அக்கல்கோட்டில், அன்று ஒரு விசேஷ தினம். பலரும் ஸ்வாமி சமர்த்தரை தரிசனம் செய்ய வந்து இருந்தார்கள். அவரவர்கள் பலவிதமான பிரசாதங்களையும் கொண்டு வந்து ஸ்வாமிகளுக்கு தந்தவண்ணம் இருந்தார்கள். சிலர் கொண்டு வந்ததை தொட்டு ஆசிர்வதித்தார். சிலரது பிரசாதத்தில் ஒரு கை விரல் நுனியளவு எடுத்து சாப்பிட்டு அவர்களை திருப்தி படித்தியபடி அனுப்பியவாறு இருந்தார். அலை மோதும் வண்ணம் அளவு கூட்டம் அங்கு இருந்தது. ஒருவர் பின் ஒருவராக ஸ்வாமிகளை அருகில் சென்று தரிசித்து விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ஏழைப் பெண்மணியும் வந்து இருந்தாள். சாயம் போன சேலை…ஆனால் ஸ்வாமிகளைக் காண வேண்டும் என்ற உறுதி… தன் வீட்டில் இருந்து தான் கொண்டு வந்திருந்த எளிய பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆவல். ஆனால் அவள் மனதில் பயம். தானோ பரம ஏழை. ஆகவே அதை ஸ்வாமிகள் அதை தீண்டுவாரோ மாட்டாரோ. அவரை நெருங்கக் கூட அங்கிருந்தவர்கள் தன்னை அனுமதிக்க மறுக்கின்றார்களே என வருந்தியவாறு ஒரு மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை பார்த்தபடி இருந்தாள். சிறிது நேரம் ஆயிற்று. கூட்டம் கலையவில்லை. அமர்ந்து இருந்த ஸ்வாமிகள் எழுந்து நின்றார்.
மூலையில் அமர்ந்து இருந்த அந்த ஏழைப் பெண்மணியை தன் அருகில் வருமாறு அழைத்தார். ஸ்வாமிகள் யாரை அழைக்கின்றார் எனத் தெரியாமல் அங்கு இருந்த பணக்காரர்களும், வசதியாக இருந்த மனிதர்களும் நானா….நானா…..என ஒவ்வொருவராக கேட்க, ஸ்வாமிகளும் அவர்களிடம் நீ இல்லை….நீ இல்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த ஏழைப் பெண்மணியை நோக்கி தன் கையைக் காட்ட அனைவரும் ஒரே வியப்பு. எதற்க்காக அந்த ஏழைப் பெண்மணியை அவர் அழைக்கின்றார்?
ஸ்வாமிகள் அழைத்ததினால் அவர் அருகில் சென்று அவரை வணங்கினாள் அந்தப் பெண்மணி. அவள் எதுவுமே கூறும் முன் அவர் ‘ நீ கொண்டு வந்துள்ள பிரசாதத்தைக் கொடு’ என்றார். வெட்கத்துடன் தான் கொண்டு வந்திருந்த சிறிதளவு பிரசாத பாத்திரத்தை சுவாமிகளிடம் அவள் காட்ட அவர் அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டார். அதில் இருந்த சாப்பாட்டை எடுத்து உண்ணத் துவங்கினார். அதில் இரண்டு கவளம் எடுத்து உண்டப்பின் மீதி இருந்த இரண்டு கவளத்துடன் அதை அவளிடம் திருப்பித் தந்தார். ‘விரைவில் உனக்கு நல்ல குறும்புக்காரப் பிள்ளைப் பிறப்பான்’ என அவளை ஆசிர்வதித்தார்.
நாற்பத்தி ஐந்து வயதான அந்தப் பெண்மணி திகைத்து நின்றாள். தனக்கு குழந்தை இல்லை என்ற மனவருத்தம் இவருக்கு எப்படித் தெரிந்தது? தான் ஏழை என்பதையும் பார்க்காமல் அத்தனைக் கூட்டத்திலும் தன்னை அழைத்து தான் கொண்டு வந்து இருந்த மிக சாதாரமான பிரசாதத்தை ஆசையுடன் அனைவர் முன்னிலையிலும் உண்டாரே….ஸ்வாமிகளின் அன்புதான் என்னே…… கண்களில் கண்ணீர் வழிந்தோட அவள் ஸ்வாமிகளின் காலடியில் விழுந்து சிறிது நேரம் அழுது புலம்பினாள். அங்கு நடந்தவற்றை பார்த்தபடி நின்று இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஒவ்வொருவரும் தான்தான் ஸ்வாமிகளின் உண்மையான பக்தர் என எண்ணிக் கொண்டு பெருமையுடன் பலவிதமானா திரவியங்கள் போட்ட மணக்கும் பிரசாதத்தை ஸ்வாமிகளிடம் தந்தாலும் ஒரு ஏழையின் எளிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அதை ஆசையுடன் அவர் உண்டது அவர் ஏழை – பணக்கார பந்தங்களைக் கடந்த உண்மையான தெய்வமே என்பதை அல்லவா காட்டியது! ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்ற அந்தப் பெண்மணிக்கு அடுத்த ஆண்டே அழகிய குழந்தை பிறந்தது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil