விரிவான  தத்துவத்தினை அருமைகளை உணர்ந்திட இயலும். 
 உதாரணத்திற்கு இந்த பாடலை பார்ப்போம்... 
 ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்? 
 இந்த பாடல் முதல் வாசிப்பில் ஆணவத்த்தை அடக்கி,ஐம்புலன்களை ஒடுக்கி இறைவனை அடைவது  எக்காலம் என்று பொருள் விளங்கும். இதையே சற்றே நுணுகி ஆராய்ந்தால், 
ஆங்காரம் என்ற சொல்லுக்கு தான் என்கிற மமதையை  குறிப்பதை அறியலாம். 
தான் என்கிற அஹங்கார நிலை அழியும் போதே ஐம்புலன்களும் அதில்  கரைந்து போய்விடுகிறது. 
தூங்காமல் தூங்கி என்கிற வார்த்தைகள் வாசிக்க எளியதாய் இருந்தாலும்,  
 பத்திரகிரியாரின் இந்த சொல்லாடல் மிகவும் புதுமையானது. 
தூங்காமல் தூங்கி என்கிற  வார்த்தைக்கு நேரடி பொருள் தேடுவது சிரமம். 
என்னுடைய புரிதலில் இதனை சுயமறிந்த  விழிப்பு நிலை என்று கருதியிருக்கிறேன். 
ஆக, தான் என்கிற அகங்கார நிலையழித்த விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே உயர்ந்த  சுகமான முக்தி நிலை சாத்தியமாகும் என்பதை பாடலின் வழியே சொல்லாமல் சொல்லி  உணர்த்துகிறார்.

பட்டித்தாரும் பத்திரகிரியாரும் :  பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது.பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினர்.பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார்.பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை.,இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார். இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க தன்னை இந்த திருவோடும்,நாயும் நம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும்,நாய்க்கும் முக்தி அளித்தார்.அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது.கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம். 

பத்திரகிரியார்  கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக காற்று இல்லை என்றாகி விடுமா?, உணர்கிறோம்,  சுவாசிக்கிறோம்.....அதனால் உயிர் வாழ்கிறோம். 
 இதைப் போலவே எள்ளினுள் எண்ணை மறைந்திருப்பதைப் போல, கரும்பினில் சுவை  உறைந்திருப்பதைப் போல, 
மலரில் மணம் நிறைந்திருப்பதைப் போல நம்மில் ஆன்மசக்தியாய்  இறைவன் மிளிர்ந்திருக்கிறான். 
 எள் என்பது புறப்பொருள் எண்ணெய் என்பது அகப்பொருள் கண்ணுக்கு தெரியும் எள்ளில்  நிறைந்திருக்கும் எண்ணை கண்ணுக்கு தெரிவதில்லை. இப்படியே கரும்பிலும்,மலரிலும் ஏன்  மனிதனிலும் அகப் பொருளாய் மறைந்திருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகப்பொருள் என்ற ஒன்றுக்காகத்தான் புறப்பொருள் அமைகிறது. 
நாம் எள்ளில் இருந்து  எண்ணெய் எடுக்கும் போதும், பூவின் வாசத்தை நுகரும் போதும், அரும்பை உண்ணும் போதும்  அதில் உள்ளவற்றை உணரமுடிகிறது. அவற்றை ஒப்புக்கொள்ளவும் முடியும். ஒரு முறை உணர்ந்த  பின் கரும்பு இனிப்பு சுவை உள்ளது என்றும், மலர் வாசம் வீசும் என்றும் யாரும்  சொன்னால் மறுப்பதில்லை. 
 ஆனால் மனித உடலில் ஆன்மாவாய் இறைவன் உறைந்துள்ளான் என்றால் நம்பத்தான்  யாருமில்லை.இந்த உண்மையை உணர்ந்து நாங்கள் கடவுளை அறிவது என்ப்போது என்று  கேட்கிறார் பத்திரகிரியார். 
 எள்ளும் கரும்பும் ஏழு மலரும் காயமும் போல்உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்? என்கிறார். 
இதையே சிவவாக்கியாரும், எங்கும் உள்ள ஈசன் எம்மு டல்பு குந்தபின்பங்கு கூறு பேசுவார் பாடு சென்றே அனுகிளார் என்று சொல்கிறார்.பத்திரகிரியார் ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த கோட்பாடாகவே உபதேசிக்கின்றார். 
உயிர்களைக் கொன்று  அவற்றின் மாமிசங்களைப் புசிப்பதை கண்டிக்கிறார். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும்  தன்னுயிராக நினைத்து நேசிப்பது ஒரு தவம் என்று சொல்கிறார் இவர்.
 இராமலிங்க அடிகளாரும் பிற உயிட்களிடம் கருணை காட்டுவதை உயர்ந்த நெறியாக மக்களுக்கு  உபதேசித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
 மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு உழலாமல் தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? என்கிறார்.

பத்திரகிரியார் எனும் சித்தர் தனது மெய்ஞானப் புலம்பலில் 69வது பாடலாக கீழ்க்கண்டதை பாடியுள்ளார். 
 "மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில் 
 தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?" 
 1) மூன்று வளையம் என்பது சக்தி எனப்படும் மூலாதாரம், வெளி அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம்.காலம் இல்லையேல் எதுவும் நகராதே. இந்த மூன்று வளையங்களும் இட்டதில் முளைத்து எழுந்த முக்கோணத்தில் தோன்றும் உருத்திரன் [கடவுள் சிவன் அல்லது அவரது ஒரு அம்சம்] இந்த முக்கோணமே முக்காலமும் அறிய உதவும் திறவுகோல். அதாவது சுழுமுனை. 
 அறிவியல் ரீதியாக  1) நமது இந்த உலகம், பால் வெளி, அண்டம் அனைத்துமே மூன்று அடிப்படை உள்பொருட்களால் ஆனது. அவை காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space]
 2) நமது அண்டத்தில் இருக்கும் அனைத்துமே உருண்டை தேற்றத்தின் படி உருண்டை வடிவானவைதான். எனினும் அறிவியல் ரீதியாக நமது அண்டம் மூன்று வடிவங்களில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்  ஆனால் உருண்டை தேற்றத்தின் படி இவை மூன்றும் உருண்டையாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம். 
 3) இவை மூன்றும் இல்லையெனில் இந்த உலகம், பெருவெளி, அண்டம் எவையும் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இவை மூன்றும் இணைந்ததுதான் நமது உலகம் மற்றும் அனைத்தும் 
4) கணிதத்தில் போரோமியன் வளையங்கள் என்று ஒன்று உள்ளது. இது என்னவெனில் மூன்று வளையங்கள் ஒன்றையொன்று உள்வழியாக இணைத்து இருப்பது. இதில் ஒரு வளையத்தை நாம் பிரித்தேடுத்தாலும் மற்ற இரு வளையங்கள் சேர்ந்து இருக்காது 
 5) இந்த மூன்று வளையங்களும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ஒரு முக்கோணம் உருவாகும் அந்த முக்கோணம்தான் நமது அண்டம், வெளி மற்றும் காலம் சங்கமிக்கும் ஒரு பகுதி. அதாவது மூன்றும் இணையும் போதுதான் வெளிகள் உருவாகின்றன, உலகங்கள் உருவாகின்றன இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள். நாம் நமது தமிழை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். 
                                                     சித்தர்கள் சைவ மதத்தவராக கருதப்பட்டாலும், தொல்காப்பியர் மரபான சாங்கிய மரபினர், பத்திரகிரியார் பின்வருமாறு கூறுகிறார். ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் இவ்வரிகள் மூலம் சித்தர்களை ஆதிகபிலர் சொன்ன சாங்கிய மெய்யியலை பின்பற்ற விளைபவர்களாகக் காணலாம். 
சமயக் கோட்பாடுகளுக்கும், சமூக ஒப்பனைகளுக்கும் நூலறிவுக்கும் அப்பாற்பட்டு உண்மையை அறிவதற்கு வாழ்க்கையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்  கொண்டவரே சித்தர். 
இவர் தம் உணமையறிவதற்கான தேடலானது புறத் தேவைகளுக்கான தேடலாக அமையாது தம்மை அறிவதற்கான ஆன்மத் தேடலாக அமைந்தது இவ்வான்மத் தேடலையும் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் வழியாகக் கருதாது தடுமாறாமல் பயணம் செய்யப் பயன்படும் திசைகாட்டியாகவே கருதினர். 
அவ்வழி உண்மையறிதற்குரிய வாயிலாக உடம்பைக் கருதினர் அதனால் நிலையற்றதாக துன்பம் தருவதாக அருவருக்கத்தக்கதாக, இழிந்துரைக்கப்பட்ட உடம்பினை அழியாத வாய்மை உடம்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அவ்வாறு உடலை ஓம்பி உண்மையறிதற்குரிய நெறியாகச் சித்தர்கள் முன்வைத்தது யோக நெறியாகும் இந்த யோக நெறியைக் கோட்பாட்டளவில் விளக்குவதே சித்தர் மெய்யறிவியல். 
கி.பி. 4-6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிற திருமூலர் தொடங்கி வைத்த சித்தர் மரபு, இடையில் இடைவெளி விழுந்து 12 ஆம் நூற்றாண்டு சிவவாக்கியர் முதல் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் வரை தொடர்ந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 7, 2020

குரு பக்தி"இந்த  ஜனங்கள் புத்தகங்களில் பிரம்மா அல்லது கடவுளைக் காண விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிட்டுவது பிரமா அல்லது மோகமே! குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும்  தேவையில்லை."
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி  விடுகிறதல்லவா? ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 6, 2020

நீ துவாரகாமாயியின் குழந்தை.


எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே. நீ துவாரகாமாயியின் குழந்தை. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார். 
- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை

SHIRDI SAI BABA : Baba Say | Sai baba, Indian paintings, Sai ram
"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" 
-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 3, 2020

குருபாத பக்தி

Zeven dagen Shirdi Sai - On Shirdi Sai Baba and his biography

இந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோஹத்தால், தான் ஸச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேஹமே என்று நினைத்துக்கொள்கிறது. 
இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் "நானே செயல்புரிபவன், நானே அனுபவிப்பவன்!" என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டுத் தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.
குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையி­ருந்து விடுபடும் மார்க்கமாகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 2, 2020

எந்த துக்கமும் ஏற்படா து


ரோகம் எது, ஆரோக்கியம் எது ? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது.
இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் பாபாவின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப்பட்டவர் வியாதியைச் சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக்கொள்வார்.
வியாதி பொறுக்கமுடியாத வலியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஆனால், பாபா தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார். பாபாவின் கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 1, 2020

பக்தர் விரும்பியதையெல்லாம் பாபா அளிக்கமாட்டார்.


Buy Sai Baba Painting at Lowest Price by Dinesh Ghodke


எல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா, தாங்கள் விரும்பியதை எல்லாம் செய்வார்  என்று, பாபாவைப் போன்ற தெய்வீக மனிதரின் பக்தர்கள் தவறாகக் கருத இடமுண்டு. பாபாவின் மேலான அறிவுக்கு, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தைக் காட்டிலும் சிறந்த முடிவுக்கு வரமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 1915ஆம் ஆண்டில் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்த ஹார்தவைச் சேர்ந்த தனவந்தரான ஒரு கிழவர், ஒரு பெண்மணியுடன் ஷீரடிக்கு வந்தார். முதல் மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவு படிப்படியாகத் தேறி வந்தது. ஆனால் அதன்பிறகு திடீரென்று உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது முடிவு நெருங்கிவிட்டது போல் தோன்றவே, பேராசிரியர் நார்கேயை உதியை  பெறுவதற்காக அனுப்பினார். பாபா அவரிடம், அந்த மனிதர் உலகத்தை விட்டுச் செல்வதே அவருக்கு நன்மையை அளிக்கும் என்று கூறி, "உதியால்; அவனுக்கு என்ன பயன்? ஆனால் அவர்கள் கேட்டதால் உதியை எடுத்துச் செல்" என்றார். பேராசிரியரிடம் கூறியதையே, ஆனால் மறைபொருள் தரும்வகையில் ஷாமாவிடமும் பாபா கூறினார். "அவர் எப்படி இறக்க முடியும்? காலையில் அவர் மீண்டும் பிழைப்பார்" என்றார்.
                                      அந்த வயதான மனிதர் பிழைத்து விடுவார் என்று இதற்குப் பொருள் கொண்டுவிட்டனர். இரண்டாவது வாக்கியத்தில் மறைந்துள்ள எச்சரிக்கையை ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த மனிதர் இறந்துவிட்டார். பாபா தங்களுக்கு தவறான நம்பிக்கையை ஊட்டியதாகப் பக்தர்கள் கருதினர். சிறிது காலத்துக்குப்பின் கிழவரின் உறவினர் ஒருவர் கனவில் பாபாவை கண்டார். அவர் இறந்துபோன மனிதருடைய நுரையீரல்களைத் திறந்து காட்டினார். அவை அழுகிய நிலையில் இருந்தன. "இவை அளிக்கும் கொடிய துன்பத்திலிருந்து அவனைக் காத்தேன்" என்றார் பாபா. அதன்பிறகு, இறந்த கிழவரின் உறவினர்கள் மீண்டும் ஷீரடிக்கு வரத் தொடங்கினர்.ஏனெனில் துன்பப்படுபவருக்குத் தகுந்தது என்றும், நலமளிக்கக்கூடியது  என்றும் பாபா கருதினால், பாபா எத்தனையோ பேருக்குக் குணமளித்திருப்பதை  அவர்கள் அறிவர்.ஒருவரைக் குணப்படுத்துவதா வேண்டாமா என்று தீர்மானிக்க அதுவே அளவுகோலே தவிர, மற்ற உறவினர்கள் அந்த நோயாளியின்மேல் வைக்கும் பற்று  அளவுகோல் அன்று. பாபா ஒருவரது இறந்த காலத்தைப் பற்றி நூறு பிறவிகள் வரை அறிவார்;அதனால் அவரது இன்ப துன்பங்களுக்கான   காரணத்தையும் வெகு நுட்பமாக அறிவார். எனவே தமது பக்தர்களுக்கு எது மிகச் சிறந்ததோ, அதையே பாபா அளிப்பார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...