Sunday, March 31, 2019

பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை ! அன்புதான் எனக்கு முக்கியம்

Shirdi Sai Baba Answers

ஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம்.  அவர்களில் ஒருவர் டாக்டர். ராஜகோபாலாச்சாரி.  அவர் பாபாவின் படத்தை  தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார்.

டாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது.  அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர்.  ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது.

ஒருமாத பயணம் முடிந்து டாக்டர் , தனது வீட்டிற்கு திரும்பினார்.  அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு.  பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார்.  "கனவில் பாபா வந்தார்.  ஆனால் எதுவும் பேசவில்லை !  டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார்.  முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் !"  அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார்.

மறுநாள் காலையில் எழுந்த டாக்டர்,  "பாபாவின் படத்தைப் பார்த்தால்,  பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன." "அடடா ! பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் !  என்னை மன்னித்து விடுங்கள் பாபா !"  என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.

ஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் ,  "சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்றார்.  அதற்கு டாக்டரின் மனைவியோ , "இன்னும் சமையல் முடியவில்லை !  சற்று நேரம் பொறு !" என்று கூறினாள்.  "அம்மா !  பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை !  அன்புதான் எனக்கு முக்கியம் !"  என்றார் சாது.  உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள்.   வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார்.  ஆனால்  "அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும், ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன."  உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள்.  அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார்.

வாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் , "என்னம்மா !  என்ன விசயம் ?  ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்?"  என்று கேட்டார்.  டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி , "அவர் என் வீட்டில் சாப்பிட்டார்.  அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் !" என்றாள். 

பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார்.  திரும்பி வந்த சாது,  டாக்டரின் மனைவியிடம் , 'அம்மா ! பாக்கு சௌபாக்கியம் !  இன்னொன்று ஐஸ்வர்யம் !  சன்யாசிக்கு அவைகள் எதற்கு?   அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு !" என்று சொல்லிச் சென்றார்.

அதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது !  அது மட்டுமல்ல !  தபால்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் "சாயி" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.  சாதாரண "அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர்.  அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 30, 2019

பாபாவிடம் நம்பிக்கையுடன் சரணைடைந்தால் சகலமும் கைகூடும்


கொத்தப்பாலம் என்ற கிராமத்தில் வசித்தவர் ஸ்ரீகோபாலரெட்டி.  அவரது மனைவிக்குப் பிரசவமாகிப் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி 15-ம் நாள் வீட்டிற்கு அனுப்பினார்கள்.  ரயில் மூலம் ஊருக்கு புறப்பட்டனர். 

அவர்கள் செல்லும் ரயிலுக்கு பயங்கர கூட்டமாய் இருந்தது.   குழந்தையை வைத்துக் கொண்டு ஏறுவது சிரமம் என தோன்றியதால் , ரெட்டி தனது மனைவியை முதலில் ரயிலில் ஏறச் சொன்னார்.  ஜன்னலோர இருக்கையில் அவள் அமர்ந்ததும், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்தார்.  குழந்தையை வைத்திருந்த ரப்பர் ஷீட் நழுவி,  குழந்தை கீழே விழுந்துவிட்டது.  ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது. ரெட்டியையும் அவரது மனைவியையும் ஆளாளுக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் செய்தனர்.

என்ன புண்ணியமோ தெரியவில்லை,  கீழே விழுந்த குழந்தை அழவே இல்லை ! எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம் ! ஆனால் ரெட்டி மனைவி மட்டும் குழந்தையை நினைத்துக் கதறினாள்.  மறுபடியும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.  குழந்தைக்கு எங்கே அடிபட்டதென்று கண்டுபிடிக்க முடியவில்லை ‌!  அதன்பிறகு குழந்தை உட்கார்ந்தே நகர்ந்தாள்.  அவளால் நடக்க முடியவில்லை !  நான்கு வயதாகியும் பேசவில்லை.  அவர்கள் குடும்பத்தார் அனைவரும் வேண்டாத கோவிலில்லை !  கும்பிடாத தெய்வமுமில்லை !  ஆனாலும் பலன் ஒன்றுமில்லை!

ஒருநாள் கோபால் ரெட்டியின் வீட்டிற்கு வந்த சாயிபக்தர் பரத்வாஜர்,  குழந்தை மல்லிகாவின் நிலையைப் பார்த்தார்.  "கோபால் !  பாபாவின் மகிமையை நீ அறிந்ததில்லையா?  பாபாவின் அருட்பார்வை ஆண்டியையும் அரசனாக்கும் !  அவரை நம்பிக்கையுடன் சரணைடைந்தால் சகலமும் கைகூடும்!"  என்று கூறிக்கொண்டே சில கற்கண்டுகளை பாபாவுக்கு நைவேத்யம் செய்து அதை அந்த மல்லிகா குழந்தையிடம் கொடுத்து மீதம் வைக்காமல் சாப்பிடச் சொன்னார்.  பாபாவின் உதியை எடுத்து அவள் கை கால்களில் தடவிக் கொடுத்தார்.

மறுநாள் மல்லிகா எழுந்து சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.  அடுத்த நாள் நடக்க ஆரம்பித்தாள்.  அதற்கடுத்த வாரம் வேகமாய் ஓடினாள்.  மாடிப்படிகளில் விறுவிறுவென்று ஏறினாள்.  அதைக் கண்ட அவளின் பெற்றோர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

"பாபாவின் மகிமைதான் என்னே!" என்று வியந்த அவர்கள், வியாழக்கிழமை தோறும் தங்கள் வீட்டில் பாபா பஜனையை அமர்க்களப்பட வைத்தார்கள்.  பஜனையில் எல்லோரும் வியக்கும் வண்ணம் "மல்லிகா  மழலைக் குரலில் பாடினாள் !"  ஆண்டுதோறும் தவறாமல் ஷீரடிக்கும் சென்று வந்தனர்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 29, 2019

தக்க சமயத்தில் உதவி செய்த பாபா

201671893718-sai Baba Painting Hd by sairattanrajesh

பாபாவின் பக்தரான திரு பிள்ளை தமது வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னால் அவரது குடும்பம் மட்டிப்பாடு என்ற கிராமத்தில் இருந்தது. அவர்களது மகன் பட்டமேற்படிப்பை தனிச்சிறப்புடன் முடித்திருந்தான். அவர்களது மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவன் தும்மலகுண்டாவில் தனது உறவினர்களிடம் தங்கி வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். சிறிது காலத்தில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் ஓர் ஊழியர் வேலைக்கான பேட்டிக்காக அழைக்கப்பட்டான். அதற்கு எத்தனையோ மனுதாரர்கள் பெரும்புள்ளிகளின் சிபாரிசுகளுடன் வருவார்களாதலால், அத்தகைய சிபாரிசு  ஏதுமற்ற தான் பேட்டிக்குச் செல்வதில்  பயனில்லை என்று நினைத்தான். இறுதியில் தன் தாயின் விருப்பப்படி பேட்டிக்குச் சென்றான். பிறகு அவன் மட்டிப்பாடுக்குச் சென்று விட்டான். 25.8.76 அன்று பாபா திரு பிள்ளையின் மனைவியான திருமதி சுசீலாம்மாவின் கனவில் தோன்றி வேலைக்கான நியமன உத்தரவு தும்மலகுண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை பெற்று அவனை வேலையில் சேரும்படி கூறு என்றார். அவள் விழித்துக் கொண்டு தனது கணவரிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அது அவளது ஆசையால் விளைந்த கற்பனை என்று கருதி அவர் அசட்டையாக இருந்து விட்டார். மறுநாளும் பாபா அவள் கனவில் தோன்றி அதையே மீண்டும் கூறினார். அவள் தன் மகனிடம் அதைப் பற்றி கூறிய போது அவனும் அதில் அக்கறை காட்டவில்லை. மீண்டும் மூன்றாம் நாள் பாபா அவளது கனவில் தோன்றி "உன் கணவர் சொல்வதை பொருட்படுத்தாதே. தும்மலகுண்டாவில் இருந்து வேலைக்கான நியமன உத்தரவை பெற்று உன் மகனை வேலையை ஏற்க அனுப்பிவை. தாமதம் செய்யாதே" என்றார். மறுநாள் காலை ஸ்ரீ பிள்ளை தமது உறவினருக்கு ஒரு லெட்டர் எழுதினார். அதற்கு பதிலாக, அவர்களது மகனை உடனே வேலையில் சேரச் சொல்லி, காளஹஸ்தியில் இருந்து தந்தி வந்தது. அவர்களது உறவினர்கள் காளஹஸ்திக்கு புறப்பட்டு சென்ற பிறகு, தபால்காரர் நியமன உத்தரவு உட்பட எல்லாக் கடிதங்களையும் பூட்டிய வீட்டுக்குள் எறிந்து விட்டுச் சென்றிருக்கிறார் என்று பின்னால் அவர்களுக்கு தெரிய வந்தது. இவ்வாறாக பாபா அந்த குடும்பத்துக்கு தக்க சமயத்தில் உதவி செய்தார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 28, 2019

உணவை பாபா ஏற்றுக்கொண்டார்

Image may contain: 1 person, closeup

ஸ்ரீ தத்தாத்ரேய ஜெயராம் ராஜே என்பவர், தானாவிலுள்ள ஒரு வழக்கறிஞர். ஒருமுறை 1955ஆம் ஆண்டில் அவர் சாய்பாபாவின் சரிதத்தைப் பாராயணம் செய்து முடித்தார். மறுநாளாகிய வியாழக்கிழமையன்று அவர் பாபாவின் படத்துக்கு இனிப்புகளை நிவேதனம் செய்தார். பகலுணவு வேலைக்கு சரியாக ஒரு பக்கீர் உணவுக்காக வந்தார். அவர் ஒரு முஸ்லிமைப் போல் உடை அணிந்திருந்தார். வைதீகப் பிராமணரான ராஜே, அவருக்கு ஓர் இலையில் உணவை அளித்து அதை வேறு எங்காவது சென்று உண்ணுமாறு வேண்டிக்கொண்டார். அங்கேயேதான் தான் உண்ணப் போவதாக அவர் விடாப்பிடியாய்க் கூறவே, அவரை பாபாவாகவே கருதி ராஜே அவருக்கு உணவு அளித்தார். உணவு முடிந்தவுடன், பக்கீர் தட்சிணை வேண்டும் என்று கேட்டார். ராஜே தம்மிடம் அந்த நிமிடத்தில் மிகக்குறைவான சில்லரை தான் இருப்பதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்கு ஒரு கட்சிக்காரர் ஐம்பது ரூபாய்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கொடுத்தால் பக்கீருக்குச் சேரவேண்டியதை தான் கொடுக்க முடியும் என்றும் கூறினார். அப்போது பக்கீர் அந்தக் கட்சிக்காரர் 3.15 மணிக்கு தாம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பார் என்றும் தாம் தட்சனையை பெற்றுக் கொள்வதற்காக மாலை 5 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு சென்றார் வெகு தூரத்தில் வாழ்ந்து வந்த தனது கட்சிக்காரர் தொகையை செலுத்துவதற்காக வருவாரா என்று வியந்தார். ஆனால் ஆச்சரியப்படும்படியாக அவரது கட்சிக்காரர் 3.15 மணிக்கு வந்து, தாம் செலுத்தவேண்டியப் பணத்தை அளிக்கவே செய்தார். பக்கீரும் 5 மணிக்கு வந்து, பத்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டார். அதற்குப்  பதிலாக அவர் ராஜேக்கு சிறிது விபூதி கொடுத்தார். அது அவர் கையில் விழுந்த உடன் ஒரு ரோஜா மலராக மாறியது. ராஜே வியப்போடு நிமிர்ந்து பார்த்தபோது பக்கீரை எங்குமே காணவில்லை. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 27, 2019

ஆபத்பாந்தவா ஷீரடிவாசா

Image may contain: 2 people, closeup

போர்பந்தரிலுள்ள ஒரு வக்கீல் சாயிபாபாவின் பக்தர்.   ஒருமுறை அவர் ரயிலில் ஷீரடிக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைக் கேட்டார்.  பயணச்சீட்டை எடுக்க பர்ஸை தனது பேண்ட் பாக்கெட்டில் தேடியபோதுதான் , பர்ஸை யாரோ பிக்பாக்கெட் அடித்து திருடியது தெரியவந்தது.  அதில் டிக்கெட் மட்டுமின்றி தனது பயணச் செலவுக்கென வைத்திருந்த நூறு ரூபாயும் பறிபோயிருந்தது.

தனது பரிதாபமான நிலைமையை டிக்கெட் பரிசோதகரிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போது,  ஒரு வயதான பிரமுகர் ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் கொடுத்தார்.  "அது தன் நண்பருடைய பயணச்சீட்டு என்றும்,  கடைசி நேரத்தில் அவர் பயணத்தை ரத்து செய்ததால் இதை இவருக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமே !" என்றும் கூற,  பரிசோதகரும் சம்மதித்துச் சென்றுவிட்டார்.

இக்கட்டான சூழ்நிலையில் உதவி தன் மானம் காத்த அந்த பெரியவரோடு தன்னை அறிமுகம் செய்து கொண்டும் பேசிக் கொண்டுமே இருவரும் ஷீரடியை அடைந்தனர்.  ஷீரடியிலும் வக்கீலுடைய அனைத்து செலவுகளையும் அந்த பெரியவரே ஏற்றுக் கொண்டார்.  அதோடு மட்டுமல்லாமல் அவரின் அன்புப் பரிசாக "ஸ்ரீ ஸாயி சத்சரித்திரத்தையும்" வக்கீலுக்கு கொடுத்தார்.  

" நான் ஊருக்குத் திரும்பிப் போனதும் நீங்கள் எனக்கு செலவழித்த தொகை அனைத்தையும் மணியார்டர் மூலம் அனுப்பி விடுகிறேன்,  தயவுசெய்து உங்கள் முகவரியைத் தாருங்கள் !" என்று வக்கீல் அந்தப் பெரியவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார். 

ஷீரடிப் பயணம் முடிந்து ரயிலில் திரும்பி கொண்டிருந்த வக்கீல் ,  "சாயி சத்சரித்திரத்தைப் படிக்கலாம் என்று நினைத்து புத்தகத்தைப் புரட்டியபோது,  அதிலிருந்து நூறு ரூபாய் தாள் ஒன்று விழுந்தது."  தான் ஊருக்கு திரும்பி போகும் செலவுக்கும் அந்த பெரியவரே வைத்திருக்கிறார் போலும் !  "கேட்காமலே கொடுக்கும் பெருந்தகை !" என்று அந்தப் பெரியவரைப் பற்றி மனதுக்குள் நினைத்து சிலாகித்தார்.

வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெரியவர் கொடுத்த சாயி சத்சரித்திரத்தை பூஜை அறையில் வைக்கப் போன வக்கீல் திடுக்கிட்டார்.   "ரயிலில் தொலைத்துவிட்டதாக எண்ணிய பர்ஸ் அங்கே இருந்தது.  அதுவும் பாபாவின் படத்தின் முன்னால் !"

அதற்கடுத்த வாரம் அந்தப் பெரியவருக்கு அனுப்பிய மணியார்டரும் திரும்பி வந்தது, "அப்படி ஒரு முகவரியே இல்லையென்று !"
அப்போதுதான் அந்த வக்கீலுக்குப் புரிந்தது,  ரயிலிலும் ஷீரடியிலும் ஆபத்பாந்தவனாக வந்தது பெரியவரல்ல , "சாயிபாபா"வென்று !

எல்லோரிடமும் தட்சிணை வசூலித்த பாபா, "தனக்கு மட்டும் தக்ஷிணை கொடுத்திருக்கிறார் !  இது எப்பேர்ப்பட்ட பாக்கியம் !" என்று பெருமைக் கண்ணீர் மல்க, "சத்சரித்திரத்திலிருந்து விழுந்த நூறு ரூபாயை செலவழிக்காமல் பத்திரமாக பூஜையறையிலேயே வைத்து தினமும் பூஜித்தார் !" 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 26, 2019

உனக்கு பக்குவம் வரவில்லை ! பேராசைப்படுவதை நிறுத்து

Image may contain: 1 person, standing and text


1915-ம் ஆண்டில் அப்துல்காதர் என்ற பக்தர் பாபாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.  அதனால் அவர் எப்போதும் பாபாவின் சேவையிலேயே மூழ்கிப் போய்,  ஷீர்டியிலேயே தங்கி தொண்டு செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் பாபாவிடம் சென்று, "பாபா ! நான் எப்பொழுதும் தங்களையே நினைத்து நினைத்து உருகி தொழுது கொண்டிருக்கிறேன்.   தங்களுடைய சேவையிலேயே என்னுடைய வாழ்நாள் நேரம் முழுவதும் செலவழிக்கிறேன்.  அதற்கு ஈடாக உங்களுடைய சக்தியில் ஒரு பகுதியை எனக்களித்து என்னை மகானாக்க வேண்டும் பாபா!" என்று கெஞ்சினார்.

பாபா சிரித்துக் கொண்டே, "அப்துல்!  அதற்கான பக்குவம் உனக்கு வரவில்லை !  ஆக,  பேராசைப்படுவதை நிறுத்து!"  என்று கூறினார்.  ஆனாலும் அப்துல் விடுவதாக இல்லை.  மீண்டும் மீண்டும் பாபாவை நச்சரித்தார்.

பாபாவும் ஒருமனதாக யோசித்தவராக,  தன் கைகளை மூடிக் கொண்டு ஏதோ முணுமுணுத்தபடி,  அப்துலை நோக்கி வீசினார்.   பாபா கையில் ஒன்றுமில்லை.  ஆனால், அப்துல் மட்டும்  "தனக்குள் ஏதோ ஒன்று இறங்கியதை உணர்ந்தார்."

அதுநாள் முதல் அப்துல்காதர் ஷீரடிக்கு வந்த ஜனங்களுக்கு நீதி போதனைகளை சொல்ல ஆரம்பித்தார்.  திடீர் திடீரென எல்லோரையும் கண்டபடி திட்டினார்.  கல்லால் அடிப்பதாக பயமுறுத்தினார்.  தனக்குத்தானே எதை எதையோ பேசியும் உளறிக் கொண்டும் பித்துப் பிடித்தவரைப் போல் எல்லோரிடமும் நடந்து கொண்டார்.  அப்துலின் இந்த செய்கைகளால் ஒன்றரை மாதங்களாக ஷீரடி மக்கள் பெரிதும் அவதிப்படுவதை பாபா உணர்ந்தார்.

ஒருநாள் அப்துலை மசூதிக்குள் அழைத்த பாபா, தன் மூடிய கைகளை அவர்முன் நீட்டி , "லாவ் பாலே இடார்"  என்று கூறியபடி தன் பக்கம் இழுத்தார்.

ஏதோ ஒன்று தன்னிடமிருந்து வெளியேறுவதை அப்துல் உணர்ந்தார்.  அதன்பின் அப்துல் தன் இயல்பு நிலைக்கு திரும்பி சாதாரணமாகி விட்டார்.  "தன் தகுதிக்கு மீறிய வேண்டுதலை பாபாவிடம் வைத்தது மிகப்பெரிய தவறு" என்பதை அந்த நொடியில் உணர்ந்த அப்துல்,  பதினைந்து நாட்கள் கழித்து பூனாவுக்குச் சென்று ஒரு பீடிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 25, 2019

பாபாவின் எல்லையில்லாக் கருணை

Image may contain: 5 people

நெல்லூர் ஜில்லா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்தவர் சுப்பம்மா.  படிப்பில்லாத அவளது வயது அறுபது.  ஒரு வியாழக்கிழமை தனது சம்பந்தி வீட்டில் நடந்த பாபா பஜனைக்குச் சென்றிருந்தாள்.

பஜனையின்போது பாபாவின் படத்தை நோக்கி கைகூப்பி கண்ணீர் மல்க , "பாபா !  தாங்கள் எத்தனையோ பேருடைய ரோகங்களைத் தீர்த்திருக்கிறீர்களாமே!.  இருமல் வந்து துப்பினால் ரத்தம் வருகிறது.  காசநோயாயிருக்கும் என்று சொந்தக்காரர்கள் என்னை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.  வயதோ அறுபதாகிவிட்டது.  கண்பார்வை வேறு மங்குகிறது.  ஆபரேஷன் செய்தாலும் பார்வை வராது என்கிறார்கள்.  அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சலாலும் வலுவின்றி படுத்து விடுகிறேன். ஆதரவே இல்லாத இந்த அநாதைக்கு தாங்கள் கருணை காட்டக் கூடாதா பாபா?"  என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டாள்.

அன்றிரவு பாபா அவள் கனவில் தோன்றி , "சில பச்சிலைகளை அவள் காதில் பிழிந்தார்.  "கரும்பு கடிப்பது போல் பாவனை செய் !"  என்றார்.  அவளும் அவ்விதமே செய்தாள்.  அப்போது சில துளிகள் தொண்டையில் இறங்கியது.  அந்தச் சாறு இனிப்பாய் இருந்ததை உணர்ந்தாள்.

மறுநாள் தூங்கி எழுந்த பிறகு கண்விழித்துப் பார்த்தால், அவளுக்கே ஆச்சர்யம் !  "பார்வை துல்லியமாய் தெரிந்தது.  காய்ச்சல்,  ஜலதோஷம் இரண்டுமே அதன்பின் வரவில்லை !  உமிழ்ந்தால் ரத்தமும் வரவில்லை !".   பாபாவின் எல்லையில்லாக் கருணையை எண்ணி வியந்தாள்.  அதன்பிறகு வாராவாரம் வியாழக்கிழமை தோறும் தவறாமல் பாபாவின் பஜனை எங்கு நடந்தாலும் ஓடோடிச் சென்று கலந்து கொண்டாள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...