
ஸாயீபாபா குணங்களேதும் இல்லாதவர்; குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். பக்தர்களின் மங்களத்துக்காகத் தூய நற்குணங்களுடன் ஓர் உருவம் ஏற்றுக்கொண்டார். அவருடைய பாதாரவிந்தங்களில் நான் முழுமனத்தோடு சரணடைகின்றேன்.
ஸமர்த்த ஸாயீயை அடைக்கலமும் பாதுகாப்பும் வேண்டி சரணடைந்தவர்கள் எத்தனையோ அனர்த்தங்கள் (தீங்கு/கேடு) நேராமல் தப்பித்துக்கொண்டார்கள். யானும் அந்தச் சுயநலத் தேவைக்காகவே அவருடைய பாதங்களில் தலை சாய்க்கின்றேன்.
பக்தர்களின் பிரேமையைச் சுவைப்பதற்காகவும் அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவும் உருவமற்ற ஒன்றேயான ஸாயீ, உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டார். அவருடைய அன்புக்கு நமஸ்காரம்.
ஓ குருராயரே ! ஓ ஆனந்த மூர்த்தியே ! நீரே பாதையும் முடிவாகச் சென்றடையும் இடமுமாகும். நீரே நான் இளைப்பாறும் சோலை; ஏனெனில், உம்மால்தான் என்னைப் பீடிக்கும் துன்பங்களையும் வலியையும் சுகப்படுத்த முடியும்.
ஸாயீ கிருபைகூர்ந்து எனக்கு என்று அனுக்கிரஹம் செய்தாரோ, அன்றிருந்து இரவுபகலாக அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதுவே பிறவிப் பயத்தை அழித்துவிடும்.
இனி எனக்கு ஜபம் வேறேதுமில்லை, தவமும் வேறெதுவுமில்லை, ஸாயீயின் சுத்த ஸ்வரூபத்தையும் ஸகுண ரூபத்தையும்தான் (குணங்களோடு கூடிய மானிட உருவம்) நான் பார்க்கின்றேன்.
ஸாயீயின் முகத்தை நிலைத்துப்பார்த்தால், பசி, தாகம், அனைத்தும் மறந்து போகின்றன. இதற்கு நிகரான சுகம் ஏதும் உண்டோ? வாழ்க்கையின் சோதனைகளும் வேதனைகளும் மறந்தே போகின்றன.
பாபாவின் நயனங்களுக்குள் பார்க்கும்போது என்னையே மறந்துவிடுகிறேன். உள்ளிருந்து பிரேமை பொங்குவதால் மனம் சொல்லொணாத மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோகிறது.
என்னைப் பொறுத்தவரை, கர்மமும் தர்மமும் சாஸ்திரங்களும் புராணங்களும் அனுஷ்டானங்களும் (விதிக்கப்பட்ட தினப்படித் தொழுகைகள்) யோகமும் யாகமும் தவமும் தீர்த்தயாத்திரையும் அனைத்தும் பாபாவின் திருவடிகளே !
இது கர்மானுபந்தத்தினால் விளைந்தது; ஸாயீ பாதங்களின்மேல் என்னுடைய அபிமானம் ஓங்கியது; ஸாயீ பாதங்களின் மறைமுகமான சக்தியை நான் அனுபவித்தேன்; இந்த சக்தியை யான் எவ்விதம் வர்ணிப்பேன்?
இந்த சக்தி பக்தியைப் பெருகச்செய்து ஸாயீ பாதங்களின்மேல் பற்றுதலையும் ஓங்கச் செய்கிறது. இப் பற்று, உலக வாழ்க்கையில் உழன்றுகொண்டிருக்கும்போதே பற்றற்ற நிலையை வளர்த்து ஆனந்தமளிக்கிறது.
- கோவிந்த ரகுநாத தாபோல்கர்

"HAZRAT BABAJAN"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil