ஓம் பதவிருஷ்டகங்காம்பஸே நம;
தமது பாதங்களிலிருந்து கங்கை யமுனை நீரை வரவழைத்தவருக்கு நமஸ்காரம் !
தாஸ்கணு மகராஜ் சீரடியில் இருந்த சமயம், ஒரு புண்ணிய தினத்தன்று, அதாவது ஆடிப்பெருக்கைப் போன்ற ஒரு புண்ணிய நாளில், கங்கை நதிக்கு சென்று நீராட (கங்கா ஸ்நானம் ) வேண்டும் என்று விரும்பினார்.
அதற்கு பாபா, "ஏன் அங்கே போக வேண்டும் ? கங்கை இங்கேயே இல்லையா? என் பாதங்களிலேயே இல்லையா ?" என கேட்டார்.
இந்த கேள்விக்கு தாஸ்கணு மஹாராஜ் சமாதானமாகவில்லை.
தாஸ்கணுவின் நம்பிக்கையில்லா மனோபாவத்தை அறிந்த பாபா தமது பாதத்தருகில் வந்து உள்ளங்கையை நீட்டச் சொன்னார்.
தாஸ்கணுவும் கைகளை நீட்டிக் கொண்டே அந்த அனுபவத்தை இவ்வாறு சொல்கிறார்...
"அப்போது பாபாவின் இரு பாதங்களில் இருந்தும் நீர் பெருகிற்று. அது வியர்வைத் துளிகள் போன்று சில சொட்டுக்கள் அல்லாமல், மெல்லியதாக நீரூற்றே வந்தது. சில நிமிடங்களில் என் கை நிறைய நீரை சேகரித்துக் கொண்டேன். இதோ கங்கை ! இதோ யமுனை ! என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! அந்த நீரை என் தலைமீது தெளித்துக் கொண்டேன் !" என தாஸ்கணு மகராஜ் அனுபவங்களில் கூறியுள்ளார்.
கங்கை, யமுனை மட்டுமல்ல, அனைத்து புண்ணிய நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் பாபாவின் பாதங்களிலே உள்ளன. பாபாவின் பாத தரிசனம் ஒன்றே நம் அனைத்து பாவகர்மங்களையும் கழுவித் தள்ளும் கங்காஸ்நானம் ஆகும்.
ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவங்களைக் கழுவித் தள்ளுவதற்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள். ஆனால், கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக்கொள்ள ஸாயீபாபாவைப் போன்ற முனிவர்களின் பாதங்களை அடைக்கலம் தேடி சரணடைகிறாள்.
நமது பாவங்களைக் கழுவித் தள்ள, ஸாயீயின் பாதங்களை விட்டுவிட்டு கங்கைக்கும் கோதாவரிக்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை ! பாபாவின் ஸ்தோத்திரத்தை கேட்டால் போதும். சுவாரசியமான ஸாயீயின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலே போதுமானது.
-பூஜ்யஸ்ரீ நரசிம்மசுவாமிஜி
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil