Sunday, October 18, 2020

உன் ஆர்வத்தை என்பால் திருப்பு

நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன். என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு. என் பார்வையை உன்மேல் வைப்பேன். ஆகையால் மந்திரம், தந்திரம், உபதேசங்கள் எல்லாம் வீண். என் பேச்சை கேள். விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள். என்னையே லட்சியமாகக் கொள். உனக்கு நிச்சயம் சுபம் விளையும். என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 17, 2020

எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌


என்னிடத்தில் எப்போதும் நம்பிக்கையும் பொறுமையும்‌ கொண்டிருங்கள் !  குருவான நான் உங்களிடமிருந்து வேறெதையும் ஒருபோதும் எதிர்பார்க்கவுமில்லை .  நான் உங்களை ஒருபோதும் புறக்கணிக்கவுமில்லை.  எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌.  

நான் உங்களுடனே தங்கி வாழ்கிறேன். ஒரு சில சமயம் உங்களைப் பிரிந்து இருப்பேன் எனினும், என்னுடைய அன்புடமைக்குத் தேவையோ, அன்பின்மையையோ நான் காட்டுவதில்லை.

தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன் அருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணி வளர்ப்பதைப் போன்ற‌ அதேவிதமாக, நானும் உங்களை என் கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் பேணிப் பாதுகாப்பேன் !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 13, 2020

குருவிற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய மிகமிக முக்கியமான தட்க்ஷிணை


குருவிற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய மிகமிக முக்கியமான தட்க்ஷிணை ஸபூரி. "பொறுமை" அல்லது "விடாமுயற்சி" என்பதே ஸபூரி ஆகும்.

குருவினிடத்தில் பொறுமையுடனும், மிகநீண்ட காலம் அவருக்குச் சேவை செய்யும் விடாமுயற்சியுமே இவ்வுலக வாழ்க்கை எனும் பெருங்கடலை கடப்பதற்கான தோணியாகும்.  அது துன்பக் கடலில் தத்தளிக்கும் உங்களை அக்கரையில் சேர்ப்பிக்கும்.  

குருவினிடத்தில் பொறுமை காப்பது பாவங்களையும் வேதனைகளையும் அறவே நீக்கும். பல்வேறு வகைகளில் உங்களுக்கு நேரவிருக்கும் பேராபத்துக்களை விலக்கும். எல்லா அச்சங்களையும் அப்பால் அகற்றும்.  கடைமுடிவாக, அது உங்களுக்கு மிகச்சிறந்த வெற்றி அளிக்கும்.

பொறுமை என்பது மனிதனிடத்தில் உள்ள நற்பண்புகளின் சுரங்கம்.  அது நல்ல எண்ணங்களின் கூட்டாளி.

இந்த மிகச்சிறந்த தட்க்ஷிணையை நீங்கள் எனக்கு அளித்தால் நான் மனம் மகிழ்வேன் !


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 4, 2020

சாய்பாபா என்பவர் யார்?அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும்?

சாய்பாபா என்பவர் யார்?  அவர் எப்பேர்ப்பட்ட அவதாரம் ? ‌அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி ராமகிருஷ்ண ஸ்வாமிஜி என்பவருக்கு அவரது ஆன்மீக குருவான பூஜ்யஸ்ரீ நரசிம்மசுவாமிஜி அருளி போதித்த உரை :


"அமைதியாய் அமர்" எனும் சாய்பாபாவின் அறிவுரையை என்றும் மறக்காதே !  பொறுமை,  பொறுமை, காத்திரு !   இந்தப் பொறுமை இறுதியில் கனி தரும்.

"முதலில் சாய்பாபாவின் பாதாரவிந்தங்களில் கவனம் வை!  பின் அப்படியே மேல்நோக்கி கவனத்தைக் கொண்டு போ !  சாய்பாபா பொன்னுடலின் ஒவ்வொரு பாகமாய் கவனத்தைக் குவித்தபடி தியானித்து இறுதியில் அத்திருவுருவம் முழுக்கவும் நினை! 

இப்படியே அவதாரத் திருவுருவின் கீழிருந்து மேலும்,  மேலிருந்து கீழும்,  ஆனால்,  "முழு விடுதலை தேவை!" என்ற ஒரே நோக்கோடு மனம் முழுவதையும் பாபாவின் பாதாரவிந்தங்களில் மட்டுமே குவித்து வைத்து பிரார்த்தி !.   அந்த "இறைமகனாரின் முழுக் கருணையும் உனக்கு கிடைக்கும் !".  முழு ஆனந்தம் - சச்சிதானந்தம் - உன்னை மேவும்.

பிரம்மாவுக்கும்,  விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்,  சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது.  சாய்பாபா எனும் பரிசுத்தமான மாசுமறுவற்ற எங்கும் நிறைந்த ஒரே பரப்பிரம்மத்தில் மும்மூர்த்திகளையும் ஒருங்கே நீ காணலாம்.

கட்டுப்படுத்தி பூட்டி மறைத்து வைக்காமல்,  அவருக்குள் இருக்கும் ஆனந்தமயமான இறைமையை,  அங்கெங்கனாதபடி எங்கெங்கிலும் காட்டி ஆடிக் கொண்டிருக்கிறார் சாய்பாபா.  இது உன் நினைவிலிருக்கட்டும் !

நிஜ சாதுக்களும் சந்நியாசிகளும் அப்படி எங்கும் நிறைந்துள்ள அந்த ஆனந்தத் தாண்டவத்தைக் கண்குளிர காணுவதிலேயே ஆனந்தமடைந்துக் கொண்டிருக்கின்றனர்.  நீயும் அதை முழுமையாக உணரலாம்.  

அவரது பாதங்களுக்குள் வந்து, முழுமையாக அடைக்கலம் அடைந்துவிடுவோருக்கு அவரது கருணை மழையைக் கட்டுக்கடங்காது பொழிந்து தள்ளுவார்.

"சாய்பாபா"தான் உன் தாய் !  அவளுக்கு உன் பசி தெரியும்.  ஊட்டுவார்.  ஆன்மீகப் பசியெடுத்துக் கதறும் உன் கூக்குரலைப் பசியில் அழும் குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு உடனே தீர்க்கும் தாயாய் வந்து அவர் தீர்த்துவிடுவார்.

ஆனால் ஒன்றினை மட்டும் மனதில் எழுதிக்கொள் !... "மிக உயர்ந்த ஆன்மீக பலாபலன்களை எட்ட வேண்டுமென்றால்,  எல்லா வகையிலும் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்து ஒழுகாது முடியாது!"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 3, 2020

பாபாவே கண்கண்ட தெய்வம்
ஆலந்தி எனும் கிராமத்தில் வசித்தவர் ஒரு துறவி.  என்னதான் சம்சார வாழ்க்கையில் துறவறம் பூண்டிருந்தாலும்,  ஊழ்வினை காரணமாக அவர் காதில் தாளமுடியாத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். 

துறவியின் வேதனையைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்து விவசாயி ஒருவர்  துறவியிடம் சென்று,  "அய்யா !  ஷீரடி என்றொரு கிராமம் இருக்கிறது.  அங்கே சாய்பாபா எனும் சாது ஒருவர் இருக்கிறார்.  அவர் தரும் உதியே பக்தர்களின் கடும் நோய்களையும் தீர்த்து விடுவதாக பலனடைந்தோர் கூறுகின்றனர்.  தாங்களும் அங்கு சென்றுதான் பாருங்களேன்!" என்றார்.

அதைக் கேட்ட துறவி உடனடியாக ஷீரடிக்கு சென்றார்.  அங்கே இருந்த ஷாமாவை அணுகி விபரத்தைக் கூற, ஷாமாவும் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்.

ஷாமா பாபாவிடம் மெதுவாக , "பாபா !  இவருக்கு காதில் சொல்லமுடியாத வலியும் வீக்கமும் பல வருடங்களாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  ஆனாலும் அந்த வலியும் வீக்கமும் இன்னும் குறைந்தபாடில்லை !  டாக்டரிடம் கேட்டால் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறுகிறாராம். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அரற்றுகிறார்.  தாங்கள் உதி அளித்து ஆசி அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். !" என்றார்.

பாபா அந்த துறவியை அருகில் அழைத்து, "அல்லாஹ் அச்சா கராஹே !" என்று கூறி தனது உதியை அவரது காதில் ஊதினார்.  துறவியும் பாபாவை பணிவுடன் வணங்கிவிட்டு ஊர் திரும்பினார்.

ஒருவாரம் கழித்து ஆலந்தி சுவாமிகள் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  அதில் "தனக்கிருந்த  காது வலியும் வீக்கமும் பாபா ஊதிய காற்றிலேயே பறந்துவிட்டதாகவும் ,   ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று டாக்டர் தீர்க்கமாக சொல்லிவிட்டதாகவும்,  பாபாவே எனது கண்கண்ட தெய்வம் !"  என்றும் எழுதி இருந்தார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 1, 2020

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு


ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விருப்பவில்லை.
என் தோழர்களைக் காண்பித்து, "இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர்  ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. "நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - ஸாந்தாராம் பலவந்த் நாச்னே.

"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக்    கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.".
         - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 30, 2020

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்


பாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள் விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாயி சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார். சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை ( ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ ) சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால் எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். 

"தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்." 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...